கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளின் இளங்குருக்களையும் துறவியரையும் சந்திக்கும் திருத்தந்தை கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளின் இளங்குருக்களையும் துறவியரையும் சந்திக்கும் திருத்தந்தை   (ANSA)

எம்மாவு சீடரைப்போன்று இணைந்து பயணிப்போம் : திருத்தந்தை

ஒன்றித்தல் என்பது திருப்பயணம், உரையாடல், மற்றும் விருப்பத்தைக் குறிக்கின்றது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நம்பிக்கையாளர்களாக நாம் எவ்வளவு அதிகமாக ஒன்றிணைந்து பயணிக்கின்றோமோ அவ்வளவு அதிகமாக கிறிஸ்துவுடன் நாம் இணைந்திருப்போம் என்று நம்ப வேண்டும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

பிப்ரவரி 23, இவ்வியாழனன்று, கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளின் இளங்குருக்களையும் துறவியரையும் திருப்பீடத்தில் சந்தித்தவேளை இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிணைந்து பயணிப்பது என்பது ஒரு பொதுவான திருப்பயணம் என்றும் கூறினார்.

உயிர்த்த ஆண்டவரோடு எம்மாவு சீடர்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றிப்பின் அடையாளமாக அமைவதால், இதனை மையாயப்படுத்தி தனது சிந்தனைகளை பகிர்ந்துகொள்ள விரும்புவதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிணைந்து பயணித்தல், உரையாடல், இயேசுவோடு தங்குதல் என மூன்று காரியங்கள் குறித்து விளக்கினார்

ஒன்றிணைந்து பயணித்தல்

முதலாவதாக, எம்மாவு சீடர்கள் செய்ததுபோன்று, உயிர்த்த இயேசுவுடன் ஒன்றிணைந்து நடந்தால், அவரும் நம்முடன் உடன் நடந்து, நம்மை ஊக்குவித்து, நமது பயணத்தை நிறைவடைய செய்வார் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகையதொரு பயணமே திருப்பயணமாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார்.

எம்மாவு சீடர்களிடம் காணப்பட்ட சோகமும், வருத்தமும், ஏமாற்றமும், இயேசு யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்களை மறைத்திருந்தன என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், அதுபோலவே ஊக்கமின்மையும், சுயநல செயல்பாடுகளும் கிறிஸ்தவர்களை ஒன்றுபடுத்துவதைப் பார்ப்பதிலிருந்தும், அவர்களை ஒன்றிணைப்பவரை அங்கீகரிப்பதிலிருந்தும் தடுக்கிறது என்றும் எடுத்துரைத்தார்.

உரையாடல்

இயேசுவுடனான எம்மாவு சீடர்களின் திருப்பயணம், அவர்களை அவருடன் உரையாடலுக்கு இட்டுச் செல்கிறது, இயேசு, அவர்களின் உரையாசிரியராக மாறுகிறார், அவர்களுடைய உரையாடல்களின் அடிப்படையில், கிறிஸ்து அவர்களின் இதயங்களுடன் பேசுகிறார், அவர்களை மீண்டும் எழுப்புகிறார், மோசேமுதல் இறைவாக்கினர் வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கிக் கூறுவதன் வழியாக அவர்களின் அறிவைத் தெளிவடையச் செய்கின்றார் (காண்க லூக் 24: 27), என்றும் விவரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவர்களிடையேயான உரையாடல் கடவுளுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டது என்பதை இயேசுவுடன் எம்மாவு சீடர்கள் மேற்கொண்ட உரையாடல் நமக்கு எடுத்துக் காட்டுகிறது என்றும்,  மீட்பராகிய இயேசு தம் ஆவியின் ஒளியால் நமக்கு எல்லாவற்றையும் புரியவைக்கின்றார் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை

இயேசுவுடன் தங்குதல்

இயேசுவுடன் நிகழ்ந்த உரையாடல் வழியாக அறிவுத்தெளிவு பெற்ற எம்மாவு சீடர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த இல்லத்திற்குச் செல்லவில்லை, மாறாக, அவர்கள் இயேசுவுடனும் ஒருவருக்கொருவருடனும் தங்கள் தோழமையை நீடிக்க விரும்பினர், அதன் விளைவாக ‘எங்களோடுத் தங்கும்’ என்று அவரை அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர் என்றும் விளக்கினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 February 2023, 14:03