காங்கோ மக்களின் கதைகள் கண்ணீரை வரவழைக்கின்றன
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிப்ரவரி 1, இப்புதனன்று, காங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைநகரான கின்ஷாசாவில் சில தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை.
அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே! மிகவும் நலிந்துபோன மக்களிடத்தில் நீங்கள் இயேசுவைக் காண்பதை நினைத்து நான் பெருமிதம் அடைகின்றேன். இயேசு ஏழைகளிடத்தில் தேடப்பட்டு அன்புகூரப்பட வேண்டும். கிறிஸ்தவர்களாகிய நாம் அவர்களைப் புறக்கணிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சகோதரர் சகோதர்களே, இம்மக்களின் நலன்களுக்காக நீங்கள் உங்களையே முழுமையாக அர்பணித்திருக்கிறீர்கள். நீங்கள் செய்யும் இந்த நற்பணிகள் வியக்கத்தக்கது. ஆனால் அவ்வளவு எளிதானதல்ல. இம்மக்களின் கதைகளைக் கேட்கும்போது அவைகள் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றன.
இது தகுதியான பணியா?
இன்று நான் இரண்டு கேள்விகளை உங்களிடத்தில் கேட்க விரும்புகின்றேன். இது தகுதியானதா என்பதே என் முதல் கேள்வி. அதாவது, நாம் ஆற்றும் இந்நற்பணி உண்மையிலேயே தகுதியானதா? அல்லது இது ஒரு பயனற்ற பணி என்று நம்மை உற்சாகமிழக்க வைக்கிறதா? ஆம், இது உண்மையிலேயே ஒரு தகுதி வாய்ந்த மதிப்புக்குரிய பணிதான். அரசு அதிகாரிகள், ஆயர் பேரவையுடனான அண்மைய ஒப்பந்தங்கள் வழியாக, சமூக மற்றும் பிறரன்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் முயற்சிகளை அங்கீகரித்து மதிப்பளித்திருப்பது ஒரு நல்ல அறிகுறியாகும்.
இம்மக்களுக்குப் பணியாற்றும் அனைவரும், உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம் என்பது அவர்களுக்குப் பணியாற்றுவது என்பதை நினைவில்கொள்ள அழைக்கப்படுகிறீர்கள். அநீதியான அல்லது சமமற்ற பங்கீடே வறுமைக்குக் காரணம். ஆகவே, வளமையிலும் செல்வச் செழிப்பிலும் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்ள முன்வரவேண்டும்.
முன்மாதிரி காட்டுவது
இப்பிறரன்பு பணிகள் எவ்வாறு நிறைவேற்றப்படவேண்டும் என்ற நமது இரண்டாவது கேள்விக்கு வருவோம். முதலாவதாக, பிறரன்பு பணி என்பது ஒரு எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்வதுற்கு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இது வெறுமனே நாம் செய்யும் செயல் மட்டுமல்ல, மாறாக, இது நாம் யார் என்பதன் வெளிப்பாடாக அமைகிறது. இது ஒரு வாழ்க்கை முறை, நற்செய்தியை வெளிப்படுத்தும் ஒரு வழி, அதற்கு நம்பகத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் தேவை. திட்டங்களின் நிதி மற்றும் நிர்வாக மேலாண்மை பற்றி நான் யோசித்து வருகிறேன். ஆனால் திறமையான முறையில் பொருத்தமான சேவைகளை வழங்க வேண்டும் என்பதையே நான் விரும்புகின்றேன்.
தொலைநோக்குப் பார்வை
இரண்டாவதாக, தொலைநோக்குப் பார்வைக் கொண்டிருத்தல். நமது முன்முயற்சிகளும் நல்ல பணிகளும் உடனடித் தேவைகளுக்குப் பதிலளிப்பது மட்டுமல்லாமல், காலப்போக்கில் இவற்றின் நிலைத்தன்மையை நிரூபிப்பதும் அவசியமாகிறது. கத்தோலிக்க நலப்பணிகள் வழங்கிய பெரும் பங்களிப்பை நான் இங்கு குறிப்பிடுகிறேன். இது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைப் போலவே, இந்த நாட்டிலும் மக்களுக்கு நிவாரணத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. தாராள மனப்பான்மை மற்றும் திறன்கள், எப்போதும் தேடும் சரியான மற்றும் புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு உதவுவது சரியானது என்று கூற விழைகிறேன்
வலைதள தொடர்பில் இருப்பது
மூன்றாவதாக, எப்போதும் வலைதள தொடர்பில் இருப்பது மிகவும் அவசியமாகிறது. வலைதள தொடர்பு என்பது, ஒருவரோடொருவர் நிலையான தொடர்பையும், தலத்திருஅவைகள் மற்றும் மாநிலங்களுடன் எப்போதும் அதிக ஒத்துழைப்பையும் கோருகிறது. ஒவ்வொருவரும் அனைத்து ஏழையரின் நலன்களுக்காக மற்ற கிறிஸ்தவ சமூகங்கள் மற்றும் பிற மதங்கள் மற்றும் இங்கிருக்கும் பல மனிதாபிமான அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளனர் என்பதையும் இந்த வலைதள தொடர்பு எடுத்துக்காட்டுகிறது.
அன்பு சகோதரர் சகோதரிகளே, நீங்கள் அனைவரும் சிறந்ததொரு கருவூலம். உங்கள் அனைவருக்கும் எனது ஆசீரை வழங்குகின்றேன்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்