கடவுளின் வாக்குறுதியை எதிரொலிக்க அழைக்கப்படுகிறீர்கள்...

பிரிவினையின் காற்றால் ஒருபோதும் சிதைந்து போகாமல், இரக்கத்தின் கடவுளிடம் நீங்கள் எப்போதும் பணிவாக இருங்கள்: திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 2, இவ்வியாழனன்று,  காங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைநகரான கின்ஷாசாவிலுள்ள காங்கோ புனித மரியன்னை பேராலயத்தில் அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர் மற்றும் அருள்பணித்துவ மாணவர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை.

அன்பு நிறைந்த அருள்பணியாளர்களே, திருத்தொண்டர்களே, அருள்பணித்துவ மாணவரே மற்றும் துறவியரே, ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்த பெருவிழாவில் நான் உங்களோடு இருப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். சிமியோனைப் போலவே, நம் வாழ்வின் இருளை ஒளிர்விக்க இறைவனின் ஒளிக்காக நாம் அனைவரும் காத்திருக்கிறோம்.

சிமியோனைப் போன்று நாமும் இயேசுவை கரத்தில் ஏந்தி அவரை நமது வாழ்வின் மையமாகக் கொள்ளும்போது, ​​நமது பார்வை மாறுகிறது, நம்முடைய எல்லா முயற்சிகள் மற்றும் சிரமங்கள் மத்தியிலும், நாம் அவருடைய ஒளியால் சூழப்பட்டு, அவருடைய ஆவியால் ஆறுதலடைகிறோம், அவருடைய வார்த்தையால் ஊக்குவிக்கப்பட்டு, அவருடைய அன்பில் நிலைத்திருப்பதை உணர்கிறோம்.

பாலைநிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன் (எசா 43:19) என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளை மையப்படுத்தி எனது சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். கடவுள் நமது வாழ்வின் பாலைவனங்களுக்கு மத்தியில் புதிய பாதைகளைத் திறக்கிறார், அருள்பொழிவு செய்யப்பட்டவர்களாக, அர்ப்பணிக்கப்பட்ட துறவியராக இந்த வாக்குறுதியின் அடையாளமாக இருக்கவும், கடவுளின் புனித மக்களின் வரலாற்றில் அதை நிறைவேற்ற உதவவும் நாம் அழைக்கப்படுகிறோம்.

ஆண்டவர் தன்னை இரக்கத்தின் கடவுளாக வெளிப்படுத்துவதுடன், அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்றும் உறுதியளிக்கின்றார். அவர் எப்போதும் நம் அருகில் இருக்கின்றார், துயரங்களின்போது அடைக்கலமாகவும் வலிமையாகவும் நம்முடன் இருக்கின்றார். ஆகவே, அர்ப்பண வாழ்விற்கு அழைக்கப்பட்ட நீங்கள் அனைவரும் கடவுளின் இந்த வாக்குறுதியை துயருறும் அவருடைய மக்களுக்கு வெளிப்படுத்த அழைக்கப்படுகிறீர்கள்.

நம் சகோதரர் சகோதரிகளுக்காக நம் உயிரைக் கொடுக்கவும், ஒவ்வொரு இதயத்தின் காயங்களை குணப்படுத்தும் இயேசுவை அவர்களுக்குக் கொண்டு வரவும் அழைக்கப்பட்டுள்ளோம். இந்த வழியில் நமது தேவ அழைத்தலை வாழ்வதற்கு முற்படும்போது, அதிகமான சோதனைகளையும் சவால்களையும் நாம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். இவற்றில் மூன்றைக் குறித்து மிகவும் சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

ஆன்மிக பலவீனத்தை வெல்வது

முதலில் நாம் ஆன்மிக பலவீனத்திலிருந்து விடுபடவேண்டும். எப்படி விடுபடுவது? நமது அன்றாடப் பணிச்சுமைகளால் மிகவும் சிறிது நேரமே நம்மால் செபத்தில் ஈடுபட முடிகிறது. ஆகவே, முதலில் நமது ஆன்மிக காரியங்களில், அதாவது, திருப்பலிக் கொண்டாட்டம் முதல் கட்டளை செபம் சொல்லுவது வரை நாம் பிரமாணிக்கமாய் இருப்போம். காரணம், இவைகள் திருஅவையோடு இணைந்து நம்மை செபிக்கத் தூண்டுவதால் இதனை விட்டுவிடாதிருப்போம். குறிப்பாக பாவ அறிக்கை செய்வதை விட்டுவிடாதிருப்போம். ஏனென்றால் நாம் எப்போதும் மன்னிக்கப்பட வேண்டும். அதன்பிறகு அதில் பெறும் இறைவனின் இரக்கதைப் பிறரிடத்தில் நாம் காண்பிக்க வேண்டும்.

எனது இரண்டாவது அறிவுரை: இணைந்து செபிக்கும் நேரம் தவிர, இறைவனின் இதயத்தோடு மிகவும் நெருக்கமாக இருக்கும் விதத்தில் தீவிரமாக செபிப்பதற்கு தனிப்பட்ட முறையில் நேரம் ஒதுக்கவேண்டும். இது நீண்ட நேர நற்கருணை ஆராதனையாக இருக்கலாம், அல்லது ஜெபமாலை சொல்வதாக இருக்கலாம். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக நாம் நேசிக்கும் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் நேரமாகக் கூட இருக்கலாம்.  

செபம் கடவுளின் நெருக்கத்தை அனுபவிப்பதற்கான இடத்தை நமக்குள் உருவாக்குகிறது, இதனால் அவருடைய வார்த்தை நமக்கும், நம் வழியாக நாம் சந்திக்கும் அனைவருக்கும் நன்கு பரிச்சயமாகிறது. செபம் இல்லாமல், நாம் நீண்ட தூரம் பயணிக்க முடியாது. இறுதியாக, ஆன்மிக பலவீனத்தை வெல்ல, நம் அன்னை மரியாவை அழைப்பதில் சோர்வடைய வேண்டாம், இயேசுவை பற்றி சிந்திக்கவும் அவரைப் பின்பற்றவும் அன்னை மரியாவிடம் கற்றுக்கொள்வோம்.

உலக இன்பங்களைத் துறப்பது

இரண்டாவது சவால் உலக இன்பங்களைத் துறப்பது. அதாவது, நமக்கென்று ஒரு வசதியான சூழலை உருவாக்கிக் கொண்டு அதில்பெரும் உலக இன்பத்திலிருந்து நாம் விடுபடவேண்டும். காரணம், நமது அழைத்தலின் நோக்கத்தை இது இழகச் செய்கிறது. பெரும்பாலும், வறுமை மற்றும் துன்பத்தின் சூழ்நிலைகளில் உலகியல் ஆபத்து உள்ளது. அதாவது, நமது சொந்த தேவைகளையும் வசதிகளையும் பூர்த்தி செய்வதற்காக நமது பணிப்பொறுப்பை (அதிகாரம்) பயன்படுத்திக் கொள்ள்ளும் ஆசையால் தூண்டப்படலாம்.

நற்செய்திப் பணிக்குப் பதிலாக, நிதிகளை நிர்வகிப்பதிலும், நமக்கென சில இலாபகரமான தொழிலைத் தொடர்வதிலும் நாம் அக்கறை காட்டுகிறோம். ஒரு அருள்பணியாளர் அல்லது துறவியரின் வாழ்க்கையில் இது நிகழும்போது அது இகழ்ச்சிக்குரியதாகிறது. அதற்குப் பதிலாக அவர்கள் நிதானம் மற்றும் உள்மனச் சுதந்திரத்தின் மாதிரியாக இருக்க வேண்டும். ஆகவே, உலக இன்பங்கள் குறித்து மிகவும் கவனமாக இருப்போம்.

ஆழமற்ற ஆன்மிக வாழ்வை அகற்றுவது

மூன்றாவது சவால், ஆழமற்ற ஆன்மிக வாழ்வுக்கு இட்டுச்செல்லும் சோதனையை வெல்வது. கடவுளின் மக்கள் அவருடைய வார்தையைக் கேட்டு ஆறுதல்பெறக் காத்திருப்பதால், நன்கு கற்றறிந்த, நற்செய்தியில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் ஆர்வமுள்ள அருள்பணியாளர்களையும் துறவியரையும் அவர்கள் விரும்புகின்றார்கள். ஆகவே, உருவாக்கப் பணி (formation) என்பது தொடர்பணியாக இருக்க வேண்டும், அதாவது, அது நம் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். இதனை அருள்பணித்துவ மாணவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் சேர்த்தே சொல்கின்றேன். ஆகவே, கடவுளின் அன்பின் சாட்சிகளாக மக்களுக்குப் பணியாற்ற விரும்பினால், இந்த மூன்று சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும், ஏனெனில் இறைபணி என்பது சான்று பகர்வதன் வழியாக வந்தால் மட்டுமே அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நல்ல அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட துறவியாராக இருப்பதற்கு, நல்வார்த்தைகள் மற்றும் நல்நோக்கங்கள் மட்டும் போதாது, மாறாக உங்கள் வாழ்க்கை உங்கள் வார்த்தைகளை விட அர்த்தமுள்ளதாக ஒலிக்கவேண்டும். உங்கள் அனைவருக்கும் சிறப்பாக நன்றி கூறுகின்றேன். ஏனென்றால். இந்த நாட்டின் தெருக்களில் நடந்து, மக்களின் வாழ்க்கையைத் தொட்டு, அவர்களின் காயங்களைக் கட்டும் இயேசுவின் பிரசன்னத்தின் அடையாளங்களாக நீங்கள் இருக்கிறீர்கள்.

ஆகவே, பிரிவினை என்னும் காற்றால் ஒருபோதும் சிதைந்து போகாமல், இரக்கத்தின் கடவுளிடம் நீங்கள் எப்போதும் பணிவாக இருங்கள். நீங்கள் சோர்வடைய வேண்டாம், ஏனென்றால் நீங்கள் எங்களுக்குத் தேவை! நீங்கள் மதிப்புமிக்கவர்கள் மற்றும் முக்கியமானவர்கள். திருஅவையின் பெயரால் இதை நான் உங்களுக்குக் கூறுகின்றேன்.

நீங்கள் எப்பொழுதும் இறைவனின் ஆறுதல் அளிக்கும் பிரசன்னத்தின் வாய்க்கால்களாகவும், நற்செய்தியின் மகிழ்ச்சியான சாட்சிகளாகவும், வன்முறையின் புயல்களுக்கு மத்தியில் அமைதியின் இறைவாக்கினர்களாகவும், அன்பின் சீடர்களாகவும், ஏழைகள் மற்றும் துன்பங்களின் காயங்களைக் கவனிக்க எப்போதும் தயாராக இருப்பீர்களாக! உங்களை ஆசீர்வதிக்கிறேன், உங்களை என் இதயத்தில் சுமக்கிறேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 February 2023, 13:26