வன்முறையால் பாதிக்கப்பட்ட  மக்களைச் சந்திக்கும் திருத்தந்தை வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கும் திருத்தந்தை   (AFP or licensors)

திருஅவை எப்போதும் உங்களுடன் இருக்கின்றது: திருத்தந்தை

கடவுள் இளகிய மனதுடனும் இரக்கத்துடனும் உங்களைப் பார்க்கிறார். கடவுளின் பார்வையில் நீங்கள் விலையேறப் பெற்றவர்கள், மதிப்புமிக்கவர்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 1, இப்புதனன்று,  காங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைநகரான கின்ஷாசாவிலுள்ள திருத்தூதரகத்தில் நாட்டின் கிழக்குப் பகுதியில் போராலும் வன்முறையாலும் பாதிக்கப்பட்டோருக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை.

நாட்டின் கிழக்குப் பகுதியில் வாழ்பவர்களே, நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவதெல்லாம்: நான் உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறேன், உங்கள் கண்ணீர் என் கண்ணீர், உங்கள் வலி என் வலி என்பதே. கடவுள் இளகிய மனதுடனும் இரக்கத்துடனும் உங்களைப் பார்க்கிறார். கடவுளின் பார்வையில் நீங்கள் விலையேறப் பெற்றவர்கள், மதிப்புமிக்கவர்கள். சகோதரர் சகோதரிகளே, திருஅவை எப்போதும் உங்களுடன் இருக்கின்றது. கடவுள் உங்களை அன்புகூர்கிறார். அவர் உங்களை மறக்கவில்லை.

கடவுளின் பெயரால் கண்டிக்கிறேன்

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அமைதி, நீதி, மற்றும், சகோதரத்துவத்திற்காகப் பாடுபடும் அனைவருடனும் இணைந்து, காங்கோ ஜனநாயகக் குடியரசில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வரும் ஆயுத வன்முறைகள், படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், கிராமங்களை அழித்தல் மற்றும் ஆக்கிரமித்தல் மற்றும் வயல்வெளிகள் மற்றும் கால்நடைகளை சூறையாடுதல் ஆகியவற்றை நான் கடவுளின் பெயரால் கண்டிக்கிறேன்.

சகோதரர் சகோதரிகளே, இந்நிலையில் நம்மால் என்ன செய்ய முடியும்?  எங்கே தொடங்குவது? அமைதியை வளர்க்க நாம் செயல்படுகிறோமா? என்று கேள்விகள் எழுப்பும்போது, "இல்லை" என்று இரண்டு வழிகளையும் "ஆம்" என்று சொல்லும் இரண்டு வழிகளையும் இன்று உங்களுக்கு நான் எடுத்துக்காட்ட விரும்புகின்றேன்.

வன்முறை வேண்டாம்

முதலாவதாக, வன்முறை வேண்டாம் என்று சொல்லுவோம். நமது தாய்நாட்டை அன்புகூர்வது என்பது வன்முறையைத் தூண்டுபவர்களுடன் தொடர்பு கொள்ள மறுப்பதைக் குறிக்கிறது. வெறுப்பு மற்றும் வன்முறையைப் பயன்படுத்துவது ஒரு சோகமான பொய். வெறுப்பும் வன்முறையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை, மற்றும், நியாயப்படுத்த முடியாதவை, சகிக்க முடியாதவை, எல்லாவற்றுக்கும் மேலாக இது கிறிஸ்தவர்களுக்கு ஒவ்வாதது என்பதைப் புரிந்துகொள்வோம்.

வன்முறை வேண்டாம் என்று கூறுவது, வன்முறைச் செயல்களைத் தவிர்ப்பது மட்டுமன்று, மாறாக,  வன்முறையின் வேர்களான பேராசை, பொறாமை மற்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, வெறுப்பை முற்றிலுமாக அகற்றவேண்டும் என்பதைக் குறிக்கிறது.

பின்வாங்க வேண்டாம்

இரண்டாவதாக, பின்வாங்கக் கூடாது. வன்முறைக்கு எதிரான உங்களின் செயல்பாடுகளில் பின்வாங்கிவிடாமல் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உங்களையே முழுவதுமாக அர்ப்பணிக்குமாறு கடவுளின் பெயரால், காங்கோ ஜனநாயகக் குடியரசில் வாழும் உங்கள் அனைவரையும் மீண்டும் அழைக்கிறேன்.

ஒப்புரவுக்கு ‘ஆம்’ என்று சொல்லுவோம்

இப்போது அமைதிக்காக ‘ஆம்’ என்று கூறும் இரண்டு வழிகளைக் குறித்துச் சிந்திப்போம்.  

முதலாவதாக, ஒப்புரவுக்கு ‘ஆம்’ என்று சொல்லுவோம். இயேசுவின் காலத்தில் சிலுவை மரமானது துன்புறுத்தப்படுத்தல் மற்றும் மரணத்தின் ஒரு கருவியாக இருந்தது. இருப்பினும், கிறிஸ்துவின் அன்பால் மாற்றப்பட்டு, அது ஒப்புரவுக்கான உலகளாவிய ஒரு வழிமுறையாக, வாழ்வளிக்கும் மரமாக மாறிவிட்டது. ஆகவே, நீங்களும் சிலுவைமரம் போன்று வாழ்வளிக்கும் மரமாக வாழுங்கள் என்றே உங்களுக்கும் நான் கூற விரும்புகின்றேன். மாசுபாட்டை உறிஞ்சி மீண்டும் உயிரளிக்கும் ஆக்ஸிஜனைக் கொடுக்கும் மரங்களைப் போல இருங்கள். உண்மையில், கிறிஸ்தவ இறைநம்பிக்கை என்பது தீமைக்கு எதிராக நன்மையையும், வெறுப்புக்கு எதிராக அன்பையும், பிரிவினைக்கு எதிராக ஒப்புரவையும் வெளிப்படுத்துவதைக் குறிக்கிறது.

நமது இறைநம்பிக்கை என்பது நீதியின் ஒரு புதிய வழிமுறையைக் கொண்டு வருகிறது. அதாவது, இது தண்டிப்பதையும் பழிவாங்கலையும் நிராகரிக்கிறது, அதற்குப் பதிலாக ஒப்புரவைக் கொண்டு வரவும், புதிய மோதல்களைத் தணிக்கவும், மனக்கசப்பை நீக்கவும் மற்றும் மன்னிப்பை வழங்கவும் விரும்புகிறது. ஒப்புரவு என்பது தீமையை வெல்லும் சக்தி வாய்ந்தது என்பதை உணர்வோம்.

நம்பிக்கைக்கு 'ஆம்' சொல்லுவோம்

இறுதியாக, தீர்க்கமான மனதுடன் நம்பிக்கைக்கு (hope) ‘ஆம்’ என்று சொல்லுவோம்.  ஒப்புரவை பழம் தரும் பனை மரம் எனக் கொண்டால், அந்த மரத்தை செழிக்க வைக்கும் நீர் நம்பிக்கை என்று புரிந்துகொவோம். இந்த நம்பிக்கைக்கு ஒரு நீரூற்று உள்ளது, அந்த நீரூற்றுக்கு ஒரு பெயர் இருக்கிறது. ஆம், இயேசுவே அந்த நம்பிக்கை.  இயேசுவே அந்த நம்பிக்கையின் நீரூற்று. தீமை செய்தவர்களுக்கும், அதனை சகித்துக்கொண்டவர்களுக்கும், நம்பிக்கை என்பது இயேசுவில் மீண்டும் மீண்டும் பிறக்கிறது. இந்தத் தேசத்தின் அமைதிக்காக உழைத்து உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூர்ந்து செபிக்கின்றேன். அவர்கள் நம்பிக்கையை விதைத்தவர்கள், அவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது.

பெண்களை மதித்துப் போற்றவோம்

ஒவ்வொரு பெண்ணும் மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும், மாண்புடன் நடத்தப்படவேண்டும் என்று நான் இறைவேண்டல் செய்கின்றேன். பெண்கள் மற்றும் அன்னையர்களுக்கு எதிரான வன்முறை என்பது கடவுளுக்கு எதிரான வன்முறை. ஏனென்றால், அவர் ஒரு பெண்ணிலிருந்து, ஒரு தாயிடமிருந்து, மனுவுரு எடுத்தார்.

ஒப்புரவின் கடவுள் உங்கள் இதயங்களிலும், உங்கள் குடும்பங்களிலும் மற்றும் முழு காங்கோ ஜனநாயகக் குடியரசு மீதும் தனது அமைதியை பொழிவாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 February 2023, 14:43