மறைசாட்சிகள் மைதானத்தில் திருத்தந்தை

கின்ஷாசாவின் லிங்வாலாவில் அமைந்துள்ள பெந்தெகோஸ்து மறைசாட்சிகள் மைதான அரங்கம் 80,000 பேர் அமரும் அளவிற்கு பரந்த இடப்பரப்பைக் கொண்டதாக முக்கியமான பன்னாட்டுக்கூட்டங்கள், விளையாட்டு, மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் இடமாகத் திகழ்கின்றது.

மெரினா ராஜ் -வத்திக்கான்

பிப்ரவரி 2 வியாழன் ஆண்டவரை காணிக்கையாக அர்ப்பணிக்கும் திருநாள் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டோரின் உலக நாளான இன்று காங்கோ குடியரசின் கின்சாசாவில் தனது 40 ஆவது திருத்தூதுப் பயணத்தின் மூன்றாவது நாளைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். உள்ளூர் நேரம் காலை 7 மணிக்கு திருப்பீடத்தூதரகத்தில் தனியாக திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, அங்கிருந்து 2.9  கீ மீட்டர் தூரம் காரில் பயணித்து காங்கோ குடியரசின் இளையோர்களைச் சந்திக்க பெந்தேகோஸ்து மறைசாட்சிகள் மைதானத்திற்கு வந்தார். உள்ளூர் நேரம் காலை 9.15 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 1.45 மணிக்கு மைதானத்தை அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த எண்ணற்ற இளையோர் மத்தியில் திறந்த காரில் வலம் வந்து அவர்களைச் சந்தித்து மகிழ்ந்தார்.

பெந்தெகோஸ்து மறைசாட்சிகள் மைதான அரங்கம்  

கின்ஷாசாவின் லிங்வாலாவில் அமைந்துள்ள பெந்தெகோஸ்து மறைசாட்சிகள் மைதான அரங்கம் 1997 ஆம் ஆண்டு வரை Kamanyola மைதானம் என்றழைக்கப்பட்டு வந்தது., 1988 அக்டோபர் 14 இல் தொடங்கப்பட்டு 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 14, இல் நிறைவடைந்த இம்மைதான அரங்கத்தின் திறப்பு விழா 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாளில் நடைபெற்றது. இம்மைதானத்திற்கு நான்கு அரசியல் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. Jerome Anany, Emmanuel Bamba, Alexander Mahamba e Evariste Kimba என்னும் இவர்கள் நால்வரும், சர்வாதிகாரி மொபுடுவுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, 1966 ஜூன் மாதம் தூக்கிலிடப்பட்டார்கள். 80,000 பேர் அமரும் அளவிற்கு பரந்த இடப்பரப்பைக் கொண்ட இம்மைதானம் முக்கியமான பன்னாட்டுக்கூட்டங்கள், விளையாட்டு, மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தேசிய கால்பந்து அணி, AS Vita, Motema Pembe, ஆகிய அமைப்புக்கள் போட்டிகளை நடத்துகின்றன. எட்டு வழிப்பாதையுடன் அமைக்கப்பட்ட தடகள போட்டிகளும் நடைபெறும் மைதானமாக உள்ளது. அதன் வடிவம் மற்றும் அளவு காரணமாக இது ஆப்ரிக்க கால்பந்தின் பேராலயம் என்றும் கருதப்படுகிறது.

இளையோர் நடுவில் திருத்தந்தை
இளையோர் நடுவில் திருத்தந்தை

பெந்தேகோஸ்து மறைசாட்சிகள் மைதானத்தில் நடைபெறும் இளையோர் மற்றும் மறைக்கல்வியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தை காங்கோ குடியரசு பொதுநிலையினருக்கான ஆயர் பணித்துறையின் தலைவர் பேரருள்திரு Timothée Bodika Mansiya, அவர்கள் திருத்தந்தையை வரவேற்று துவக்கி வைத்தார். இளைஞர் ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்ததைத் தொடர்ந்து, பாரம்பரிய நடனமும், மறைக்கல்வியாளர் ஒருவரின் பகிர்வும் இருந்தது. அதன் பின் திருத்தந்தை வவருகளுக்கு தன் உரையை வழங்கினார் திருத்தந்தையின் உரைசுருக்கத்திற்கு செவிமடுப்போம்.

திருத்தந்தையின் உரைக்குப் பின் அனைவரும் ஒன்றிணைந்து இயேசு கற்பித்த செபத்தை செபித்த பின் திருத்தந்தை தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.  இளையோர் சிலர் திருத்தந்தைக்கு பரிசுப் பொருட்களை வழங்க இறுதிப்பாடலுடன் கூட்டம் நிறைவுற்றது. அதன்பின் காரில் திருப்பீடத்தூதரம் வந்த திருத்தந்தை காங்கோ குடியரசின் முதல் அரசுத்தலைவர். திரு ஜீன்-மைக்கேல் சாமா லுகொண்டே கியெங்கே Jean-Michel Sama Lukonde Kyenge அவர்களை குடும்பத்தாருடன் சந்தித்தார். 1977 ஆம் ஆண்டு  பாரிஸில் பிறந்த இவர், பொறியியல் பட்டம் பெற்றவர், கடினமாக உழைத்து நேரடியாக அரசியலில் இணைந்தவர். Avenir du Congo, என்னும் கட்சியின் உறுப்பினர்களில் ஒருவராகி, தேசிய சட்டசபை பிரதிநிதியானார். அதன்பின் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்தார். 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  அரசுத்தலைவர்  Tshisekedi அவர்களால் நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.மதிய உணவு அருந்தி சற்று இளைப்பாறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 February 2023, 14:59