திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

அமைதிக்கான திருத்தூதுப்பயணம் - முதல்நாள் நிகழ்வுகள்

காங்கோ குடியரசு திருப்பீடத்தூதரும் Vittoriana உயர் மறைமாவட்டப் பேராயரான Ettore Balestrero மற்றும் காங்கோ அரசுத்தூதர் Jean-Pierre Hamuli Mupenda ஆகியோர் திருத்தந்தையை கின்சாசா N’djili விமானநிலையத்தில் வரவேற்றனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நம் வாழ்க்கை தேடலில் நாம் தேடி கண்டடைய வேண்டிய மிகப் பெரிய புதையல் அமைதி. அகஅமைதி எனப்படும் உள்மன அமைதி, புறஅமைதி எனப்படும் செயல் அமைதி. மனஅமைதி இல்லாததால் வாழ்வில் எண்ணற்ற சிக்கல்களை சந்திப்பவர்கள் ஏராளம். செய்யும் வேலைகளில் கவனம் சிதறும். தாறுமாறாக தாராளமாக தவறுகள் பிறக்கும் பிரச்சனைகள் ஏற்படும். அமைதி என்பது மனதை உருக்கி, மற்றவர்களின் வாழ்விலும் மரியாதை செலுத்தி, பிறருக்கு தீங்கு ஏற்படுத்தும் காரணங்களை தவிர்த்தலாகும். மற்றவர்களின் வாழ்க்கையும் நமது வாழ்க்கையைப் போலவே புனிதமானது என்ற அணுகுமுறையோடு மற்றவர்களையும் மதித்து வாழ உதவுவது. இத்தகைய வலிமை வாய்ந்த அமைதியை  இழந்து தவிக்கும் மக்களுக்கு அமைதியின் ஆற்றலை வழங்க திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சிறப்பு விருந்தினர்கள் பகுதியை அரசுத்தலைவருடன் அடைந்த திருத்தந்தைக்கு அரசுஅதிகாரிகள், மற்றும் திருஅவைத்தலைவர்கள் ஒவ்வொருவரும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டபின், அங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்கு காரில் பயணமானார். Palais de la Nation என அழைக்கப்படும் மாளிகையை திருத்தந்தை உள்ளூர் நேரம் மாலை 4.30 மணிக்கு வந்தடைந்தார். அரசு அதிகாரிகள், சமுதாயத் தலைவர்கள், அரசியல் தூதுவர்கள் அடங்கிய குழுவைச் சந்தித்த திருத்தந்தைக்கு அரச மரியாதையுடன் Palais de la Nation மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. உள்ளூர் நேரம் மாலை 4.30 மணிக்கு, அதாவது, இந்திய இலங்கை நேரம் மாலை 9.00 மணிக்கு தொடங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து திருத்தந்தை அரசுத்தலைவருடன் உரையாடினார். அரசுத்தலைவரின் குடும்பத்தார் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பின்னர் திருத்தந்தை அவர்கள் நினைவுப் பதக்கம் ஒன்றினை அன்பளிப்பாக அரசுத்தலைவருக்கு அளித்தார்.

திருத்தந்தைக்கு அளிக்கப்பட்ட அரசு மரியாதையின் போது
திருத்தந்தைக்கு அளிக்கப்பட்ட அரசு மரியாதையின் போது

நினைவுப் பதக்கம்

திருத்தந்தையின் பெயர் மற்றும் திருத்தூதுப் பயணத்தின் ஆண்டுகள் இலத்தின் மொழியில் வட்டவடிவ அப்பதக்கத்தின் வெளிய்ப்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு அப்பதக்கத்தின் உள்ளே சிலுவைச் சின்னத்தின் மேலே,  அமைதியின் சின்னமாம் புறா, போர்கள், தொற்றுநோய்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளால் துன்புறுத்தப்பட்ட ஆப்ரிக்க நிலத்தின் மீது திருத்தந்தையின் ஆசீரைப் பரப்பும் விதமாக வட்டமிடுவது போலும், வலது பக்கத்தில் காங்கோ குடியரசின் தேசிய விலங்கான ஓகாபி, வீடுகளுக்கு அருகில் உள்ள புல்வெளிப் பகுதியில் மேய்வது போலவும், இடதுபக்கத்தில் பூர்வீக இனமக்கள் உள்ளூர் விலங்கினங்களுடன் அமைதியான சகவாழ்வு மனப்பான்மையுடன் வாழ்ந்து  பலுகிப் பெருகியுள்ளது போலவும், கீழே, ஒரு படகில் சிறுவன் ஒருவன் தென்சூடானைக் கடக்கும் வெள்ளை நைல் நதியில் பயணிப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதைகளை உருவாக்கி, பழைய பாதைகளை மீளுருவாக்கம் செய்து, அதன் எல்லையில் உள்ள கரைகளை செழுமையாக்கும் வாழ்க்கை நதியின் உருவகமாகவும்,  ஒவ்வொரு பங்களிப்பும் முழுமையான  இன்றியமையாத வளத்தை பிரதிபலித்து,  நம்பிக்கையான ஒற்றுமையின் இயக்கத்தை ஊக்குவிக்கிறது என்பதாகவும், நீதி, சுதந்திரம் மற்றும் செழிப்பின் அடையாளமாக திகழ்கின்றது என்பதன் அடிப்படையிலும் இவ்வுருவங்கள் அப்பதக்கத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 February 2023, 14:03