தண்ணீர் பிடிக்கும் சிறுவன் தண்ணீர் பிடிக்கும் சிறுவன்   (ANSA)

தண்ணீரின் அவசியம் உணர்ந்து அதைப் பாதுகாப்போம் : திருத்தந்தை

தண்ணீர் குறித்த பிரான்சிஸ் அசிசியாரின் எளிய வார்த்தைகளில் படைப்பின் அழகையும், அதைப் பராமரிப்பதிலுள்ள சவால்கள் பற்றிய விழிப்புணர்வையும் உணர்கிறோம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தண்ணீரை வீணாக்கவோ, முறைகேடாகப் பயன்படுத்தவோ அல்லது போருக்கு ஒரு காரணமாக எடுத்துக்காட்டவோ கூடாது என்றும், தண்ணீர் நமது நலனுக்காகவும் எதிர்கால தலைமுறையினருக்காகவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 22, இப்புதனன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய புதன் பொதுமறைக்கல்வி உரைக்குப் பின்பு, இன்று கொண்டாப்படும் உலகத் தண்ணீர் தினத்தை நினைவுகூர்ந்து இவ்வாறு திருப்பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

"மிகவும் பயனுள்ளதும், தூய்மையானதும், விலைமதிப்பற்றதுமான இந்தத் தண்ணீருக்காக, ஆண்டவரே, உம்மைப் போற்றிப் புகழ்கின்றேன்" என்ற புனித பிரான்சிஸ் அசிசியாரின் வார்த்தைகள் தனது நினைவுக்கு வருவதாகக கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த எளிய வார்த்தைகளில் படைப்பின் அழகையும், அதைப் பராமரிப்பதிலுள்ள சவால்கள் பற்றிய விழிப்புணர்வையும் உணர்கிறோம் என்றும் கூறினார்.

இந்த நாள்களில் ஐக்கிய நாடுகள் அவையின் இரண்டாவது தண்ணீர் மாநாடு நியூயார்க்கில் நடைபெறுகிறது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாநாடு வெற்றியடைய தான் இறைவேண்டல் செய்வதாகவும், இந்த முக்கியமான நிகழ்வு, தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுபவர்களுக்கு ஆதரவாகவும், அதனைப் பாதுகாக்கும் முதன்மையான வழிகளை விரைவுபடுத்தும் முயற்சியாகவும் அமையும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 March 2023, 13:37