அயதுல்லா அலி அல்-சிஸ்தானியுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அயதுல்லா அலி அல்-சிஸ்தானியுடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

அனைவருடனும் உடன்பிறந்த உறவை ஊக்குவிப்போம் : திருத்தந்தை

இன்றைய சவால்களுக்கு உறுதியான பதிலளிப்பாக, மனித குடும்பம் உடன்பிறந்த உறவையும் ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொள்ளும் உணர்வையும் மீண்டும் கண்டுபிடிப்பது அவசியம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் போரால் பாதிக்கப்பட்டுள்ள உலகில் உண்மை மற்றும் அன்பின் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச்14, இச்செவ்வாயன்று, ஈராக் ஷியாக்களின் ஆன்மிகத் தலைவரான பெரிய அயதுல்லா அலி அல்-சிஸ்தானிக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கிற்குத் தான் சென்றபோது  அங்கு நிகழ்ந்த பயனுள்ள சந்திப்பையும் அக்கடிதத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

இன்றைய சவால்களுக்கு உறுதியான வழியில் நம்பிக்கையாளர்களுக்கு உடன்பிறந்த உறவை வளர்க்க ஊக்குவிக்கிறார் என்று அல்-சிஸ்தானியைப் பாராட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கான அவரது அர்ப்பணிப்பு, வாழ்க்கையின் புனிதத்தன்மை மற்றும் ஈராக் மக்களின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தைப் பாதுகாப்பதற்காக அவருக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.

ஈராக்கின் சமீபத்திய வரலாறு நமக்குக் கற்பிப்பது போல, ஒருவருக்கொருவர் மரியாதையை மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக மனிதகுலத்தின் நன்மைக்குப் பங்களிக்கும் அந்த ஒற்றுமையை வளர்ப்பதற்கு வெவ்வேறு மதங்களின் நம்பிக்கையாளர்களிடையே ஒத்துழைப்பும் நட்பும் இன்றியமையாதது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் பிரான்சிஸ்.

நம்பிக்கை அடிப்படையிலான சமூகங்கள் உறவின் சிறப்புமிக்க இடமாகவும், அமைதியான சகவாழ்வின் அடையாளமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இன்றைய சவால்களுக்கு உறுதியான பதிலளிப்பாக, மனித குடும்பம் சகோதரத்துவ உறவையும் ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொள்ளும் உணர்வையும் மீண்டும் கண்டுபிடிப்பது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

இவ்விதத்தில், ஒவ்வொரு நபரின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கும் அரசியல் நடவடிக்கைகளை ஊக்குவித்து, நீதி மற்றும் அமைதியின் அடிப்படையிலான  ஒரு கலாச்சாரத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசுப் பொறுப்பில் உள்ளவர்களை ஊக்குவிப்பது மதத் தலைவர்களின் கடமை என்றும் அக்கடிதத்தில்எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 March 2023, 13:52