கிரீஸ் இரயில் விபத்தில் இறந்தவர்களுக்குத் திருத்தந்தை இரங்கல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கிரீஸ் நாட்டில் நிகழ்ந்த இரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 28, இச்செவ்வாய் இரவு கிரேக்க நகரமான லாரிசாவிற்கு அருகிலுள்ள டெம்பி பள்ளத்தாக்கில் இரண்டு இரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், குறைந்தது 36 பேர் உயிரிழந்ததுடன், 85க்கும் மேற்பட்டோர் காயமடைந்த வேளை, இந்த இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்விபத்தில் இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு இறைவன் நிறையமைதியை அருளவும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து துயருறும் அவர்தம் குடுப்பதாருக்கு இறைவேண்டல் செய்வதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் இறைவன் பாதுகாப்பையும் மனவுறுதியையும் தனது உடனிருப்பையும் தருவாராக என்றும், இந்நேரத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் தனது ஆசீரை வழங்குவதாகவும் அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையெழுத்திட்டுள்ள இவ்விரங்கல் செய்தியானது Syros-இன் ஆயரும் கிரீக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவருமான Petros Stefanou அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்