திருத்தந்தையின் ஏப்ரல் மாத நிகழ்வுகள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஏப்ரல் மாதத்தில் திருஅவை சிறப்பிக்கும் புனித வாரம் மற்றும் உயிர்ப்பு ஞாயிறுக் கொண்டாட்டங்களில் திருத்தந்தையின் நிகழ்வுகள் குறித்த பாப்பிறை நாள்காட்டியை அறிவித்துள்ளார் திருப்பீடத்தின் திருவழிபாட்டுக்கான பொறுப்பாளர் பேரருள்திரு Diego Ravelli.
புனித வாரம் மற்றும் உயிர்ப்புப் பெருவிழாவின் துவக்கமான குருத்தோலை ஞாயிறு வழிபாட்டை ஏப்ரல் 02 ஞாயிறன்று, காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், குருத்தோலை பவனி மற்றும் ஆண்டவரின் திருப்பாடுகள் திருப்பலியையும் நிறைவேற்ற உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் ஏப்ரல் 06, புனித வியாழனன்று காலை 9.30 மணிக்கு, புனித எண்ணெய் மந்திரிக்கும் திருப்பலியையும், ஏப்ரல் 07 புனித வெள்ளியன்று மாலை 5 மணிக்கு, ஆண்டவரின் திருப்பாடுகள் திருவழிபாட்டையும் நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்று இரவு 9.15 மணிக்கு உரோம் கொலோசேயத்தில், சிலுவைப்பாதை பக்திமுயற்சியையும் தலைமையேற்று நடத்துவார்.
ஏப்ரல் 08, புனித சனிக்கிழமையன்று இரவு 7.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில், பாஸ்கா திருவிழிப்பு திருவழிபாடு, ஏப்ரல் 09, உயிர்ப்பு ஞாயிறு காலை பத்து மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருப்பலி, பகல் 12 மணிக்கு, வத்திக்கான் பெருங்கோவில் வெளிப்புறமேல்மாடத்தில் ஊருக்கும் உலகுக்கும் வழங்கும் ஊர்பி எத் ஓர்பி செய்தி மற்றும் சிறப்புஆசீர் ஆகிய நிகழ்வுகளையும் நிறைவேற்ற உள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், ஏப்ரல் மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் ஹங்கேரிக்கு திருத்தூதுப் பயணத்தையும் மேற்கொள்ள இருக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்