திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

ஞானத்தின் இருப்பிடமான முதியோர் எப்போதும் உதவுகிறார்கள்

திருத்தந்தை - ஒன்றைப் பற்றிக்கொள்ளலாம் என நினைக்கும்போதே அது நேற்றாகிவிடுகிறது, ஏனெனில் எல்லாமே ஓர் அசுரவேகத்தில் சென்றுகொண்டிருக்கின்றது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தன் வாழ்வில் தனக்கு மிகவும் பிடித்தமான தருணம், 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த தாத்தா பாட்டிகளை தூய பேதுரு வளாகத்தில் சந்தித்ததேயாகும் என தன் பத்தாண்டு பாப்பிறைப் பணிநிறைவையொட்டி வத்திக்கானின் podcast எனப்படும் கேட்பொலிக் கோப்புக்கு அளித்த செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக முதியோருடன் தன் சந்திப்பு, தன் வாழ்வின் மிக முக்கிய தருணம் என்பதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, தான் காண விரும்பாத ஒன்று என்றால் அது போர்களில் சிறார் இறப்பதே என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்வேறு சந்திப்புகள், பயணங்கள், முகங்கள் என ஒருவித பதட்ட நிலையிலேயே இந்த ஆண்டுகள் இருந்தன எனக் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றை பற்றிக்கொள்ளலாம் என நினைக்கும்போதே அது நேற்றாகிவிடுகிறது, ஏனெனில் எல்லாமே ஓர் அசுரவேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது என மேலும் தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டில் உலகின் தாத்தா பாட்டிகளை வத்திக்கானில் சந்தித்ததை மிக மகிழ்ச்சியான தருணமாகக் குறிப்பிட்ட திருத்தந்தை, முதியோர் எப்போதும் ஞானத்தின் இருப்பிடங்கள், அவர்கள் தனக்கு எப்போதும் உதவுகிறார்கள் எனவும் எடுத்துரைத்துள்ளார்.

இன்றைய போர்கள் பற்றியும் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரிந்து இடம்பெறும் ஒரு மூன்றாம் உலகப்போரின் காலத்தில் தன் பாப்பிறைப் பணி இடம்பெறும் என தான் துவக்கத்தில் நினைக்கவில்லை எனக் கூறி போர்களுக்குப் பின்னால் போர்க்கருவிகளின் தொழிற்சாலைகள் உள்ளன என்ற கவலையையும் தெரிவித்துள்ளார்.

இந்த பத்தாண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் தனக்கு விருப்பமானதெல்லாம், உலகின் அமைதி, ஏனெனில் உடன்பிறந்த உணர்வு நிலை என்பது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது புன்னகையுடன், என தன் போட்காஸ்ட் செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 March 2023, 15:01