வருங்காலத் தலைமுறைக்காக கடலைப் பாதுகாக்கும் கடமை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பானமா நாட்டில் இடம்பெறும், “நம் பெருங்கடல்“ என்ற கருத்தரங்கிற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வருங்காலத் தலைமுறைகளுக்கு பயன்தரும் வகையில் அனைத்து அரசுகளும் பெருங்கடலை காப்பதில் கவனம் செலுத்தவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார்.
நாம் நமது பெருங்கடலைப் பாதுகாப்பதில் நம் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பானமாவில் மார்ச் 2 மற்றும் 3 தேதிகளில் இடம்பெற்ற எட்டாவது உலக பெருங்கடல் குறித்த கருத்தரங்கிற்கு அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் செய்தி, திங்களன்று திருப்பீடத்தால் வெளியிடப்பட்டது.
நம் பெருங்கடல் என்று நாம் கூறும்போது, நம் மனதில், தாழ்ச்சி, நன்றி மற்றும் வியப்புப் பிறக்க வேண்டும் என தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடற்கரையில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து மனிதகுலத்திற்கும் கடல்கள் ஆற்றும் சேவை குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார்.
அனைவருக்கும் பொதுவான தலைமுறைச் சொத்தாகிய கடல், இறைவன் வழங்கிய மிகப்பெரும் கொடை எனவும், அதனை பாதுகாத்து நம் வருங்காலத் தலைமுறையினருக்கு வழங்க வேண்டியது நம் கடமை எனவும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மாசுபடுதல், அமிலம் கலத்தல், சட்டவிரோத மீன்பிடித்தல், கடற்கரைகளில் அபாயகர தொழிற்சாலை அமைத்தல் என்ற அச்சுறுத்தல்களை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அகதிகள் கடல் விபத்துக்களில் உயிரிழப்பது குறித்த ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்