Clevelandன் புனித மரியன்னை குருத்துவ பயிற்சி கல்லூரி நிர்வாகியுடன் திருத்தந்தை பிரான்சிஸ் Clevelandன் புனித மரியன்னை குருத்துவ பயிற்சி கல்லூரி நிர்வாகியுடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

கடவுளின் வாக்குறுதிகளை கொடையாகப் பெற்றுள்ளோம் நாம்

திருத்தந்தை : கடவுளுக்கு செவிமடுத்து, நம் சகோதரர்களோடு ஒன்றிணைந்து நடக்கும்போது, சான்று பகர்தலுக்குரிய கனிகளை அது தருகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஓஹியோ மாநில Clevelandன் புனித மரியன்னை குருத்துவ பயிற்சி கல்லூரி தன் 175வது ஆண்டை நிறைவுச் செய்வதை முன்னிட்டு  அக்குருமடத்தின் மாணவர்கள், அருள்பணியாளர்கள் மற்றும்  நிர்வாகத்தினரை மார்ச் 6ஆம் தேதி திங்கள்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையொன்று வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக ஆயர் மாமன்றத்தின் ஒன்றிணைந்து நடைபோடுதல் என்ற கருத்தின் மூன்று விடயங்களை அவர்களுடன் பகிர விரும்புவதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் குரலுக்கு செவிமடுத்தல், ஒன்றிணைந்து நடத்தல் மற்றும் சான்று பகர்தல் என்பவை குறித்து விளக்கமளித்தார்.

நம்மால் எதையும் செய்யமுடியாது, இறைவனே அனைத்தையும் ஆற்றவல்லவர் என்ற அடிப்படையை உணர்ந்தவர்களாக, நம் வாழ்வில் அவருக்கு இடமளித்து, அவர் வார்த்தையை தியானித்து அதன் ஒளியில் நம் ஆன்மீக வாழ்வை வழிநடத்துவோம் என்ற திருத்தந்தை, மகிழ்ச்சியுடனும் நம்பகத்தன்மையுடனும் இறைவார்த்தையை எடுத்துரைக்க இந்த ஆன்மீக வாழ்வு உதவும் என எடுத்துரைத்தார்.

ஆயர் மாமன்றம் முன்வைக்கும் ஒன்றிணைந்து நடைபோடுதல் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை, குருத்துவப் பயிற்சிக்காலம் என்பது உடன்பிறந்த ஒன்றிப்பின் உணர்வை ஆழப்படுத்தும் காலமாக இருக்கட்டும் என அழைப்பு விடுத்தார்.

கடவுளின் வாக்குறுதிகளை சலுகையாக அல்ல, மாறாக, கொடையாகப் பெற்றுள்ள நாம் கிறிஸ்துவின் உடலை ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து கட்டியெழுப்ப அழைப்புப் பெற்றுள்ளோம் என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

சான்று பகர்தல் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளுக்கு செவிமடுத்து, நம் சகோதரர்களோடு ஒன்றிணைந்து நடக்கும்போது, சான்று பகர்தலுக்குரிய கனிகளை அது தருகிறது எனவும், கடவுள் என்றும் நம்முடன் இருக்கிறார் என்பதை, அருள்பணியாளர்களின் பேரார்வம், தாராளமனப்பான்மை, பணி அர்ப்பணம் ஆகியவை வழியாக நாம் உலகுக்கு எடுத்துக்காட்ட முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.

திருஅவையின் ஒன்றிணைந்த பயணத்திற்கும், அருள்பணியாளரின் திருநிலைப்பாட்டிற்கும், கடவுளுக்கு செவிமடுத்தலும், மற்றவர்களுடன் ஒன்றிணைந்து நடத்தலும், சான்று பகர்தலும் இன்றியமையாதவை என எடுத்துரைத்து, Clevelandன் புனித மரியன்னை குருத்துவ பயிற்சி கல்லூரியின் அங்கத்தினர்களுக்கு தன் உரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2023, 14:24