தொழில் நுட்பம் என்பது மனிதனை மையம் கொண்டதாக வேண்டும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான திருப்பீடத்துறையினால் ஏற்பாடு செய்யப்பட்டு தொழில்நுட்ப வல்லுனர்கள், நன்னெறியாளர்கள், இறையியல் வல்லுனர்கள் மற்றும் திருப்பீட உயர்அதிகாரிகளுடன் இடம்பெற்ற மினர்வா கலந்துரையாடலில் பங்குபெற்றவர்களை மார்ச் 27, திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நன்னெறிகள் மற்றும் பொறுப்புணர்வுடன் தேர்வு செய்யப்படுபவைகளின் கனியே தொழில்நுட்ப வளர்ச்சியாக இருக்கவேண்டும் என உரைத்த திருத்தந்தை, ஒரு மனிதனின் மதிப்பு என்பது, முன்சார்பு எண்ணங்களுடன் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களால் நிர்ணயிக்கப்பட முடியாதது என எடுத்துரைத்தார்.
நன்னெறி, அறிவியல், கலை, வாழ்வின் அர்த்தம் போன்றவை குறித்த அடிப்படைக் கேள்விகளுக்கு, மத நம்பிக்கையாளர்களுக்கும் மத நம்பிக்கையற்றவர்களுக்கும் இடையே இடம்பெறும் கலந்துரையாடல்கள் அமைதியை கட்டியெழுப்புவதற்கும், மனித குல ஒன்றிணைந்த வளர்ச்சிக்கும் பயன்தரவல்லவை என தான் உறுதியாக நம்புவதாகவும் கூறினார் திருத்தந்தை.
தொழில்நுட்பம் என்பது மனிதனை மையமாகக் கொண்டதாகவும், அவனுக்குப் பயன்தருவதாகவும் இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதகுல மாண்பை முன்னேற்றும் நோக்கத்தில் ஒன்றிணைந்த, அனைவரையும் உள்ளடக்கிய கலந்துரையாடல்கள் அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.
இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றமும் சரிநிகரற்ற நிலைகளும், சமுதாய பொருளாதார தீர்மானங்களில் இரக்கத்தை உள்ளடக்குதல், அனைவரையும் உள்ளடக்கிய கலந்துரையாடல்களில் பன்முகத்தன்மையை வளமையாக நோக்குதல் போன்றவை குறித்தும் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்