மதப்பணிகளுக்கான நிறுவனம் IORக்கான புதிய விதிகள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
வத்திக்கான் வங்கி என பொதுவாக அழைக்கப்படும் மதப்பணிகளுக்கான நிறுவனம் IOR க்கான புதிய சில நடைமுறை விதிகளை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புதிய அப்போஸ்தலிக்க அமைப்புமுறைச் சட்டமான Praedicate Evangeliumன் வழியில் இந்த புதிய விதிகளை அறிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், IORன் நிர்வாக அமைப்புமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒரே வேலையை பல்வேறுத் துறைகள் செய்வதிலிருந்து இது விலக்கு அளிக்கும் எனவும், நிர்வாகத்தை ஒரு குழுவிலிருந்து தற்போது ஒரே இயக்குனரின் கீழ் கொண்டுவரும் எனவும் தெரிவித்துள்ளார்.
மதப்பணிகளுக்கான இந்நிறுவனத்தின் வழிகாட்டு விதிகள் தற்போது நான்கு ஆண்டுகளுக்குப்பின் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, சிலவேளைகளில் அதிகபட்சமாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் எனவும் இப்புதிய விதி கூறுகிறது.
ஐந்தாண்டிற்கு ஒருமுறை நிர்வாக விதிகளை புதுப்பித்தல், மற்றும் IOR அலுவலக பொறுப்பிலுள்ளோரின் பங்கும் பொறுப்புணர்வுகளும் குறித்து இரு மாற்றங்களைக் கொணர்ந்துள்ளன திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் 7ஆம் தேதி வெளியிட்ட புது விதிகள்.
IORன் பொது இயக்குனர் தொடர்ந்து இதன் கண்காணிப்புக் குழுவால் நியமிக்கப்பட்டு கர்தினால்கள் அவையால் அங்கீகரிக்கப்படும் நிலை தொடரும் என்கின்றபோதிலும், மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டு, அதிலிருந்து பொது இயக்குனர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும், அவரின் பதவிக்காலம் கால வரையறையற்றதாகவோ, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ இருக்கும் எனவும் இப்புதிய விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்