Fratelli Oblati  சபையினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் Fratelli Oblati சபையினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

உடன்பிறந்த உறவே உறுதியான வாழ்க்கை வடிவம் – திருத்தந்தை

நற்செய்தியின் அடையாளமாகத் திகழும் அர்ப்பணிக்கப்பட்டவர்கள் அனைவரும், ஆளுமை, தகுதி மற்றும் திறமை கொண்டு நிலையான வடிவத்துடன் திகழ்ந்தாலும், பொதுவான மற்றும் தகுதியான பண்பாக அவர்களின் உடன்பிறந்த உறவு இருக்கின்றது

மெரினா ராஜ் – வத்திக்கான்

அர்ப்பணிக்கப்பட்ட சகோதரர்கள் செய்யும் செயல்கள் அவர்கள் வழி நடத்தும் அமைப்புகள் செயல்பாடுகள் அனைத்தும் நல்லவையாக அத்தியாவசியமானவையாக இருந்தாலும் உடன்பிறந்த உறவுடன் அவர்கள் ஒன்றித்து வாழ்வது உறுதியான வாழ்க்கை வடிவம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 14 வெள்ளிக்கிழமை மிலான் மறைமாவட்டத்தில் பணிபுரியும் Fratelli Oblati என்னும் துறவறசபை மண்டலத் தலைவர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ப்பணிக்கப்பட்ட சகோதரர்களை சந்திப்பது விலைமதிப்பற்றது என்றும் கூறினார்.

நற்செய்தியின் அடையாளமாகத் திகழும் அர்ப்பணிக்கப்பட்டவர்கள் அனைவரும், ஆளுமை, தகுதி மற்றும்  திறமை கொண்டு நிலையான வடிவத்துடன் திகழ்ந்தாலும், பொதுவான மற்றும் தகுதியான பண்பாக அவர்களின் உடன்பிறந்த உறவு இருக்கின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு மனிதனுக்கும் உலகளாவிய சகோதரனாக மனித உடன்பிறந்த உறவுடன் வாழ்ந்த இயேசுவைப் போல துறவறாத்தார் வாழ்வதால் உள்ளார்ந்த மகிழ்ச்சி பெற்று விளங்குகிறார்கள் என்றும், Oblati சபை சகோதரர்களாக இருப்பதால் பணியில் மகிழ்வு கொண்டு வாழ்கின்றார்கள் என்றும் அவர்களை வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தை பிரான்சிஸ்

கடவுள் வடிவில் விளங்கிய இயேசு மனிதனாகப் பிறந்து நாம் பின்பற்ற வேண்டிய பாதையைக் காட்டியுள்ளார் என்றும், அப்பாதையின்படி வாழ தூய ஆவியானவர் ஒவ்வொருவருக்கும் உள்ளார்ந்த மகிழ்ச்சியைத் தருகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய அன்னை தெரசா சேவை செய்வதில் மகிழ்ச்சி கொண்டவர், அதைப் பற்றி அதிகமாக எடுத்துரைத்தவர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியா எலிசபெத்தை சந்திக்க சென்றபோது விளம்பரப்படுத்தவில்லை, மாறாக உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன் சென்றார் என்றும் அம்மகிழ்ச்சியே கடவுள் விரும்பும் பணியின் பேரின்பம் என்றும் எடுத்துரைத்தார்.

நாம் செய்யும் செயலுக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்றும், காணாமல் போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களுக்காக இயேசு தன் உயிரைக் கொடுத்து உலகை மீட்டது போல, நாமும் நமது பணியில் உண்மையுள்ளவர்களாக திகழ்ந்து உலகிற்குப் பணியாற்ற வேண்டும் என்றும் அத்துறவு சபையினருக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 April 2023, 13:24