திருஅவை, பிறரன்பு மொழி பேசவேண்டும்! : திருத்தந்தை பிரான்சிஸ்

பசித்திருப்போருக்கு உணவை வழங்க நீங்கள் முயற்சி செய்யும் போதெல்லாம், இறைவன் உங்களுக்குள் மகிழ்ச்சியை மலரச் செய்து, நீங்கள் கொடுக்கும் அன்பின் நறுமணத்தால் உங்கள் வாழ்க்கையை நிரப்புகிறார் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஏப்ரல் 29, சனிக்கிழமையன்று, ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரிலுள்ள புனித எலிசபெத் ஆலயத்தில் ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை சந்தித்த வேளை, வழங்கிய அருளுரை.

அன்பான சகோதரர் சகோதரிகளே! தேவையில் இருப்போரை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவர்கள் நற்செய்தியின் இதயத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் இயேசு ஏழைகளுக்கு நற்செய்தியைக் கொண்டு வரவே (காண்க. லூக் 4:18) நம்மிடையே வந்தார். உண்மையான நம்பிக்கை சவால் நிறைந்தது, அது ஆபத்துக்களை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்கும், அது ஏழைகளை சந்திக்கவும், நம் வாழ்வின் சாட்சியத்தால், பிறரன்பு மொழியைப் பேசவும் (The language of charity) நம்மை வழிநடத்துகிறது.

பிறரன்பு மொழி (The language of charity)

ஹங்கேரிய மக்கள் மிகுந்த பக்தியும் பாசமும் கொண்டிருந்த புனித எலிசபெத் பேசிய மொழி இதுதான். அதாவது, பிறரன்பு பணிகள் வழியாகத்தான் அவர்களுடன் அவர் உரையாடினார். இதைத்தான், "கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது" (காண்க. 1 யோவா  4:20) என்று கூறுகின்றார் திருத்தூதரான புனித யோவான்.

ஒரு அரசரின் மகளான புனித எலிசபெத், ஆடம்பரமான மற்றும் வசதி வாய்ப்புகள் நிறைந்த சூழலில் வளர்ந்தார். ஆனால், எப்போது, கிறிஸ்துவுடனான சந்திப்பில் அவர் அவரால் தொடப்பட்டு மனமாற்றம் பெற்றாரோ, அப்போதே, உலக செல்வங்கள் மற்றும் மாயைகளிலிருந்து விடுபட்டதாக அவர் உணர்ந்தார். மேலும் அவற்றைத் துறக்கவும் தேவையில் இருப்போருக்கு உதவவும் அவர்களைப் பராமரிக்கவும் அவர் முன்வந்தார்.

இவ்வாறு, அவர் தனது உடைமைகளை விற்றது மட்டுமல்லாமல், ஏழைகள், தொழுநோயாளர்கள், மற்றும் நோயாளர்களுக்குப் பணியாற்றுவதிலும், தனிப்பட்ட முறையில் அவர்களைக் கவனித்துக்கொள்வதிலும், அவர்களைத் தன் தோளில் சுமந்து கொண்டு செல்வத்திலும் கூட தனது வாழ்நாளைக் கழித்தார். அதுவே ‘பிறரன்பு மொழி’ (The language of charity).

ஆகவே, அனைவரிடமும் குறிப்பாக, வறுமை, நோய் மற்றும் துயரத்தின் வலியை அனுபவிப்பவர்கள் மீது இரக்கம் காட்டுதல் வழியாக, இந்த வகையான சாட்சிய வாழ்வை நாமும் வெளிப்படுத்த வேண்டும்.

பிறரன்பு மொழி பேசும் திருஅவைத் தேவை

பிறரன்பு மொழியில் சரளமாகப் பேசக்கூடிய ஒரு திருஅவை நமக்குத் தேவை. மேலும் எல்லோரும் கேட்கக்கூடிய மற்றும் நம்மிடமிருந்து வெகு தொலைவில் உள்ளவர்களும்,  நம்பிக்கையாளர்கள் அல்லாதவர்களும் கூட புரிந்துகொள்ளக்கூடிய உலகளாவிய மொழி பேசக்கூடிய அதாவது, பிறரன்பு மொழி பேசக்கூடிய (The language of charity) ஒரு திருஅவை நமக்குத் தேவை.

புதிய நம்பிக்கை தரும் கிறிஸ்துவின் அன்பு

ஹங்கேரியில் உள்ள தலத்திருஅவை தாராளமான மற்றும் பரந்த அளவிலான பிறரன்பு பணிகள் ஆற்றுவதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேய்ப்புப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், திருஅவை மற்றும் மறைமாவட்ட காரித்தாஸ் அமைப்புகளை இணைக்கும் வலையமைப்பை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள், அதேவேளையில், இறைவேண்டல் குழுக்கள், நம்பிக்கையாளர்களின் சமூகங்கள் மற்றும் பிற அமைப்புகளைச் சேர்ந்த நம்பிக்கையாளர்களையும் ஊக்கப்படுத்துகிறீர்கள். மேலும், பிறரன்பின் வழியாகப் பிறக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்புசார் தோழமையுணர்வுடன் (ecumenical fellowship) ஒன்றுபட்டு செயல்படுகிறீர்கள்.

பெற்றுக்கொண்ட அன்பின் நினைவு நம்பிக்கையை மீண்டும் எழுப்புவதுடன், வாழ்க்கையில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்க மக்களை ஊக்குவிக்கிறது. வலி மற்றும் துயரங்களுக்கு மத்தியில் கூட, நாம் அன்பின் வலிநீக்கியைப் (balm of love) பெற்றவுடன், முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையான வலிமையைக் காண்கிறோம். அதாவது, நாம் எல்லாவற்றையும் இழந்துவிடவில்லை என்பதுடன் ஒரு வித்தியாசமான எதிர்காலம் இன்னும் சாத்தியம் என்று நம்புவதற்கான வலிமையைக் காண்கிறோம்.

இயேசு நமக்குத் தந்து, நடைமுறைப்படுத்தக் கட்டளையிடும் அவரது அன்பு, சமூகத்திலிருந்தும், நமது நகரங்களிலிருந்தும், நாம் வாழும் இடங்களிலிருந்தும் அலட்சியம் மற்றும் சுயநலத்தின் தீமைகளை வேரோடு பிடுங்கி எறிந்து, புதிய, மிகவும் நியாயமான, உடன்பிறந்த உறவுகொண்ட உலகத்திற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும். அதில் நாம் ஒரே இல்லத்தில் வாழ்கிறோம் (feel at home)  என்ற உணர்வைப் பெற முடியும்.

எப்போதும் பிறரன்பு மொழியைப் பேசுங்கள்

சகோதர சகோதரிகளே, பிறரன்பு (The language of charity) மொழியை எப்போதும் பேசுமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன். பசித்திருப்போருக்கு உணவை வழங்க நீங்கள் முயற்சி செய்யும் போதெல்லாம், இறைவன் உங்களுக்குள் மகிழ்ச்சியை மலரச் செய்து, நீங்கள் கொடுக்கும் அன்பின் நறுமணத்தால் உங்கள் வாழ்க்கையை நிரப்புகிறார் என்பதை உணர்ந்திடுங்கள்.

அவ்விதத்தில் பார்க்கும்போது, தலத்திருஅவையிலும் உங்கள் நாட்டிலும் நீங்கள் எப்போதும் பிறரன்பின் நறுமணத்தைப் பரப்புவீர்கள் என்பதே எனது நம்பிக்கையும் இறைவேண்டலுமாக இருக்கின்றது. இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 April 2023, 14:02