ஹங்கேரியில் திருத்தந்தையின் மூன்றாம் நாள் பயண நிகழ்வுகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
Kossuth Lajos வளாகம் புடாபெஸ்டின் 5ஆவது மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1848 ஆம் ஆண்டு ஹங்கேரியப் புரட்சியின் தேசிய வீரரான Lajos Kossuth அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டு அவர் பெயரால் அழைக்கப்பட்டு வருகின்றது. அதன் இடத்தில் ஹங்கேரிய பாராளுமன்றத்தின் நவீன கோதிக் கட்டிடம், எத்னோகிராஃபிக் அருங்காட்சியகம், விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை உள்ளன. தேசத்தின் முக்கிய சதுக்கத்தில், வரலாற்று கட்டிடங்களுக்கு இணையாக நாட்டின் நினைவுச்சின்னங்கள், மற்றும் சிலைகள் உள்ளன, இதில் 1700 ஆம் ஆண்டில் ஹப்ஸ்பர்க்ஸுக்கு எதிரான கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய மாகியர் தலைவரான இரண்டாம் பிரான்செஸ்கோ ரகோசியின் குதிரையேற்ற சிலை, புகழ்பெற்ற ஹங்கேரிய கவிஞரான Attila József நினைவுச்சின்னம், மற்றும் 1956 ஆம் ஆண்டு ஹங்கேரிய புரட்சியின் நினைவுச்சின்னங்கள் அடித்தளத்திலும் அமைந்துள்ளன.
ஹங்கேரி உள்ளூர் நேரம் காலை 9.00 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 12.30 மணிக்கு Piazza Kossuth Lajos வளாகத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திறந்த காரில் வளாகத்தில் உள்ள மக்களை வலம்வந்தார். காலை 9.15 மணிக்கு திருப்பலி உடைகளை அணிந்து ஹங்கேரிய மக்களுக்கானத் திருப்பலியை இலத்தீன் மற்றும் ஹங்கேரி மொழிகளில் நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியில், முதல் மற்றும் இரண்டாம் வாசகங்கள், நற்செய்தி வாசகம் என அனைத்தும் ஹங்கேரிய மொழியில் வாசிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து திருத்தந்தை தனது மறையுரையை இத்தாலியத்தில் வழங்கினார். திருத்தந்தையின் மறையுரையைத் தொடர்ந்து ஜெர்மானியம், உக்ரேனியம், ஹங்கேரியம், ரொமேனியா, குரோவாசியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா ஆகிய மொழிகளில் நம்பிக்கையாளார் மன்றாட்டுக்கள் வாசிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்த காணிக்கை மற்றும் நற்கருணை வழிபாட்டினை எஸ்டர்கோம் புடாபெஸ்ட் பெருநகரப் பேராயரான கர்தினால் Péter Erdő அவர்கள் வழிநடத்தினார். திருப்பலியின் முடிவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த மக்களுக்குத் தன் அல்லேலுயா வாழ்த்தொலியையும் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்து திருப்பலியை நிறைவு செய்தார்.
ஹங்கேரி உள்ளூர் நேரம் காலை 11.30 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 3.00 மணிக்கு Kossuth Lajos வளாகத்தில் இருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 6.2 கிமீ தூரம் காரில் பயணம் செய்து திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்தார். மதிய உணவினை திருப்பீடத்தூதரகத்தில் உண்டு சற்று இளைப்பாறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்