திறந்த கதவுகளாக இருங்கள்! : திருத்தந்தை பிரான்சிஸ்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஏப்ரல் 30, ஞாயிறன்று, ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரிலுள்ள Kossuth Lajos வளாகத்தில் தலைமையேற்று சிறப்பித்த பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரை.
அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே! இன்றைய நற்செய்தியின் இறுதியில், "நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்" (யோவா 10:10) என்கிறார் நமதாண்டவர் இயேசு. ஒரு நல்ல மேய்ப்பர் அதைத்தான் செய்கிறார். அவர் தன் ஆடுகளுக்காகத் தன் உயிரைக் கொடுக்கிறார். இயேசு, தன் மந்தையைத் தேடிச் செல்லும் மேய்ப்பரைப் போல, நாம் தொலைந்து போனபோது நம்மைத் தேடி வந்தார். ஒரு மேய்ப்பரைப் போல நம்மை மரணத்திலிருந்து மீட்க வந்தார்.
ஆகவே, நல்மேய்ப்பரின் உருவத்தைப் பற்றியும், நற்செய்தியின்படி, அவர் ஆடுகளுக்காகச் செய்யும் இரண்டு குறிப்பிட்ட செயல்கள் குறித்தும் நாம் இப்போது சிந்திப்போம். முதலாவது, அவர் தம்முடைய ஆடுகளைப் பெயர் சொல்லி அழைக்கிறார், இரண்டாவது, அவர் அவைகளை வெளியே கூட்டிச் செல்வார் (வச.3).
அவர் தனது ஆடுகளைப் பெயர்சொல்லி அழைக்கிறார்
ஒவ்வொரு சூழ்நிலையிலும், நாம் குழப்பத்தாலும், அச்சத்தாலும், துயரத்தாலும், புலம்பல்களாலும் அவதியுறும் எல்லா வேளைகளிலும் இயேசு நம்மை அழைக்கிறார். அவர் நல்மேய்ப்பராக நம்மிடம் வருகிறார், அவர் நம்மைப் பெயர் சொல்லி அழைத்து, அவருடைய பார்வையில் நாம் எவ்வளவு விலைமதிப்பற்றவர்கள் என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகின்றார்.
அவர் நம் காயங்களைக் குணப்படுத்துகிறார், நம்முடைய பலவீனங்களைத் தானே சுமந்துகொள்கிறார், இறைத்தந்தையின் பிள்ளைகளாகவும், ஒருவருக்கொருவர் சகோதரர் சகோதரிகளாகவும் நம்மைத் தனது கொட்டிலில் ஒன்றிணைகிறார்.
நாம் அனைவரும் அவருடைய அழைப்பில் பிறந்தவர்கள். அவர் நம்மை ஒன்றாக அழைத்தார், எனவே, நாம் அவருடைய மக்கள், அவரது மந்தை, அவருடைய திருஅவை. நாம் பல்வேறுவகைப்பட்டவர்களாகவும், வெவ்வேறு சமூகங்களில் இருந்து வந்தவர்களாகவும் இருந்தாலும், அவருடைய மகத்தான அன்பு நம்மை ஒரே அரவணைப்பில் ஆழ்த்தும்படி இறைத்தந்தை நம்மை ஒன்று சேர்த்திருக்கிறார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும், நல்மேய்ப்பரின் பெயரால் அழைக்கப்படுகிறோம், அவருடைய அன்பைப் பெறுவதற்கும் அதனை அறிவிப்பதற்கும், அவருடைய மந்தையைச் சேர்ந்தவர்களாக நம்மை மாற்றுவதற்கும், மற்றவர்களை ஒருபோதும் ஒதுக்கி வைக்காமல் இருப்பதற்கும் நாம் அழைக்கப்படுகிறோம்.
நாம் அனைவரும் உடன்பிறந்த உறவையும், ஒத்துழைப்பையும் வளர்த்துக் கொள்ளவும், பிளவுகளைத் தவிர்க்கவும், சொந்த சமூகத்திற்குளேயே பாதுகாப்பைத் தேடாமல், நமது குறுகிய எல்லைக்குள் நம்மையே நாம் ஒதுக்கிக்கொள்வதில் அக்கறை காட்டாமல், ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதில் நம் இதயங்களைத் திறக்க அழைக்கப்படுகிறோம்.
அவர் அவைகளை வெளியே கூட்டிச் செல்கிறார்.
முதலில், ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு கொட்டிலுக்குள் கொண்டுவந்தார்; இரண்டாவதாக, அவர் அவைகளை வெளியே அனுப்புகிறார். நாமும் கடவுளுடைய மக்களாவதற்கு முதலில் அவருடைய குடும்பம் என்னும் கொட்டிலில் கூட்டிச் சேர்க்கப்பட்டோம். பின்னர் உலகிற்கு அனுப்பப்பட்டோம். அதனால், துணிவுடனும் அச்சமின்றியும், நற்செய்தியின் அறிவிப்பாளர்களாகவும், நமக்குப் புதுப்பிறப்பளித்த அன்பின் சாட்சிகளாகவும் மாறுவோம்.
இயேசுவே ஆட்டுக்கொட்டிலின் வாயில்
இந்த இரண்டு காரியங்கள் நீங்கலாக, மூன்றாவது ஒரு உருவத்தையும் நமக்கு முன்வைக்கின்றார் இயேசு. அதாவது, "நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர்" (வச. 9) என்கிறார். நம்மை கடவுளின் அரவணைப்பிற்குள்ளும், திருஅவையின் கொட்டிலுக்குள்ளும் கொண்டு வந்த பிறகு, இயேசு நம்மை மீண்டும் உலகிற்கு அழைத்துச் செல்லும் கதவாக மாறுகிறார்.
நம் சகோதரர் சகோதரிகளைச் சந்திக்க முன்செல்லுமாறு அவர் நம்மைத் தூண்டுகிறார். விதிவிலக்கு இல்லாமல் நாம் அனைவரும் இந்த நோக்கத்திற்காக அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது; நமது வசதிவாய்ப்புகள் நிறைந்த பகுதிகளை (comfort zones) விட்டு வெளியேறவும், நற்செய்தியின் ஒளி தேவைப்படும் அனைத்து விழிம்புநிலைப் பகுதிகளையும் அடைய துணிவைக் கண்டறியவும் (காண்க. நற்செய்தியின் மகிழ்வு, 20) நாம் அழைக்கப்படுகிறோம்.
சகோதரர் சகோதரிகளே, "வெளியே செல்வது" என்பது இயேசுவைப் போல நாமும் திறந்த கதவுகளாக மாற வேண்டும் என்பதாகும். மூடிய கதவுகளைப் பார்ப்பது எவ்வளவு வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. தயவுசெய்து, நமது வாழ்வில் பல்வேறு நிலைகளில் மூடியுள்ள சுயநலத்தின் கதவுகளைத் திறப்போம்! நமது வார்த்தைகளிலும், செயல்களிலும், அன்றாட நடவடிக்கைகளிலும், இயேசுவைப் போல, ஒரு திறந்த கதவாக இருப்போம். இறைவனின் அன்பு மற்றும் மன்னிப்பின் அழகை அனைவரும் நுழைந்து அனுபவிக்க உதவும் ஒரு கதவாக இருக்க முயற்சிப்போம். பெருகிய முறையில் திறந்த கதவுகளாக இருக்க ஒருவரையொருவர் ஊக்குவிப்போம்.
திறந்த கதவுகளாக இருங்கள்!
திறந்த கதவுகளாக இருங்கள்! ஆறுதல் மற்றும் குணப்படுத்தும் வார்த்தைகளால் வாழ்வின் இறைவன் நம் இதயங்களில் நுழையட்டும். அப்போதுதான், சமூகத்திற்குள் திறந்த கதவுகளாக நாம் வெளியே செல்ல முடியும். அன்பான சகோதர சகோதரிகளே, நல்மேய்ப்பராகிய இயேசு நம்மைப் பெயர் சொல்லி அழைக்கிறார், அளவற்ற அன்புடன் நம்மைக் கவனித்துக்கொள்கிறார். அவரே வாயில், அவர் வழியாகக் கொட்டிலுக்குள் உள்ளே வரும் அனைவருக்கும் நிலைவாழ்வு உண்டு. அவரே நம் எதிர்காலம், 'நிறைவாழ்வின் எதிர்காலம்.
ஆகவே, நாம் ஒருபோதும் மனம் தளராமல் இருப்போம். அவர் நமக்கு அளித்த மகிழ்ச்சியையும் அமைதியையும் ஒருபோதும் நாமே இழந்துவிடக்கூடாது. நாம் ஒருபோதும் நம்முடைய சொந்தப் பிரச்சினைகளுக்குள் ஒதுங்கிவிடக்கூடாது அல்லது அக்கறையின்மையில் மற்றவர்களிடமிருந்து விலகிவிடக்கூடாது. நல்லாயனாம் இயேசு நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அல்லேலூயா வாழ்த்தொலிச் செய்தி.
அன்புநிறைந்த சகோதரர் சகோதரிகளே! நாம் இப்போது அன்னையை நோக்கித் திரும்புவோம். அரசி என்றும் பாதுகாவலி என்றும் நீங்கள் அழைக்கும் Magna Domina Hungarorum-விடம், நான் அனைத்து ஹங்கேரியர்களையும் ஒப்படைக்கிறேன். இந்தப் பெரிய நகரத்திலிருந்தும், இந்த உன்னத நாட்டிலிருந்தும், இந்த நாட்களில் என் மனதில் இருந்த, குறிப்பாக அமைதிக்கான காரணமான முழு ஐரோப்பா கண்டத்தின் நம்பிக்கையையும் எதிர்காலத்தையும் அன்னையினுடைய இதயத்தில் ஒப்படைக்க விரும்புகிறேன்.
ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியே, மிகவும் துயருறும் மக்களைக் கண்ணோக்கியருளும். ஒரு சிறப்பு வழியில், உமக்கு அர்ப்பணிக்கப்பட்ட அண்டை நாடான, போரால் பாதிக்கப்பட்ட உக்ரேனிய மக்களையும் இரஷ்ய மக்களையும் கண்ணோக்கியருளும். அமைதியின் அரசியான நீங்கள், மக்கள் மற்றும் அவர்களின் தலைவர்களின் இதயங்களில் அமைதியைக் கட்டியெழுப்பவும், இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கையின் எதிர்காலத்தை வழங்கவும், போரினை விடுத்து, பகைமையின் சுவரினை அகற்றி உடன்பிறந்த உறவுநிலைகொண்ட உலகினை உருவாக்கவும் எமக்கு உதவியருளும்.
கடவுளின் தூய அன்னையே! இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, தொடக்க கால கிறிஸ்தவச் சமூகத்தில், சீடர்கள் இறைவேண்டலில் விடாமுயற்சியுடன் ஈடுபட நீங்கள் உதவி புரிந்தீர் (காண். திப 1:14). நீங்கள் நம்பிக்கையாளர்களை ஒன்றிணைத்து, கனிவும் மனத்தாழ்மையும் கொண்ட உங்கள் முன்மாதிரிகையால் அவர்களின் ஒற்றுமையைப் பாதுகாத்தீர்கள்.
ஐரோப்பாவில் உள்ள தலத்திருஅவைக்காக நாங்கள் உம்மிடம் வேண்டுகிறோம். ஐரோப்பா இறைவேண்டலில் வலிமைபெறவும், புதுப்பிக்கப்பட்ட மனத்தாழ்மை மற்றும் கீழ்ப்படிதலின் வழியாக உறுதியான சாட்சி மற்றும் மகிழ்ச்சியான நற்செய்தி அறிவிப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாய்த் திகழவும் அருள்புரிந்தருளும். இந்தத் தலத்திருஅவையையும், இந்நாட்டையும் உம்மிடம் ஒப்படைக்கிறோம். உமது திருமகனின் உயிர்த்தெழுதலில் நீங்கள் அக்களித்ததுபோல, அவருடைய பிரசன்னத்தின் மகிழ்ச்சியால் எங்கள் இதயங்களை நிரப்பியருளும்.
அன்பான சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவின் மகிழ்ச்சியை நீங்கள் எங்கும் பரவச் செய்ய வேண்டும் என்பதே உங்களுக்கான என் விருப்பம். உங்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். உயிர்த்த ஆண்டவர் அன்னை மரியா வழியாக உங்களை என்றும் ஆசீர்வதிப்பாராக!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்