துயரத்தின் வேளையிலும் இறைத்தந்தையுடன் ஒன்றித்திருந்தார் இயேசு

புறந்தள்ளப்பட்டவர்களும், ஒதுக்கப்பட்டவர்களும் கிறிஸ்துவின் உயிருள்ள அடையாளங்களாக இருகின்றனர் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆண்டவராம் இயேசு, நம் உடலின் கல்லான இதயங்களை சதையாலான இதயங்களாக மாற்றுகிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 2, இஞ்ஞாயிறன்று நடைபெற்ற குருத்து ஞாயிறுத் திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைத்தந்தை தன்னைக் காப்பாற்றுவார் என்று நன்றாக அறிந்திருந்ததால் அந்தத் துயரத்தின் தருணத்திலும் இயேசு தன்னை முழுவதும் இறைத்தந்தையிடம் கையளித்தார் என்றும் தெரிவித்தார்.

புனித மத்தேயு நற்செய்தியில் இயேசு கூறும், "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்ற வார்த்தைகள் கிறிஸ்துவின் பாடுகளின் இதயத்திற்கும்,  நமது மீட்பிற்காக, அவர் அனுபவித்த துன்பங்களின் உச்சத்திற்கும் நம்மை கொண்டு செல்கின்றன என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு அனுபவித்த துன்பங்கள் ஏராளம் என்றும், அவரது பாடுகளின் துயரங்களைக் கேட்கும் போதெல்லாம், அவை நம் இதயங்களைத் துளைக்கின்றன என்றும் இவை உடலின் துன்பங்கள் மட்டுமல்ல மாறாக, ஆன்மாவின் துன்பங்கள் என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவை அத்தனை துயரங்களிலும் நிச்சயமாக, அவர் இறைத்தந்தையுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் என்றும் விளக்கினார்.

இயேசு  நம்முடன் முழுமையாகவும் உறுதியாகவும் ஒன்றித்திருப்பதற்காக, இறுதிவரை நம்மில் ஒருவராக வாழ்ந்தார் என்றும்,  அதனால் நம்மில் யாரும் தனிமையாகவோ, நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு இருப்பதாகவோ உணரக்கூடாது என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் எப்போதும் விரக்திக்கு இரையாகிவிடக்கூடாது என்பதற்காகவும், அவர் எப்போதும் நம் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அவர் கைவிடப்பட்டதொரு நிலையை அனுபவித்தார் என்றும் கூறினார்.

இப்படிப்பட்ட கைவிடப்படும் நிலைகளில்தான் இறைவன் நம்மைக் காப்பாற்றுகிறார் என்றும், "சிலுவையில், முழுவதுமாகக் கைவிடப்பட்டதாக உணர்ந்தபோதும், இயேசு விரக்திக்கு அடிபணியாமல், இறைவேண்டல் செய்து, நம்பிக்கையுடன், இறைத்தந்தையின் கரங்களில் தன்னை ஒப்புக்கொடுத்தார் என்றும் கூறினார்.

சகோதரர் சகோதரிகளே, இது போன்ற ஒரு அன்பு, நம்மை முழுவதுமாக மற்றும் இறுதிவரை அரவணைத்து, நமது கல்லான இதயங்களை தசைகொண்ட இதயங்களாக மாற்றி, அவைகளை கருணை, கனிவு மற்றும் இரக்கத்தின் திறன் கொண்டதாக மாற்றுகிறது என்றும் உரைத்தார்.

புறந்தள்ளப்பட்டவர்களும், ஒதுக்கப்பட்டவர்களும் கிறிஸ்துவின் உயிருள்ள அடையாளங்களாக இருகின்றனர் என்றும்,  அவர்கள் கிறிஸ்துவினுடைய  அன்பையும், தனிமையில் இருந்து நம்மை விடுவிக்கும் அவரது விடுதலையும் நமக்கு நினைவுபடுத்துகின்றனர் என்பதையு நினைவில் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கைவிடப்பட்ட நிலையில் உள்ள இயேவிடம் அன்பு கூர்வதுடன்,  நம்மைச் சுற்றிலுமுள்ள  கைவிடப்பட்டவர்களிடம் இயேசுவை கண்டு அவர்களிடத்திலும் அன்பு கூர்வோம் என்றும், அப்போதுதான் நமக்காகத் தன்னையே முழுதுமாக வெறுமையாக்கிய இயேசுவுடன் ஒரே எண்ணமும் ஒரே உள்ளமும் கொண்டவர்களாக இணைந்திருப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2023, 15:07