Péter Pázmány கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை
Péter Pázmány கணனி மற்றும் உயிரிஅறிவியல் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம்
புடாபெஸ்டில் உள்ள Péter Pázmány என்னும் கணனி மற்றும் உயிரிஅறிவியல் கத்தோலிக்கப் பல்கலைக் கழகமானது ஐரோப்பாவின் தனித்துவமான பல்கலைக்கழகமாகும். ஏனெனில் இது மின்னணு மற்றும் கணனி பொறியியல் படிப்பை மூலக்கூறு மற்றும் நரம்பியல் உயிரியல் மருத்துவத்துடன் ஒருங்கிணைத்து செயல்படுத்துகிறது. ஹங்கேரிய அறிவியல் பல்கலைக்கழக உறுப்பினரான பேராசிரியர் தாமஸ் ரோஸ்காவின் வழிகாட்டுதலின் கீழ் ஏறக்குறைய முப்பது பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்துடன், கணனி பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. மனித உயிரியல், நரம்பியல் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்புகளின் அறிவியலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. மேலும், மரபியல், வாழ்க்கை அறிவியல், நரம்பியல், கணனி அறிவியலில் புதிய ஆராய்ச்சிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது, இப்பல்கழைக்கழகத்தின் பேராசிரியர்கள் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களாகத் திகழ்கின்றனர். இவ்வாண்டு இப்பல்கலைக்கழகம் அதன் 25 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. 1998 ஆம் ஆண்டு ஜூலை 1இல், பல்கலைக்கழகத்தின் அப்போதைய முதல்வராக இருந்த கர்தினால் பீட்டர் எர்டோவின் முன்மொழிவின் பேரில், பேராயர் இஸ்த்வான் செரிஜெலி, பலதரப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு அடிப்படையாக இருக்கும், தகவல் தொடர்புக் கல்வித்துறையை உருவாக்கினார். இதன் முதுகலைக்கல்வி பட்டமளிப்பானது 2000ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2001 ஆம் ஆண்டில் பொறியியல் மற்றும் கணனி அறிவியல் படிப்புக்களுக்கான பட்டமும் வழங்கப்பட்டது. மூலக்கூறு உயிரியல் என்னும் புதிய கல்வியானது ஏற்கனவே இருந்த அடிப்படைக் கல்வியில் வாழ்க்கை அறிவியலைக் கற்பிப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது, இது 2008 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஹங்கேரி உள்ளூர் நேரம் மாலை 4.00 மணிக்கு பீட்டர் பாஸ்மனி பல்கலைக்கழகம் வந்தடைந்த திருத்தந்தை அவர்களை நிறுவனத்தின் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் வரவேற்றனர். நிறுவனத்தலைவரின் வரவேற்பைத் தொடர்ந்து பல்கலைக்கழகப் பேராசிரியர், மாணவர் என இரு பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களைத் திருத்தந்தையின் முன் பகிர்ந்து கொண்டனர். அதன்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது திருத்தூதுப் பயணத்தின் ஆறாவது உரையாகிய இறுதி உரையை பல்கலைக்கழக மற்றும் கலாச்சார உலகினருக்கு Péter Pázmány கணனி மற்றும் உயிரிஅறிவியல் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் குழுமியிருந்தோருக்கு ஆற்றினார்.
இவ்வாறு தனது உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதி செபத்திற்குப் பின் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கி திருத்தூதுப்பயண நிகழ்வுகளை நிறைவு செய்தார்.
Péter Pázmány பல்கலைக்கழகத்தில் இருந்து உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 8.30 மணிக்கு புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 20 கிமீ காரில் பயணித்து புடாபெஸ்ட் விமான நிலையத்தை வந்தடைவார். மாலை 6 மணிக்கு புடாபெஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட உள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் உள்ளூர் நேரம், மாலை 7.55 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 11.25 மணிக்கு உரோம் நகரின் Fiumicino லியானார்தோ தா வின்சி விமான நிலையம் வந்து சேர்வார். பின் அங்கிருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வத்திக்கான் நகர் நோக்கி காரில் பயணம் செய்து தான் தங்கியிருக்கும் இல்லமான சாந்தா மார்த்தா வந்தடைவார்.
ஏப்ரல் 30 ஞாயிற்றுக்கிழமை காலையில் Kossuth Lajos வளாகத்தில் ஹங்கேரிய மக்களுக்கான திருப்பலி நிறைவேற்றியும், மாலையில் பல்கலைக்கழக மற்றும் கலாச்சார உலகினரை புடாபெஸ்டில் உள்ள Péter Pázmány கணனி மற்றும் உயிரிஅறிவியல் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் சந்தித்து உரையாற்றியும் தனது திருத்தூதுப் பயணத்தின் இறுதி நாளை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்துடன் ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 41ஆவது திருத்தூதுப் பயணமானது ஏப்ரல் 30 ஞாயிற்றுக்கிழமை ஹங்கேரியில் நிறைவுற்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்