நேர்காணல் வழங்கும் திருத்தந்தை (கோப்புப்படம்) நேர்காணல் வழங்கும் திருத்தந்தை (கோப்புப்படம்) 

போர் என்பது நம்மை அழிக்கும் ஒரு சோகம் :திருத்தந்தை பிரான்சிஸ்

ஓர் ஆண்டு ஆயுத உற்பத்தியை நிறுத்தினாலே போதும், அது உலக மக்களின் பசியை முடிவுக்குக் கொண்டுவரும் : திருத்தத்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலகில் விதிமீறல் நிகழும்போது நாம் ஒன்றிணைந்து அதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும், அரசியல்வாதிகள் அணிந்துள்ள நியாயமற்ற நீதியின் முகமூடியை நாம் அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பத்தாம் ஆண்டு பணி நிறைவையொட்டி, அர்ஜென்டினாவின் Canal 5 de Noticias என்ற தொலைக்காட்சி மேற்கொண்ட நேர்காணலில் இவ்வாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

உலக அமைதியை ஊக்குவித்தல், உக்ரைனில் நடந்த போர், முறைகேடுகளை எதிர்ப்பதற்கான திருஅவையின் முயற்சிகள் மற்றும் தேசபக்தியின் முக்கியத்துவம் குறித்தும், தனது தாய்நாடான அர்ஜென்டினா தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இந்த நேர்காணலின்போது பதிலளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2023 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி நடந்த புதன் பொதுமறைக்கல்வி உரையின்போது, திருத்தந்தை பேசியது குறித்து பத்திரிக்கையாளர் Gustavo Sylvestre  எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டினா அரசுத் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தனக்கான வாழ்த்துக் கடிதத்தில் கையெழுத்திட ஒன்றாக வந்ததற்காக நன்றி கூறியதாகவும், அதேவேளையில், உரையாடவும், விவாதிக்கவும், தேசத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கவும் அவர்கள் எப்போதும் ஒன்றிணைந்து வருவதற்குத் தான் அவர்களை வலியுறுத்தியதாகவும் கூறினார்.

நம்மிடையே நிலவும் உட்கட்சி பிரச்சனைகள் தீங்கு விளைவிக்கும் என்றும், அது அரசியல் உறவை அழிக்கிறது என்றும் எச்சரித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களை ஒன்றிணைக்கும் அரசியல் பலமில்லாத அரசிகள் கட்சிகள் பாதியிலேயே பலமிழந்து நின்றுபோய்விடுகின்றன என்றும் கூறினார்.

சமூக நீதிதான் தீவிரவாதக் கட்சிகளின் எழுச்சியே தவிர வேறொன்றும் இல்லை," என்று  கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீங்கள் ஒரு அரசியல்வாதியுடன், தீவிர வலதுசாரி சிந்தனையாளருடன் விவாதிக்க விரும்பினால், சமூக நீதியைப் பற்றி பேசுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.

போர் என்பது நம்மை அழிக்கும் ஒரு சோகம் என்பதால் அமைதிக்காகப் போராடுவது எப்படி அவசியம் என்பதையும் நினைவு கூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் ஆண்டு ஆயுத உற்பத்தியை நிறுத்தினாலே போதும், அது உலக மக்களின் பசியை முடிவுக்குக் கொண்டுவரும் என்று மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2023, 15:12