நோயாளர்கள் யாரும் தனிமையை உணரக்கூடாது : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தேவையின் எல்லையில் நிற்பதே நமது முதன்மையான பணி என்பதை நினைவில் கொண்டு, விவேகத்தின் பாதைகளையும் வலிமையான தேர்வுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்
ஏப்ரல் 13, இவ்வியாழன்று, திருப்பீடத்தில் சமூக மற்றும் நல நிறுவனங்களின் துறவற அமைப்பினருக்கு (ARIS) வழங்கிய உரையில் இவ்வாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத்தில் ஏழைகள், பலவீனமான மற்றும் கைவிடப்பட்டவர்களுக்குச் செவிசாய்ப்பதிலும், கவனம் செலுத்துவதிலும், நல பாதுகாப்பு வழியாகத் திருஅவை அதிகமான நற்காரியங்களைச் செய்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
இன்றையச் சூழலில், கிறிஸ்தவக் கொள்கைகளின் அடிப்படையில் துறவற நல நிறுவனங்களின் பணிகள் எவை என்பது குறித்த கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்வோம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வலிமையான தேர்ந்துத்தெளிதலுடன் சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுக்குதான் நமது பணிகள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு திருஅவையாக, ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதார அல்லது கலாச்சாரக் காரணங்களுக்காகப் புறக்கணிக்கப்படுபவர்களின் நலம் சார்ந்த கோரிக்கைகளுக்கு நாம் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவக் கொள்ககைகளின் அடிப்படையில் நலபாதுகாப்பு என்பது, சமூகத்தின் பலவீனமான பிரிவினரைப் பராமரிக்கும், அவர்களின் உரிமையைப் பாதுகாக்கும் கடமையைக் கொண்டுள்ளது என்றும், துயருறும் மற்றும் குறைந்த அளவே அக்கறை காட்டப்படும் மக்கள் வாழும் இடங்களுக்கு முன்னுரிமை அளித்து, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பணிகளைப் புதிய பணிகளாக மாற்ற வேண்டியிருந்தாலும் கூட அதனையும் செய்திட வேண்டும் என்றும் விண்ணப்பித்தார் திருத்தந்தை.
நோய்வாய்ப்பட்ட ஒவ்வொரு நபரும் மிகவும் பலவீனமானவர் என்பதன் அடிப்படையில் அவர்களுக்கு உதவிகள் தேவைதான். ஆனால், பணக்காரர்களாக இருப்பவர்கள் கூட சில வேளைகளில் ஏழைகளை விட தனியாகவும் கைவிடப்பட்டவர்களாகவும் இருப்பார்கள் எனவும் விளக்கினார் திருத்தந்தை
எல்லாவற்றிற்கும் மேலாக, துறவற மருத்துவமனைகள் நலபொருளாதாரம் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமகால கலாச்சாரத்தால் நிராகரிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வதற்கான பணியைக் கொண்டுள்ளன என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யாரும் தொட விரும்பாதவர்களைக் கவனித்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் இம்மருத்துவமனைகள் என்றும் தெளிவுபடுத்தினார் திருத்தந்தை.
நோயாளர்கள் யாரும் தனிமையில் இருப்பதாக உணரக்கூடாது! மாறாக, ஒவ்வொருவரும் ஆதரிக்கப்பட வேண்டும் என்றும், சிலவேளைகளில் அவர்கள் நீண்ட மற்றும் சோர்வுற்ற பலவீனமான பாதையில் கிறிஸ்தவ நம்பிக்கையுடன் நடக்க நீங்கள் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்