புதுவாழ்வுக்கு உயிர்த்தெழுவோம்! : திருத்தந்தை பிரான்சிஸ்

ஆண்டவரின் உயிர்த்தெழுதல், நம்மை நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் முன்னோக்கிச் செல்லத் தூண்டுகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், வெறுமையான கல்லறையைக் கண்ட பெண்களின் மகத்தான வியப்பையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்க நம்மை அழைக்கிறது என்றும், நம்பிக்கையிலும் எதிர்நோக்கிலும் வளரவும், இறைவனுடனான நமது முதல் சந்திப்பின் அருளை மீண்டும் பெறவும் நாம் அழைக்கப்படுகிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 8, இச்சனிக்கிழமை மாலை, புனித பேதுரு பெருங்கோவிலில் தலைமையேற்று வழிநடத்திய உயிர்ப்புப் பெருவிழாத் திருவிழிப்புத் திருப்பலியில் ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்த்த ஆண்டவர் நமது நம்பிக்கையை புதுப்பிக்கவும், புதிய வாழ்வுக்கு உயிர்த்தெழவும் நம்மை அழைக்கிறார் என்றும் கூறினார்.

உயிர்த்த ஆண்டவர்

இயேசுவின் கல்லறையைக் காணப் புறப்பட்ட பெண்கள், காலியாக இருந்த கல்லறையையும், கலிலேயாவிற்குச் சீடர்களை அழைக்கும் உயிர்த்த ஆண்டவரையும் நேரில் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்ததை எடுத்துக் கூறும், நற்செய்தி வாசகத்தை மையமாகக் கொண்டு தனது சிந்தனைகளை இறைமக்களுடன் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை.

சீடர்களின் மறுபிறப்பு மற்றும் அவர்களின் இதயங்களின் உயிர்த்தெழுதல் ஆகியவை, கலிலேயாவில் தாங்கள் தொடக்கத்தில் பெற்றுக்கொண்ட நம்பிக்கைகைக்கு மீண்டும் திரும்புவதற்கு அழைப்பு விடுக்கிறது என்பதையும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

துயரத்திலிருந்து மகிழ்விற்கு

நிகழ்காலத்தை ஏமாற்றம், கசப்பு அல்லது திகைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே நாம் பார்க்கும் போது, ​​எதையும் மாற்ற முடியாது என்று நம்பி, ​​சில வேளைகளில் நாமும் கூட சோகத்தில் மூழ்கிவிட வாய்ப்புண்டு என்று வாழ்வின் எதார்த்தத்தை எடுத்துக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இறைவனுடனான நமது முதல் நம்பிக்கை சந்திப்பை கடந்த காலத்திற்குச் சொந்தமானதாகவும், இருள், போர், அலட்சியம் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலம் போன்றவற்றால் குறிக்கப்பட்ட இன்றைய கடினமான உலகில், குறைவான பொருத்தம் கொண்டதாகவும் சில வேளைகளில் நம் மனதில் பதிய வைக்கலாம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஏமாற்றம், நம்பிக்கையின் ஊற்று நமக்குள் வற்றுவதற்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார்.

நம்பிக்கையை மீட்டெடுக்கும் நினைவகம்

இயேசுவின் உயிர்ப்பின்போது, பெண்கள் வெறுமையான கல்லறை மற்றும் அவரின் உயிர்த்தெழுதலின் அனுபவத்தால் உடனடியாக மனமாற்றமடைந்தனர் என்று விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்க்கையையும் வரலாற்றையும் என்றென்றும் மாற்றக்கூடிய 'கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்!' என்ற இந்தச் செய்தியைப் பற்றி சீடர்களிடம் கூற, அச்சத்தின் நிலையிலும், மகிழ்ச்சியில் திளைத்தவர்களாக அவர்களை நோக்கி விரைந்தோடினர் என்றும் கூறினார்.

சீடர்களின் வாழ்வையே முற்றிலும் மாற்றிய மற்றும், இயேசுவால் முதலில் அழைக்கப்பட்ட இடமான கலிலேயாவிற்கு உயிர்த்த ஆண்டவர் அவர்களை மீண்டும் வரவழைத்ததைப் பற்றியும் அப்பெண்கள் சீடர்களிடம் எடுத்துரைத்தனர் என்று விவரித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது தொடக்கத்தில் அவர்கள் பெற்ற அழைப்புக்கு, உயிர்த்தெழுந்த ஆண்டவரால் மீண்டும் திரும்பும் நினைவைக் குறிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார். 

நம்பிக்கையுடன் முன்னேறுவோம்

ஆண்டவரின் உயிர்த்தெழுதல், நம்மை நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் முன்னோக்கிச் செல்லத் தூண்டுகிறது என்றும், வாழ்வின் திசையை மாற்றிய அவரின் உயிர்த்தெழுதல், நமது நம்பிக்கையை அடிக்கடி சிறைபிடிக்கும் கல்லறைகளின் கல்லை அகற்றுவதற்கும், எதிர்காலத்திற்கான முழு நம்பிக்கையுடன் முனைந்து முன்னேறுவதற்கும் உதவுகிறது என்றும் கோடிட்டுக்காட்டினார் திருத்தந்தை.

கலிலேயாவுக்குத் திரும்புவது என்பது, நமது கடந்த காலத்தின் அருளுக்குத் திரும்புவதற்கு அழைப்பு விடுக்கிறது என்றும், நம்மையே நாம் உற்றுநோக்கிப் பார்த்து புதியதொரு வழியைப் பெறும்போது, அது இறைவனின் அன்பைப் பற்றிய நமது அனுபவத்தின் நினைவைப் புதுப்பிக்கவும் உதவுகிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இதைத்தான் நாம் செய்ய வேண்டும் எனவும், இதனையே நினைவில் வைத்து நாம் முன்னேற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளுடனான நமது முதல் அன்பையும், வியப்பான சந்திப்பையும், மகிழ்ச்சியையும் நாம் மீட்டெடுத்தால், நமது தொடர்ந்து முன்னேற்றம் காண முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நமது சொந்த கலிலேய அனுபவம்

சகோதரர், சகோதரிகளே, கலிலேயாவையும், நமது சொந்த கலிலேய அழைப்பையும் இப்போது நினைவுகூர்வோம் என்றும், ஒரு துல்லியமான தருணத்தில் நம்மிடம் நேரடியாகப் பேசிய கடவுளின் வார்த்தையை நினைவில் வைப்போம் என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முக்கியமாகத் தூய ஆவியாரின் வலிமை வாய்ந்த அனுபவத்தையும் என்றும் நினைவில் கொள்வோம் என்றும் விண்ணப்பித்தார்.

நமது நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் அடித்தளமான இறைவனுடனான நமது முதல் சந்திப்பை நாம் நினைவுகூரும்போது, ​​உயிர்த்த இறைவனைக் கொண்டாட, அந்த அனுபவத்தையும், உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் மீட்டெடுக்க கலிலேயாவுக்குத் திரும்புவதற்கான இறைவனின் அழைப்புக்கு நாம் பதிலளிக்கிறோம் என்றும், இது உயிர்த்த இறைவனில் நாம் முன்னேறுவதைப் புதுப்பித்து வலுப்படுத்துகிறது என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

அன்புநிறைந்த சகோதரர் சகோதரிகளே, இயேசுவை கலிலேயாவுக்குப் பின்தொடர்ந்து சென்று, அவரைச் சந்தித்து, அங்கே அவரை வணங்குவோம் என்றும், அங்கு அவர் நம் ஒவ்வொருவருக்காகவும் காத்திருக்கிறார் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு உயிருடன் இருக்கிறார் என்பதை உணர்ந்து அவரை நம் வாழ்வின் இறைவனாக்கிய அந்தத் தருணத்தின் அழகை மீட்டெடுப்போம், புது வாழ்வில் எழுவோம்! என்றும் கேட்டுக்கொண்டார்

திருவிழிப்புத் திருப்பலியின் தொடக்கத்தில் புதிய நெருப்பும் புதிய திரியும் புனிதப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து மெழுகுதிரி பவனியும் நடைபெற்றது. அதன் பின்னர் பாஸ்கா புகழுரை பாடப்பட்டது. அதன் இறுதியில் பெருங்கோவில் முழுவதும் வண்ண விளக்குகள் ஒளிர்ந்தன. இது காண்போர் அனைவரையும் பரவசப்படுத்தியது.

இந்தத் திருவிழிப்புத் திருப்பலிக் கொண்டாட்டத்தில் அல்பேனியா, அமெரிக்கா, நைஜீரியா, இத்தாலி மற்றும் வெனிசுலா நாடுகளைச் சேர்ந்த எட்டு புகுநிலை கிறிஸ்தவர்களுக்குத் திருமுழுக்கு மற்றும் உறுதிபூசுதல் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 April 2023, 12:29