இளையோரே, உயர்ந்த இலக்குக் கொண்டிருங்கள்! : திருத்தந்தை

உங்களுக்காக உங்கள் அருகில் எப்போதும் உடன்வருபவர் இயேசு. உங்கள் பாதையில் உள்ள ஒவ்வொரு தடையையும் கடக்க அவர் உங்களுக்கு உதவத் தயங்குவதில்லை : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஏப்ரல் 29, சனிக்கிழமையன்று, ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரின் László Papp தேசிய விளையாட்டரங்கில் நிகழ்ந்த இளையோர் சந்திப்பின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அருளுரை.

அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே! நாம் பெரிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். நாம் சோம்பித்திரிவதை அவர் விரும்பவில்லை. நாம் எதையும் கண்டுகொள்ளாத அமைதியான மனம் கொண்டவர்களாகவோ,  கோழை மனம் கொண்டவர்களாகவோ இருப்பதை அவர் விரும்பவில்லை; மாறாக, நாம் உயிராற்றல் உள்ளவர்களாக, சுறுசுறுப்பானவர்களாக, பொறுப்பேற்கத் தயாராக இருக்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். இயேசு ஒருபோதும் நம் எதிர்பார்ப்புகளை இழிவுபடுத்துவதில்லை, மாறாக, அவைகள் நிறைவேற அவர் நமக்கு உதவுகிறார். நாம் வாழ்க்கையில் எப்படி வெற்றிபெறுவது? என்று சிந்திக்கும்போது, அதற்கு இரண்டு முக்கியமான வழிகள் இருக்கின்றன என்பதை உங்களுக்குக் கூற விழைகின்றேன். முதலாவது, உயர்ந்த இலக்கு. இரண்டாவது, பயிற்சி.

முதலாவது, உயர்ந்த இலக்கு

முதலில் உயர்ந்த இலக்கு என்று கூறும்போது, உங்கள் திறமைகளை நல்ல முறையில் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். உங்களிடம் நல்ல திறமை இருக்கின்றதா?  அதில் முதலீடு செய்யுங்கள், அச்சம் வேண்டாம்! மற்றவர்களுக்கு உதவ உங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக உங்கள் இதயத்தில் உணர்கிறீர்களா? அதனை செயல்படுத்துங்கள். இயேசுவை எப்படி அன்புகூர்வது, எப்படி பெரியதொரு குடும்பத்தைப் பெறுவது, தேவையில் இருப்போருக்கு எப்படி உதவுவது? என்றெல்லாம் நீங்கள் நினைக்கிறீர்களா? இவை அடைய முடியாத ஆசைகள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். மாறாக, இவை வாழ்க்கையின் பெரிய இலக்குகள் என்றெண்ணி அவற்றில் முதலீடு செய்யுங்கள்!

இரண்டாவது, பயிற்சி:

இரண்டாவதாகப் பயிற்சி. எப்படி பயிற்சி பெறுவது? என்று சிந்திக்கும்போது, மிகச்சிறந்த ஒரு பயிற்சியாளரான இயேசுவுடன் மேற்கொள்ளும் உரையாடலால் இது சாத்தியப்படும் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். அவர் உங்களுக்குச் செவிசாய்க்கிறார், உங்களை ஊக்குவிக்கிறார், உங்களை நம்புகிறார் மற்றும் உங்களில் உள்ள சிறந்ததை அவரால் வெளிக்கொணர முடியும். அவர் தொடர்ந்து உங்களை ஒரு குழு வீரராக அழைக்கிறார். தனியாக இல்லை ஆனால், மற்றவர்களுடன் இணைந்து திருஅவையில், சமூகத்தில், உங்கள் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

இயந்திரத்தனமான வாழ்க்கை வேண்டாம்

நீரோட்டத்திற்கு எதிராக நீந்த அச்சம் கொள்ளவேண்டாம், ஒவ்வொரு நாளும் ஒரு கணம் அமைதியாக இருக்கவும், ஒரு கணம் நிறுத்தி இறைவேண்டல் செய்யவும் முயலுங்கள். இயந்திரத்தனமான வாழ்க்கையை விட்டொழியுங்கள். உங்களின் பணிகளுக்கிடையில் உங்களையே சிறிது ஆசுவாசப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனைகளின்போது மனக்கசப்பு அல்லது மனக் குமுறலில் ஈடுபடாமல் கவனமாக இருங்கள். இதை யார் செய்தார்கள் அல்லது எனக்குதான் செய்தார்கள் என்று யோசித்து நேரத்தை வீணாக்காதீர்கள், மற்றவர்களின் நோக்கங்களை கேள்விக்குள்ளாக்காதீர்கள். அதுவும் நல்லதுமல்ல, ஆரோக்கியமானதும் அல்ல.

அமைதியாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

அமைதி என்பது நல்ல உறவுகளை வளர்க்கும் வளமான மண். நாம் என்ன உணர்கிறோம் என்பதை இயேசுவிடம் ஒப்படைக்கவும், நாம் விரும்பும் முகங்களையும் பெயர்களையும் அவரிடம் கொண்டு வரவும், நம் துயரங்களைப் பகிர்ந்து கொள்ளவும், நம் நண்பர்களை நினைவில் கொள்ளவும், அவர்களுக்காக ஒரு இறைவேண்டல் எழுப்பவும் இந்த அமைதி நம்மை அனுமதிக்கிறது.

அமைதி, நம் இதயங்களுடன் பேசக்கூடிய இறைத்தந்தையை வழிபட, நமது உள் அமைதியை மீட்டெடுக்கக்கூடிய நற்செய்தியின் ஒரு பக்கத்தைப் படிக்க நமக்கு வாய்ப்பளிக்கிறது. அமைதி, நாம் படிக்கத் தேவையில்லாத, ஆனால், மனித இதயங்களை எப்படிப் படிப்பது என்பதை அறிய உதவும் ஒரு புத்தகத்தை எடுக்க அனுமதிக்கிறது. அமைதி, இயற்கையை ஆழ்ந்து கவனிக்க உதவுகிறது, இதனால்  உள்ளத்தின் அமைதியை குலைக்கும் புறசப்தங்களுக்கு இடமளிக்காமல் நம்மைச் சுற்றியுள்ள இயற்கை அழகைக் கண்டறிய முடியும்.

அமைதி என்பது உங்கள் கைப்பேசியிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ ஒட்டிக்கொண்டு அமர்ந்திருப்பதற்காக அல்ல. தயவு செய்து அந்நிலை வேண்டாம்! அதனைத் தவிர்த்துவிடுஙகள். வாழ்க்கை உண்மையானது, மெய்நிகர் அல்ல. இது ஒரு திரையில் நிகழ்வதல்ல, ஆனால், உலகில் நிகழ்கிறது. அப்படியானால், அமைதி என்பது இறைவேண்டலுக்கான வழியைத் திறக்கும் கதவு, மற்றும் இறைவேண்டல் என்பது அன்பின் வழியைத் திறக்கும கதவு.

உங்களுக்காக உங்கள் அருகில் எப்போதும் உடன்வருபவர் இயேசு. உங்கள் பாதையில் உள்ள ஒவ்வொரு தடையையும் கடக்க அவர் உங்களுக்கு உதவத் தயங்குவதில்லை. இதில் இறைவேண்டல் உங்களுக்கு உதவுகிறது, ஏனென்றால், இறைவேண்டல் என்பது இயேசுவுடனான உரையாடல், திருப்பலி என்பது அவருடன் மேற்கொள்ளும் ஒரு சந்திப்பு. மேலும், பாவமன்னிப்பு பெறுவது (ஒப்புரவு) என்பது அவரிடமிருந்து நீங்கள் பெறும் அரவணைப்பு.

இறைவேண்டல் என்பது வாழ்க்கை

நீங்கள் இறைவேண்டல் செய்யும்போது, ​​​​உங்கள் உணர்வுகள் மற்றும் அச்சங்கள், உங்கள் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகள், உங்கள் நினைவுகள் மற்றும் நம்பிக்கைகள் என உங்கள் வாழ்க்கையில் நிகழும் அனைத்தையும் இயேசுவிடம் கொண்டு வர அஞ்சவேண்டாம். இறைவேண்டல் என்பது உரையாடல், இறைவேண்டல் என்பது வாழ்க்கை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இயேசு பெரிய காரியங்களை அசாதாரணமான மக்களுடன் அல்ல, மாறாக, சாதாரணமான மக்களுடன் தான் செய்கிறார் என்பதை நற்செய்தியின் ஒவ்வொரு பக்கமும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. தங்களுடைய திறமைகளை எண்ணி, பிறர் முன் எப்போதும் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று ஆர்வத்துடன் இருப்பவர்கள், கடவுளை தங்களின் இதயங்களிலிருந்து விலக்கி வைக்கிறார்கள்.

இயேசு, அவருடைய கேள்விகளாலும், அன்பாலும், அவருடைய ஆவியுடன் இணைந்து, நம்மை உண்மையான, நம்பகத்தன்மைக் கொண்ட மனிதர்களாக ஆக்குவதற்கு நமக்குள் ஆழமாகச் செயல்படுகிறார். இன்று நமக்கு அத்தகைய உண்மையான மற்றும் நம்பகத்தன்மைக் கொண்ட மனிதர்களின் அதிகம் தேவைப்படுகின்றனர்.

அன்பான நண்பர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் இயேசுவுக்கும் எனக்கும் மிகவும் மதிப்புமிக்கவர்கள்! திருஅவை மற்றும் உலக வரலாற்றில் உங்கள் இடத்தை யாரும் நிரப்ப முடியாது என்பதையும், உங்களால் மட்டுமே செய்யக்கூடியதை வேறு யாராலும் செய்ய முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

அப்படியென்றால், நாம் அன்புகூரப்படுகிறோம், விலைமதிப்பற்றவர்கள், பெரிய காரியங்களுக்காகப் படைக்கப்பட்டவர்கள் என்று நம்புவதற்கு, ஒருவருக்கொருவர் உதவுவோம். இறைவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 April 2023, 16:02