சூடானிலிருந்து போரால் வெளியேறிய மக்கள் சூடானிலிருந்து போரால் வெளியேறிய மக்கள்  (AFP or licensors)

சூடான் மற்றும் உக்ரைன் அமைதிக்காக செபியுங்கள்

சூடான் நாட்டில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வரவும், அமைதிப் பாதை திறக்கப்படவும் செபிக்குமாறு திருப்பயணிகளிடம் அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சூடான் நாட்டில் வன்முறைகள் முடிவுக்கு வந்து, பேச்சுவார்த்தைகளின் பாதை துவக்கப்பட வேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 23, ஞாயிற்றுக்கிழமையன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மை மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் காயமுற்றும் உள்ள சூடான் நாட்டில் வாழும் அனைத்து நம் உடன்பிறப்புக்களுக்காகவும் செபிப்போம் என்ற அழைப்பை முன்வைத்தார்.

அண்மையில் சூடான் நாட்டில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையே மோதல்கள் அதிகரித்து உயிரிழப்புக்கள் இடம்பெற்றுவரும் நிலையில், அந்நாட்டில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வரவும், அமைதிப் பாதை திறக்கப்படவும் செபிக்குமாறு திருப்பயணிகளிடம் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போரால் தொடர்ந்து துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் உக்ரைன் நாட்டிற்காக செபிக்க மறக்க வேண்டாம் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை.

ஏப்ரல் 22, சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் சிறப்பிக்கப்பட்ட பூமி நாள் குறித்தும் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயற்கையை பராமரிப்பதற்கான நம் அர்ப்பணம், ஏழைகளுக்கான பயனுள்ள ஒருமைப்பாட்டுணர்வுடன் இணைந்து செல்லவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 April 2023, 14:00