உக்ரேனிய புலம்பெயர்ந்தோருக்கு ஹங்கேரிய காரித்தாஸ் உதவி!

ஹங்கேரிய காரித்தாஸ் அமைப்பு, அந்நாட்டில் எட்டு வகையான இலக்குக் குழுக்களுக்கு உதவி வருகிறது : ரிச்சர்ட் ஜாகிவா

செல்வாஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஹங்கேரிய தலைநகர் புடாபெஸ்டில் தனது திருத்தூதுப் பயணத்தின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உக்ரேனிய புலம்பெயர்ந்தோருடன் நடத்திய சந்திப்பு அமைதிக்கான செய்தியை வழங்கியதாகக் கூறினார் அந்நாட்டுக்  காரித்தாஸ் அமைப்பின் இயக்குநர் ரிச்சர்ட் ஜாகிவா.

ஹங்கேரியின் புனித எலிசபெத் ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புலம்பெயர்ந்தோரைச் சந்தித்துக்கொண்டிருந்த வேளை, வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணலில் துயருறும் உக்ரேனியர்களுடன் திருத்தந்தை செலவிட்ட நேரம், அமைதியின் செய்திக்குப் பங்களித்ததாக கூறினார் ஜாகிவா.

உக்ரைனுக்கும் இரஷ்யாவிற்கும் இடையே நிகழ்ந்துவரும் போரின் காரணமாக ஏறத்தாழ நாற்பது இலட்சம் உக்ரேனிய புலம்பெயர்ந்தோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றும், அவர்களில் ஒரு பகுதியினர் இங்குத் தங்கியுள்ளனர் என்றும் உரைத்த ஜாகிவா, ஹங்கேரி தனது வடகிழக்கு எல்லையில் உக்ரைனை எல்லையாகக் கொண்டுள்ள நிலையில், போரிலிருந்து தப்பியோடி வருபவர்களுக்கு உதவுவதில் காரித்தாஸ் அமைப்பு பெருமளவில் உதவி வருகிறது என்றும் விளக்கினார்.

இந்த நேர்காணலில், ஏழைகள், வீடற்றவர்கள், போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்கள், புலம்பெயர்ந்தோர், குறிப்பாக, போரினால் உக்ரைனிலிருந்து வந்துள்ளவர்களுக்கும் ஆற்றிவரும் பணிகள் பற்றியும் விரிவாகப் பேசினார் ஜாகிவா.

தங்கள் பணியாளர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் இன்னும் புலம்பெயர்ந்தோருக்காகப் பணியாற்றுவதாகவும், குறுகிய மற்றும் நீண்ட கால தங்குமிடங்களை புலம்பெயர்ந்தோருக்கு வழங்க முயற்சிப்பதாகவும் கூறியுள்ள ஜாகிவா, அவரது தலைமை அலுவலகத்தில் உக்ரேனிய புலம்பெயர்ந்தோருக்கான  ஒருங்கிணைப்பு மையம் செயல்படுவதாகவும் கூறினார்.

வீடற்றவர்கள், போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்கள், தேவையில் இருப்போர், புலம்பெயர்ந்தோர், துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் அல்லது மனிதாபிமான நெருக்கடியில் உள்ளவர்கள் என எட்டு வகையான இலக்குக் குழுக்களுக்கு ஹங்கேரிய காரித்தாஸ் அமைப்பு உதவி வருகிறது என்றும் கூறினார் ஜாகிவா

திருத்தந்தை புலம்பெயர்ந்தோரைச் சந்திக்க விரும்பியதால், அவர்களை அவரிடம் அழைத்து வந்ததாகவும், புலம்பெயர்ந்தோருடனான திருத்தந்தையின் சந்திப்பு அமைதியை மேலும் வளர்க்கும் முயற்சியாக அமைந்துள்ளது என்றும் கூறினார் ஜாகிவா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 May 2023, 15:24