2023.05.28 Santa Messa nella Solennità di Pentecoste

மோச்சா புயலால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உதவுவோம் :திருத்தந்தை

மனித மற்றும் திருஅவை ஒன்றிப்புணர்வுடன் மோச்சா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நமது சகோதரர் சகோதரிகளுக்கு உதவி செய்ய வேண்டும் : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மோச்சா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மியான்மார் மற்றும் வங்கதேச எல்லையில் வாழும் மக்களுக்காக இறைவேண்டல் செய்ய உங்களை அழைக்கிறேன் என்று  கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 28, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த பல்வேறு நாட்டுத் திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது இவ்வாறு வேண்டுகோள் விடுத்ததார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வங்காள விரிகுடாவில் மியான்மர் மற்றும் வங்காளதேசம் இடையேயான பகுதிகளில் மரணத்தையும் அழிவையும் ஏற்படுத்திய வலிமை வாய்ந்த மோச்சா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளுமாறு அரசு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், வன்முறை காரணமாக மியான்மாரிலிருந்து தப்பி பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்வதற்காக வங்காள தேசத்திற்கு வரும் 8.00,000-க்கும் அதிகமான ரோஹிங்கியா புலம்பெயர்ந்தோருக்குக்  கூடுதலாக உதவிகள் தேவைப்படுகின்றன என்பதையும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

மே 14, ஞாயிறன்று, வங்காள தேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் மற்றும் மியான்மாரில் உள்ள கியாக்பியூ நகரங்களுக்கு இடையே மோச்சா சூறாவளி நிலச்சரிவை ஏற்படுத்தியதில் 41 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏறத்தாழ 700 பேர் காயமடைந்தனர்.

மியான்மாரில் ஏறத்தாழ 54 இலட்சம் மக்களை இந்தப் புயல் பாதித்துள்ளதாக OCHA  என்ற அமைப்பு மதிப்பிட்டுள்ள வேளை, மேலும் 32 இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகிறது என்றும், அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 May 2023, 14:23