திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

அமைதியின் தூதுவர்களாக இருங்கள்! : திருத்தந்தை பிரான்சிஸ்

நாம் மிகப்பெரும் ஆபத்தில் இருக்கின்றோம், ஆகவே, உங்களைச் சுற்றியும் உங்களுக்குள்ளும் அமைதியுடன் வாழுங்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள், ஓர் அழைப்பை முழுமையாக புதைக்காதீர்கள், தோல்வியை ஏற்றுக்கொள்ளாதீர்கள் என்றும், உங்கள் உண்மையான அழைப்பாக நீங்கள் உணர்ந்தவற்றை வாழ்வதற்குக் குறைந்தபட்ச வழிகளைத் தேடுங்கள் என்றும் அறிவுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே, 29, இத்திங்களன்று கொண்டாடப்படும் ஆப்ரிக்க தினத்தை முன்னிட்டு, அந்நாட்டுக் குழந்தைகளைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியின் தூதுவர்களாக இருங்கள், அப்போதுதான் அன்பு, ஒன்றிணைந்து வாழ்வது, உடன்பிறந்த உறவு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் அழகை உலகம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உங்கள் அன்புக்குரிய ஆப்பிரிக்க கண்டம் பயங்கரவாதம், மோசமான நிர்வாகம், ஊழல், இளைஞர்களின் பெரும் வேலையின்மை, இடம்பெயர்வு, சமூகங்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் காலநிலை மற்றும் உணவு நெருக்கடி போன்ற பெரும் சவால்களை எதிர்கொள்கிறது என்றும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

இப்படிப்பட்ட சூழலில், நீங்கள் உதவியற்றவர்களாகவும், மனச்சோர்வடைந்தவர்களாகவும் உணரலாம், மேலும் உங்கள் எதிர்காலம் இருண்டதாகவும், வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதாகவும் நினைக்கலாம் என்று உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இருப்பினும், இன்னும் நீங்கள் இளமையாகவும் திறமையானவராகவும் இருக்கிறீர்கள், நீங்கள் தொடர்ந்து பின்பற்றுவதற்கான உன்னதமான இலட்சியங்கள் மற்றும் பெரிய கனவுகள் உங்களிடம் உள்ளன என்றும் அவர்களை உற்சாகமூட்டினார்.

உங்கள் பெரியவர்களின் அறிவுரைகளும் சாட்சிய வாழ்வும் உங்களை அறிவூட்டட்டும் என்றும், நம் பெரியவர்களுடனும், தாத்தா பாட்டிகளுடனும், நமக்கு முன் வந்தவர்களுடனும் உரையாடுவது, நம்மை மேலும் முன்னேற அனுமதிக்கிறது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

வாழ்க்கையின் சவால்களில் ஒன்று அமைதிக்கான போராட்டம் என்றும், நாம் கடினமான காலங்களில் வாழ்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும் என்றும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் மிகப்பெரும் ஆபத்தில் இருக்கின்றோம், ஆகவே, உங்களைச் சுற்றியும் உங்களுக்குள்ளும் அமைதியுடன் வாழுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 May 2023, 14:03