புதன் மறைக்கல்வி உரை- புனித பிரான்சிஸ் சவேரியாரின் நற்செய்தி அறிவிப்புப் பேரார்வம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
நற்செய்தி அறிவிப்புப் பேரார்வம் என்ற தலைப்பில் தனது மறைக்கல்வி உரையை வழங்கிக் கொண்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மே 17 புதன் கிழமை வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு புனித பிரான்சிஸ் சவேரியாரின் நற்செய்தி அறிவிப்புப் பேரார்வம் பற்றி எடுத்துரைத்தார்.
முதலில் புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமடல் ஐந்தாம் அதிகாரத்தில் உள்ள ஒப்புரவுத் திருப்பணி என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கையாளர்களின் அப்போஸ்தலிக்க பேரார்வம் என்ற தனது தொடர் மறைக்கல்வியின் 13ஆம் தலைப்பில் புனித பிரான்சிஸ் சவேரியாரின் வாழ்க்கை மற்றும் நற்செய்தி அறிவிப்புக்கான அவரது பேரார்வம் பற்றிய தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.
2 கொரி 5,14-15.20
கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில், ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும். வாழ்வோர் இனி தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழவேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார். எனவே, நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே, கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்.
திருத்தந்தையின் உரைச்சுருக்கம்
அன்பான சகோதர சகோதரிகளே: அப்போஸ்தலிக்க பேரார்வம் பற்றிய நமது தொடர்ச்சியான மறைக்கல்வியில், நாம் இப்போது கத்தோலிக்கப் பணிகளின் பாதுகாவலரான புனித பிரான்சிஸ் சவேரியாரைப் பற்றிக் காணலாம். இஸ்பெயினில் பிறந்த பிரான்சிஸ், பாரிஸில் படித்தவர். அங்கு அவர் லயோலாவின் புனித இஞ்ஞாசியரைச் சந்தித்தார். மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து, இயேசு சபையை உருவாக்கினார். அவர்கள் வாழ்ந்த காலத்தின் மிக அவசரத் தேவைகளுக்காகத் திருத்தந்தையின் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். கண்டுபிடிப்புக்களின் காலம் என்று அழைக்கப்படும் பதினாறாம் நூற்றாண்டானது ஒரு சிறந்த மறைப்பணி வெளிப்பாட்டிற்கு அழைப்பு விடுத்தது. எனவே புனித சவேரியார் கிழக்கிந்தியத் தீவுகளுக்குப் புறப்பட்டார். கோவாவில், நற்செய்தி அறிவிப்பு, திருமுழுக்கு, மறைக்கல்வி, நோயுற்றவர்களைக் கவனித்துக்கொள்ளுதல் போன்ற தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்தியாவிலிருந்து மலுகு தீவுகளுக்கும் அங்கிருந்து ஜப்பானுக்கும் சென்றார். சீனாவிற்குள் நுழையும் தனது கனவை நிறைவேற்ற முடியாமல், பிரான்சிஸ் தனது நாற்பத்தாறு வயதில், சீனாவிற்கு அருகிலுள்ள ஷாங்சுவான் தீவில் இறந்தார். நற்செய்தி அறிவிப்பிற்கான அவரது பேரார்வம், ஆழ்ந்த செப வாழ்க்கை போன்றவை, இயேசு கிறிஸ்துவுடனான அன்பான ஒன்றிப்பின் பலனாக இருந்தது. புனித பிரான்சிஸ் சவேரியாரின் எடுத்துக்காட்டான வாழ்க்கையானது, உயிர்த்த ஆண்டவர் மற்றும் அவரது மீட்பளிக்கும் வார்த்தைக்கு மகிழ்ச்சியான சாட்சிகளாகவும், திருஅவையின் பணியை முன்னெடுப்பதற்கான நமது சொந்த முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதாகவும் இருக்கட்டும் இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.
இவ்வாறு தனது உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, இந்தியா, இந்தோனேசியா, கொரியா, தைவான், கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆங்கிலம் பேசும் திருப்பயணிகள் மற்றும் பார்வையாளர்களை அன்புடன் வரவேற்பதாகவும், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் மகிழ்ச்சி, அத்திருப்பயணிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மீதும் நிலைத்திருக்க தந்தையாகிய கடவுளின் அன்பான இரக்கத்தை வேண்டிக்கொள்வதாகவும் கூறி கூடியிருந்த மக்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்