உக்ரைனில் திருப்பீடத்தின் அமைதி முயற்சிகள் தீவிரமடையும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உக்ரைனில் அமைதி நிலவவும், அந்நாட்டிலிருந்து இரஷ்யாவுக்குள் எடுத்துச் செல்லப்பட்டுள்ள உக்ரைன் குழந்தைகளை மீண்டும் சொந்த நாட்டிற்குள் கொண்டுவரவும் அனைத்து முயற்சிகளையும் திருப்பீடம் மேற்கொள்ளும் என அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஹங்கேரி நாட்டில் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து வத்திக்கான் திரும்பும் வழியில் தன்னுடன் பயணித்த சமூக ஊடகவியலாளர்களை விமானத்தில் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எந்தவொரு நாட்டிற்கும் திருத்தூதுப்பயணம் சென்று திரும்பும்போது தன்னுடன் பயணிக்கும் சமூக ஊடகவியலாளர்களை விமானத்தில் சந்தித்து திருத்தந்தையர்கள் உரையாடும் வழக்கத்தையொட்டி, ஞாயிறன்று அவர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைனில் திருப்பீடத்தின் அமைதி முயற்சிகள், இரஷ்யாவுடன் உரையாடல் முயற்சிகள், கிறிஸ்தவ சபைகளிடையே உரையாடல், தான் அண்மையில் உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றது ஆகிய பல்வேறு தலைப்புக்களில் தன் கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
தான் அர்ஜென்டீனா தலைநகரில் இருந்தபோது, அங்கு வாழ்ந்த ஹங்கேரிய மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய ஐரோப்பிய நாடுகள் புலம்பெயர்வோரை வரவேற்பதில் தங்கள் பங்கை ஆற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளுடன் தான் தொடர்பில் இருப்பதாகவும், இரஷ்ய அதிபருடன் நேரடித் தொடர்பு இல்லையெனினும் வத்திக்கானுக்கான இரஷ்ய தூதுவருடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை.
புனித வாரத்திற்கு முந்தைய வாரம், அதாவது மார்ச் மாத இறுதி வாரத்தில் தான் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்றதைக் குறித்தும் சமூக ஊடகத் தொடர்பாளர்களிடம் விவரித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தற்போது நலமடைந்துள்ளதாகவும், போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் இவ்வாண்டு இடம்பெறவுள்ள அனைத்துலக இளையோர் கொண்டாட்டத்தில் தான் கலந்துகொள்வதில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்தார்.
அனைத்துலக கத்தோலிக்க இளையோர் கொண்டாட்டம் திருத்தந்தையின் இருப்புடன் இவ்வாண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் வத்திக்கான் அருங்காட்சியகத்திலிருந்து மூன்று சிலைப்பகுதிகள் கிரேக்க நாட்டிற்கு திருப்பி வழங்கப்பட்டது குறித்தும், கானடாவின் பழங்குடி மக்களின் கலைப் பொருட்களை திருப்பி வழங்குவது குறித்த முயற்சி இடம்பெற்று வருவதாகவும், பண்டைய காலங்களில் மற்ற நாடுகளிடம் இருந்து எடுத்துக்கொண்ட கலைப்பொருட்களை ஒவ்வொரு நாடும் தங்களால் இயன்றால் திருப்பிக் கொடுக்க முனைவது சிறப்பு என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
உக்ரைன் நாட்டிலிருந்து இரஷ்யாவிற்குள் எடுத்துச் செல்லப்பட்டுள்ள குழந்தைகளை உக்ரைனுக்குள் மீண்டும் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் திருப்பீடம் மேற்கொண்டு வருகிறது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடியுள்ள உக்ரைன் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்ந்து உறுதிசெய்யப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்