தங்களையே தனிமைப்படுத்தி ஒரு மாய உலகில் வாழும் நிலை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள் 1986ஆம் ஆண்டு இடம்பெறத் துவங்கியதிலிருந்து தற்போது இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் போர்த்துக்கல்லின் லிஸ்பனில் இடம்பெறவுள்ளது வரையிலான வரலாற்றை எடுத்துரைக்கும் போர்த்துக்கல் சமூகஊடகவியலாளரின் நூலுக்கு முன்னுரை ஒன்று வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்ஜெண்டீனாவின் புவேனஸ் ஐரஸில் இடம்பெற்ற முதல் அனைத்துலக கத்தோலிக்க இளையோர் தினக்கொண்டாட்டம் தவிர ஏனைய அனைத்துலக கத்தோலிக்க இளையோர் தினத்திலும் ஊடகவியலாளராக கலந்துகொண்ட Rádio Renascença வானொலியின் Aura Miguel அவர்களின் ‘லிஸ்பனுக்கான நீண்டதூரப் பயணம்’ என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில், இளையோரின் இன்றைய நிலைகள் குறித்து விவரித்துள்ளார் திருத்தந்தை.
பத்தாண்டுகளுக்கு முன்னால் ஜூலை மாதம் Rio de Janeiroவில் தான் திருத்தந்தையாகக் கலந்துகொண்ட உலக இளையோர் மாநாடு இன்றும் பசுமையாக தன் நினைவில் இருப்பதாக அம்முன்னுரையில் உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களுக்கும், தனக்கும், பொறுப்பேற்றவுடன் முதல் வெளிநாட்டு திருப்பயணமே உலக இளையோர் தினக்கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காகவே இருந்தது என்பதையும் நினைவுகூர்ந்துள்ளார்.
இன்றைய இளையோர் சமுதாயத்தைப் பற்றி எடுத்துரைக்கையில், தங்களையே தனிமைப்படுத்தி ஒரு மாய உலகில் வாழும் நிலைக்கு தங்களை உட்படுத்தியுள்ளார்கள், பொய்யான தேவைகளை உருவாக்கியுள்ள ஒரு வியாபார சந்தைக்கு பலிகடா ஆகியுள்ளார்கள் என்ற கவலையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்றைய உலகில் எவரும் தனித்து மீட்கப்பட முடியாது, அனைவரும் இணைந்தே மனிதகுல மீட்பைக் காணமுடியும் என்பதை கோவிட் பெருந்தொற்று காலம் நமக்குக் கற்றுத் தந்துள்ளபோதிலும், இன்னும் உலகில் ஆயுதக்குவிப்புகளும், போரும் இடம்பெற்றுவருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.
இன்றைய உலகில் நம்மைச் சுற்றி இடம்பெறுபவைகள் குறித்து, குறிப்பாக, அகதி முகாம்களில் வாழ்வோர், புகலிடம் தேடும் பாதையில் கடலில் மரணத்தைச் சந்திப்போர் என மக்களின் துயர்களைக் குறித்து சிந்திக்க இளையோருக்கு அழைப்புவிடுக்கிறேன் என அந்த முன்னுரையில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உணவின்றி, குடிநீரின்றி, போதிய மருத்துவ வசதிகளின்றி பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் துன்புறுவது, வறியோர் செவிமடுக்கப்படாமல் ஒதுக்கப்படுவது, இயற்கை குறித்து அக்கறையின்றி இருப்பது போன்ற நிலைகளை மாற்ற இளையோர் முன்வரவேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.
இத்தகைய ஒரு துயரப் பின்னணியில் இளையோருக்கு அருளையும் அதன் வழி விழிப்புணர்வையும் கொடுக்கும் உலக இளையோர் தினக்கொண்டாட்டங்கள், கிறிஸ்துவுக்கான பணியில் தங்கள் வாழ்வை மற்றவர்களின் நலனுக்காக செலவிட இளையோரைத் தூண்டுவதாக உள்ளது என Aura Miguel அவர்களின் ‘லிஸ்பன் நோக்கிய நீண்டதூரப் பயணம்’ என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்