நற்செய்தியின் நம்பிக்கையை வாழ்ந்து அனுபவியுங்கள் : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இறையாட்சி நெருங்கி வந்து விட்டது (மாற் 1:15) என்ற இறைவார்த்தையை மனதில்கொண்டு நற்செய்தியின் நம்பிக்கையை வாழ்ந்து அனுபவியுங்கள் என்றும், உமது அரசு வருக! என்ற உங்களின் சபை விருதுவாக்கை வாழ்வாக்க இதுவே சிறந்த வழி என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 22, இவ்வியாழன்று, விண்ணேற்பு அன்னையின் அகுஸ்தினார் சபையைச் சேர்ந்த 60 பேரை அவர்களின் 34-வது பொதுப்பேரவையை முன்னிட்டு திருப்பீடத்தில் சந்தித்தவேளை இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சபையின் நிறுவுநரான வணக்கத்துக்குரிய Emmanuel d'Alzon அவர்களின் படிப்பினையின்படி கிறிஸ்துவையும், அன்னை மரியாவையும் திருஅவையையும் அன்புகூரக் கற்றுக்கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
இறையாட்சியின் இந்த நெருக்கம் என்பது உங்களின் செயல்களுக்கு அப்பாற்பட்டு, ஆதரவான மற்றும் உடன்பிறந்த உறவுநிலைத் தேவைப்படுபவர்களில் தொடங்கி, நற்செய்தி அறிவிப்பு வழி மக்களுடன் உங்களை நெருக்கமாக்குவதுதான், இறையாட்சி உங்கள் வழியாக ஒவ்வொருவருக்கும் நெருங்கி வருகிறது என்பதை அவர்களுக்குக் காட்டுகிறது என்றும் விளக்கினார் திருத்தந்தை.
திருப்பயணங்கள் வழி திருத்தூதுப் பணி மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் திருத்தூதுப் பணி என இரண்டு வழிகளில் அவர்கள் சாதித்துள்ள இரண்டு காரியங்கள் குறிதுத்து அவர்களுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பயணங்கள் வழியாகத் திருத்தூதுப் பணி
முதலாவதாக, நீங்கள் தொலைதூர நாடுகளுக்கு, அதாவது, இலத்தீன் அமெரிக்கா வரை பரவியுள்ளீர்கள்; மற்றும் திருஅவையிலிருந்து வெகு தொலைவிலுள்ள பல்வேறு மக்களுக்கும் அர்ப்பண உணர்வுடன் பணியாற்றி வருகிறீர்கள் என்றும் அவர்களைப் பாராட்டினார் திருத்தந்தை.
கிழக்கு ஐரோப்பாவில் திருத்தூதுப் பணி
இரண்டாவதாக, கிறிஸ்தவர்களின் நிலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள மத்திய கிழக்கிலும், கிழக்கு ஐரோப்பாவிலும், போரால் ஆபத்தின் பிடியில் இருக்கும் உக்ரைனிலும் உங்களின் அற்பணவுணர்வுள்ள பணியைத் தொடர நான் உங்களை ஊக்குவிக்கிறேன் என்றும் கூறினார் திருத்தந்தை.
அருள்பணியாளர் டி அல்சன் உங்களுக்குக் கற்பித்தபடி கிறிஸ்துவையும், அன்னை மரியாவையும் திருஅவையையும் அன்புகூரவும், உங்களுக்குள்ளும் உங்களைச் சுற்றியும் இந்த அன்பை வளர்க்கவும் நீங்கள் அஞ்சவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இந்த வழியில் நீங்கள் உங்கள் நெறிமுறைகளுக்கு உண்மையாக இருப்பதுடன் அதனை வாழ்வாக்க புதுமையான வழிகளைக் கண்டுபிடிப்பீர்கள் என்றும் உரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்