போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்கள் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்கள்  

அன்பான உக்ரைன் அமைதிபெறட்டும்! : திருத்தந்தை பிரான்சிஸ்

போரால் அதிகம் துயருற்று வரும் உக்ரைன் நாட்டு மக்களைப் புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகியோரின் பாதுகாவலில் ஒப்புக்கொடுக்கின்றேன் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

போரால் ஏற்பட்டுள்ள பல்வேறு துன்பங்களால் சூழப்பட்டுள்ள அன்பான உக்ரைன் விரைவில் அமைதி பெற ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம் என்று வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 28, இப்புதனன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற புதன் பொது மறைக்கல்வி உரைக்குப் பின்பு அங்குக் கூடியிருந்த பல்வேறு நாட்டுத் திருப்பயணிகளிடம் இவ்வாறு விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரால் அதிகளவு துயருறும் உக்ரைன் நாட்டை நாம் மறந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். 

ஜூன் 29, வியாழனன்று, புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா சிறப்பிக்கப்படவிருக்கும் வேளை, மோதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டை அவர்களின் பரிந்துரை செபத்திலும் பாதுகாவலிலும் ஒப்படைதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் குறுஞ்செய்தி

மேலும், ஜூன் 28, இப்புதனன்று, வெளியிட்டுள்ள குறுஞ்செய்தி ஒன்றில், கல்வி என்பது சிந்தனைகளால் மூளையை நிரப்புவதல்ல, மாறாக, மனித மற்றும் ஆன்மிக வளர்ச்சியின் பயணத்தில் மாணவர்களுடன் இணைந்து செல்வதையும் அவர்களை ஊக்குவிப்பதையும் குறிக்கிறது என்று கூறினார்

உயிர்த்த இயேசுவுடனான நட்பு எவ்வாறு இதயத்தை விரிவுபடுத்தி வாழ்க்கையை மனிதம் சார்ந்ததாக மாற்றுகிறதோ அவ்வாறே கல்வியும் இருக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 June 2023, 14:24