உலக இளையோர் நாளுக்கான திருத்தந்தையின் பயணத்திட்டம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பனில் நடைபெற இருக்கும் 37ஆவது உலக இளையோர் நாளை முன்னிட்டு திருத்தந்தையின் பயணத்திட்டங்கள் குறித்த தகவல்கள் இன்று வெளியிடப்பட்டன.
ஜூன் 6 செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அத்தகவல்களின்படி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் மாதம் 2 புதன்கிழமை முதல் 6 ஞாயிற்றுக்கிழமை வரை லிஸ்பனில் நடைபெறும் 37 ஆவது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.
ஆகஸ்ட் 2 புதன்கிழமை தொடங்க உள்ள தனது லிஸ்பன் பயணத்தில் அரசுத்தலைவர்கள், அதிகாரிகள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார், அருள்பணித்துவ மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரையும் சந்திக்க உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 4 வெள்ளிக்கிழமை காலை லிஸ்பனில் இயங்கும் இரக்கப்பணிகளுக்கான அமைப்பினரைச் சந்திக்க இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலையில் இளையோரோடு இணைந்து சிலுவைப்பாதையினை தியானிக்க உள்ளார்.
ஆகஸ்ட் 5 சனிக்கிழமை போர்த்துக்கலில் உள்ள பாத்திமா அன்னை ஆலயம் செல்ல இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 6 ஞாயிற்றுக்கிழமை காலை இளையோர்க்கான திருப்பலியைச் சிறப்பித்து அன்று இரவே வத்திக்கான் திரும்புவார்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்