சாந்தா மார்த்தா இல்லம் திரும்பினார் திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
அறுவை சிகிச்சை முடிந்து நல்ல உடல் நலத்துடன் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லம் திரும்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 7ஆம் தேதி குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறுவை சிகிச்சை முடிந்து நல்ல உடல் நலத்துடன் ஜூன் 16 வெள்ளிக்கிழமை காலை மருத்துவமனையில் இருந்து சாந்தா மார்த்தா இல்லம் திரும்பினார்.
உரோம் உள்ளூர் நேரம் காலை 8.45 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் நண்பகல் 12.15 மணிக்கு ஜெமெல்லி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மருத்துவமனையின் வளாகத்தில் பணியாளர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் ஊடகப்பணியாளர்கள் ஆகியோர் மகிழ்வுடன் கரங்களைத் தட்டி வரவேற்றனர்.
நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்று நகைச்சுவை உணர்வுடன் மக்களைப் பார்த்து கூறிய திருத்தந்தை தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரம் முதல் இன்று வரை தனக்காக செபித்த, பணியாற்றிய, உதவிய உள்ளங்கள், தன் உடல்நலம் பற்றிய செய்திகளை மக்களுக்கு வழங்கிய ஊடகப் பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் தன் நன்றியினைத் தெரிவித்தார்.
மருத்துவமனையில் இருந்து கிளம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் மேரி மேஜர் பேராலயம் சென்று தனது உடல்நலனைக் காத்த அன்னை மரியாவிற்குத் தன் நன்றியினைத் தெரிவித்துவிட்டு சாந்தா மார்த்தா இல்லம் திரும்பினார்.
மருத்துவமனையில் இருந்து திரும்பியிருக்கும் திருத்தந்தையின் ஜூன் 18 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மூவேளை செபஉரை உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளையில் ஜூன் 21 புதன்கிழமை பொது மறைக்கல்வி உரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
சாந்தா மார்த்தா இல்லத்திற்கு பெருஜினோ வாயில் வழியாக நுழைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சபையின் பொதுப்பேரவைக்காக உரோமில் கூடிய மரியா பம்பினா சபை அருள்சகோதரிகளை சந்தித்தார்.
பெருஜினோ வாயிலில் சட்ட அமலாக்க அதிகாரிகளை சந்தித்து அவர்களது பணிக்காக தன் நன்றியினைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் உள்ள தன் அறைக்குச் சென்று ஓய்வெடுத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்