அனைவரும் அமைதியின் காவலர்களாக இருங்கள் : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இரக்க உணர்வு என்பது, நம் நம்பிக்கையின் இதயத்தில் இருக்கும் ஒரு வார்த்தை என்றும், இது மனிதகுலத்தின் துன்பங்களில் முழுமையாகப் பங்கேற்கும் கடவுளின் அன்பை நமக்குக் காட்டுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 22, இவ்வியாழனன்று, ROACO எனப்படும் இளையோர் அமைப்பின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, ஊடுருவக் குத்தப்பட்ட கடவுளின் இதயம், பிறரன்புப் பணியை ஒரு தொழிலாக, நன்மையின் அதிகாரத்துவம் அல்லது அதைவிட மோசமான அரசியல் நலன்களின் வலையமைப்பாக நினைப்பதிலிருந்து நம்மை விடுவிக்கிறது என்று கூறினார்.
குறிப்பாக, கிறிஸ்தவர்களாகிய நமக்கு, திறந்த இதயத்துடன் இறைவார்த்தையைக் கேட்பது உண்மையிலேயே நன்மை பயக்கிறது என்று கூறி மகிழ்ந்த திருத்தந்தை, நம் சொந்தத் திட்டங்களால் அல்ல, எல்லா மனிதர்களையும் அரவணைத்து மீட்க விரும்பும் கடவுளின் இரக்கமுள்ள திட்டத்தால் இயேசுவின் சகோதரர் சகோதரிகளாகிய நம்மை ஒளிரச் செய்து வழிநடத்த அனுமதிப்பதும் மிகச் சிறந்ததாகவே அமையும் என்றும் உரைத்தார்.
ROACO-வின் இந்தச் சந்திப்பின்போது, கிழக்குத் தலத்திருஅவைகளின் இளையோரிடமிருந்து வரும் எதிர்பார்ப்புகள் குறித்து நீங்கள் கவனம் செலுத்தியுள்ளீர்கள் என்றும், இது ஒரு புத்திசாலித்தனமான தேர்வு என்றும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இளைஞர்கள் பொது நன்மையின் கதாநாயகர்களாக இருக்க விரும்புகிறார்கள், இது சமூக நடவடிக்கையின் திசைகாட்டியாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அன்பான இளையோரே, நீங்கள் பொது நலத்தை மீட்டெடுப்பது உயிர்வாழ்வதற்கு இன்றியமையாத நிபந்தனையாக இருக்கும் நாடுகளில் வாழ்கிறீர்கள் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வித்தியாசமான, பிளவுபடாத உலகத்தைக் கனவு கண்டு அதனை அறிவிக்கும் இறைவாக்கினார்களாகிய நீங்கள் அனைவருக்கும் அமைதியின் காவலர்களாக இருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்