ஏழையின் முகத்தில் இறைவனைக் காண வேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
நாம் ஓர் ஏழையின் முன் நிற்கும் போது நமது முகத்தை, பார்வையை வேறுபக்கம் திருப்ப இயலாது என்றும் அவ்வாறு செய்தால் கடவுளாம் இயேசுவின் முகத்தைப் பார்ப்பதை நாம் தவிர்க்கின்றோம் என்றும் தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 13 செவ்வாய்க்கிழமை ஏழைகளின் பாதுகாவலராம் புனித பதுவை அந்தோணியார் திருவிழாவைத் திருஅவை சிறப்பிக்கும் வேளையில், கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கும் ஏழாவது உலக வறியோர் நாளுக்கான செய்தியின் மையக்கருத்தை இவ்வாறு குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருவிவிலியத்தின் தோபித்து நூலின் இறைவார்த்தைகளான, ‘‘ஏழை எவரிடமிருந்தும் உன் முகத்தை திருப்பிக்கொள்ளாதே‘‘. என்ற வரிகளை மையப்படுத்தி வெளியிட்டுள்ள அக்குறுஞ்செய்தியில் நாம் ஒரு ஏழையைச் சந்திக்கும் போது கடவுளைச் சந்திக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருவழிபாட்டு ஆண்டின் பொதுக் காலம் 33வது ஞாயிறன்று, அதாவது கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கு முந்தைய ஞாயிறு கத்தோலிக்கத் திருஅவையில் உலக வறியோர் நாளாக 2017ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இறைஇரக்கத்தின் ஆண்டை நிறைவுசெய்த வேளையில், உலக வறியோர் நாள் ஒவ்வோர் ஆண்டும் திருவழிபாட்டு ஆண்டின் பொதுக் காலம் 33வது ஞாயிறன்று, சிறப்பிக்கப்பட வேண்டும் என்ற திருத்தந்தையின் அழைப்பிற்கிணங்க ஏழாவது உலக வறியோர் நாளானது வரும் நவம்பர் மாதம் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைக் கொண்டாடப்பட உள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்