வணக்கத்திற்குரியவராக ஏற்கப்பட்ட அருள்சகோதரி லூசியா
மெரினா ராஜ் – வத்திக்கான்
பாத்திமா அன்னை காட்சியைக் கண்டவர்களுள் ஒருவரான அருள்சகோதரி லூசியா அவர்களின் புண்ணிய மற்றும் வீரத்துவ வாழ்வு பற்றிய விவரங்களானது ஜூன் 22 இவ்வியாழன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஏற்கப்பட்டது.
பாத்திமா காட்சி கண்டவரான அருள்சகோதரி Lucia de Juesus Rosa dos Santos உட்பட, ஐந்து புதிய இறையடியார்களின் புண்ணிய வாழ்வானது திருத்தந்தையால் ஏற்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான விவரங்களை புனிதர் மற்றும் அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் மார்செல்லோ செமெராரோ திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து சமர்ப்பித்தார்
கார்மலேட் சபை அருள்சகோதரியான லூசியா டி ஜீசஸ் ரோசா டோஸ் சாண்டோஸ், தனது உறவினர்களான பிரான்சிஸ்கோ மற்றும் ஜெசிந்தா மார்டோ ஆகியோருடன் பாத்திமாவில் அன்னை மரியாவின் காட்சியைத் தொடர்ச்சியாகக் கண்டவர். ஜெசிந்தா பிரான்சிஸ்கோ இருவரும் ஏற்கனவே புனிதர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் லூசியாவின் புனிதத்துவ வாழ்வானது தற்போது ஏற்கப்பட்டுள்ளது.
1916ஆம் ஆண்டு மே 13ஆம் நாள் முதல், லூசியா மற்றும் அவரது இரண்டு உறவினர்களான ஜெசிந்தா பிரான்சிஸ்கோ ஆகியோர் போர்ச்சுகலின் பாத்திமா பகுதியில் அன்னை மரியாவின் எழில்மிகு காட்சியைக் கண்டனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு காய்ச்சலால் ஜெசிந்தா மற்றும் பிரான்சிஸ்கோ இளவயதிலேயே இறந்து விட, லீரியாவின் ஆயர் ஜோஸ் ஆல்வ்ஸின் தூண்டுதலின் பேரில் கார்மலேட் சபை துறவியாக மாறினார் அருள்சகோதரி லூசியா.
தனது வாழ்நாளின் முழு நேரத்தையும் பாத்திமாவில் அன்னை மரியா அளித்த செய்திகளுக்காக அர்ப்பணித்த அருள்சகோதரி லூசியா, கோயம்ப்ராவில் உள்ள கார்மல் அன்னை இல்லத்தில் 2005ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் நாள் இறந்தார்.
2017 ஆம் ஆண்டு பாத்திமா அன்னை காட்சியின் நூறாவது ஆண்டில் பிரான்சிஸ்கோவிற்கும் ஜெசிந்தாவிற்கும் புனிதர் பட்டம் வழங்கப்பட்ட நிலையில், ஜூன் 22 வியாழனன்று அருள்சகோதரி லூசியாவின் வீரத்துவ வாழ்வும் புனிதர் பட்ட நிலைகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1936ஆம் ஆண்டில் இஸ்பானிய உள்நாட்டுப் போரின்போது கொல்லப்பட்ட இருபது பேரின் தியாக வாழ்வையும் திருஅவை அங்கீகரித்துள்ளது.
இஸ்பெயினில் துன்புறுத்தப்பட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மறைசாட்சிகள் ஏற்கனவே புனிதர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள், வீரத்துவ வாழ்விற்கான காரணங்கள், பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்