மங்கோலிய திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்கு மற்றும் இலச்சினை
மெரினா ராஜ் – வத்திக்கான்
வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் திருத்தந்தை மேற்கொள்ள இருக்கும் மங்கோலிய நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்காக ‘‘ஒன்றிணைந்து நம்பிக்கைக் கொள்ளுதல்‘‘ என்பது வெளியிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 31 வியாழன் முதல் செப்டம்பர் மாதம் 4 திங்கள்கிழமை வரை மங்கோலிய நாட்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ள இருக்கும் பயணத்தின் இலச்சினையானது திருத்தூதுப்பயணம், அரசுப்பயணம் என்னும் இரண்டையும் வலியுறுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்களின் நற்பண்பான நம்பிக்கையானது கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களிடையேயும் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைக்கும் விதமாகவும், திருஅவை மற்றும் மங்கோலியா இரண்டிற்கும் இடையிலுள்ள ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் ஒன்றிணைந்து நம்பிக்கைக் கொள்ளுதல் என்பது விருதுவாக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. திருத்தந்தையின் வருகையானது, அளவில் சிறியதாகவும் விளிம்பு நிலையிலும் இருக்கக் கூடிய கிறிஸ்தவர்களைக் கொண்ட இப்பகுதி மக்களுக்கும், மங்கோலிய தலத்திருஅவைக்கும் நம்பிக்கை மற்றும் ஊக்கத்தின் அடையாளமாக விளங்குகின்றது.
திருத்தூதுப் பயண இலச்சினையில் மங்கோலியாவின் வரைபடமானது மங்கோலியக் கொடியின் வண்ணங்களான சிவப்பு மற்றும் நீல நிறத்தால் வரையப்பட்டுள்ளது. வரைபடத்தின் உள்ளே சிலுவையும் அதன் அருகில் ஜெர் எனப்படும் பாரம்பரிய மங்கோலிய வீடும் காணப்படுகின்றது. வீட்டின் உள்ளிருந்து வெளிவரும் மஞ்சள்நிறப் புகையானது வத்திக்கானை அடையாளப்படுத்துகின்றது. இவை இரண்டிற்கும் இடையில் மங்கோலிய எழுத்துக்களால் ஒன்றிணைந்து நம்பிக்கைக் கொள்ளுதல் என்பது இருபக்கங்களிலும் எழுதப்பட்டு திருத்தந்தையின் மங்கோலிய திருத்தூதுப் பயணத்தின் இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி உரோம் உள்ளுர் நேரம் மாலை 6.30 மணிக்கு வத்திக்கானிலிருந்து மங்கோலியா நோக்கிப் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நான்கு நாள் பயணத்தில் மங்கோலிய அரசுத்தலைவர்கள், கத்தோலிக்கத் தலைவர்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார், மேய்ப்புப்பணியாளர்கள் ஆகியோரை சந்திக்க உள்ளார்.
மேலும், செப்டம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை காலை கிறிஸ்தவ ஒன்றிப்பு குழு மற்றும் பல்சமய அமைப்பைச் சந்திக்க உள்ள திருத்தந்தை மாலையில் மங்கோலிய மக்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றி செப்டம்பர் 4 திங்கள்கிழமை வத்திக்கான் திரும்ப உள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்