முதியோருடன் இளையோர் முதியோருடன் இளையோர்  (@Comunità Sant'Egidio)

சந்திப்பின் மகிழ்ச்சியைக் கண்டடைய அழைப்பு

போர்த்துக்கலுக்குச் செல்லும் இளையோரை அடையாளப்படுத்தும் வகையில் ஐந்து கண்டங்களைச் சார்ந்த ஐந்து இளையோர்க்கு திருத்தந்தை உலக இளையோர்தின திருப்பயணத்திற்கான சிலுவை அடையாளத்தை வழங்க உள்ளார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இளையோர் மற்றும் முதியோர் ஒருவரை ஒருவர் சந்திப்பதன் வழியாக சந்திப்பின் மகிழ்ச்சியை கண்டடைய அழைக்கப்படுகின்றனர் என்று டுவிட்டர் குறுஞ்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையில் சிறப்பிக்கப்படும் மூன்றாவது ஆண்டு தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும் முதியோர் உலக நாளுக்கான சிறப்பு அழைப்பை டுவிட்டர் குறுஞ்செய்தியாக விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க செல்லும் முன் இளையோர் தங்களது தாத்தா பாட்டிகளை சந்தித்துவிட்டு செல்லவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஜூலை 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் சிறப்பிக்கப்பட இருக்கும் மூன்றாவது தாத்தா பாட்டி மற்றும் முதியோர் தின திருப்பலிக்கு இத்தாலி முழுவதிலும் உள்ள முதியவர்கள், தாத்தா பாட்டிகள், அவர்களின் பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் ஆகிய அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகின்றார் என்ற கருப்பொருளில் கொண்டாடப்பட இருக்கும் மூன்றாவது ஆண்டு உலக தாத்தாக்கள் பாட்டிகள் மற்றும் முதியோர்க்கான உலக நாளானது இளையோர் மற்றும் முதியோரின் சந்திப்பு, மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக இருக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஞாயிற்றுக்கிழமை திருத்தந்தையின் தலைமையில் நடைபெறும் இத்திருப்பலிக் கொண்டாட்டத்தின் முடிவில், போர்த்துக்கலுக்குச் செல்லும் இளையோரை அடையாளப்படுத்தும் வகையில் ஐந்து கண்டங்களைச் சார்ந்த ஐந்து இளையோர்க்கு திருத்தந்தை உலக இளையோர்தின திருப்பயணத்திற்கான சிலுவை அடையாளத்தை வழங்க உள்ளார்.

முதியோர், இளையோர் என எல்லா நிலையில் உள்ளவரும் பங்கேற்க இருக்கும் இத்திருப்பலி நிகழ்கால வாழ்வை உயர்வாகக் கருதி சிறப்பாக வாழ இளையோருக்கும், வாழ்ந்த நாட்களை நன்றியின்  நாட்களாகப் பார்க்க முதியோருக்கும் வாய்ப்பினை வழங்குவதாக அமைய உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2023, 11:22