இரஷ்ய உக்ரைன் பகுதியில் தானிய விநியோகம் துவக்கப்பட
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
கருங்கடல் உடன்படிகையின்படி, துன்புறும் மக்களுக்கான தானிய விநியோகம் மீண்டும் துவக்கப்பட வேண்டும் என விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பல ஆயிரக்கணக்கான மக்கள் பசியால் வாடிவரும் நிலையில், அவர்களின் உயிர்களைக் காப்பாற்றும் நோக்கத்தில் கருங்கடல் உடன்படிக்கையின்படி, தானிய வினியோகம் செய்யப்பட இரஷ்ய கூட்டமைப்பு உதவ வேண்டும் என தன் ஞாயிறு மூவேளை ஜெப உரைக்குப்பின் விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உக்ரைன் நாட்டில் போரால் மக்கள் பெருமளவில் துன்பங்களை அனுபவித்து வருவதோடு, அங்குள்ள தானிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்ற திருத்தந்தை, தானியம் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட இரஷ்ய அரசு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மனிதகுலத்திற்கான உணவாக இறைவன் வழங்கிய கொடையாகிய தானியத்தை போர் வழியாக அழிப்பது என்பது இறைவனையே அவமதிப்பதாகும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பசியால் துயருறும் பல ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல் விண்ணை நோக்கி எழும்பியுள்ளது என மேலும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி லெபொனானின் பெய்ரூட் துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் 218 பேர் உயிரிழந்ததன் மூன்றாமாண்டு நினைவு இவ்வாரத்தில் இடம்பெறுவதைப் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிரிழந்தவர்களுக்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் தான் செபிப்பதாகவும் உறுதிகூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்