லாம்பதுசா கடற்கரையில் சிறுவன்  லாம்பதுசா கடற்கரையில் சிறுவன்  

திருத்தந்தையின் லாம்த்பதூசா திருத்தூதுப்பயண பத்தாமாண்டு நிறைவு

2014 முதல் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்திய தரைக்கடல் இடம்பெயர்வு பாதையில் இறந்ததாகவும், காணாமல் போனதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடலில் காணாமல் போன குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோருக்காக செபிப்பதற்காக இத்தாலிய தீவான லாம்பதுஸாவிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் தனது திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கி ஜூலை 8 சனிக்கிழமை இன்றுடன் பத்தாண்டு  நிறைவடைகின்றது.

தெற்கு இத்தாலிப் பகுதியான சிசிலி கடற்கரைப்பகுதியானது மத்திய கிழக்குப் பகுதிகள், ஆசியா, ஆப்ரிக்கா, குறிப்பாக லிபிய கடற்கரைப் பகுதிகளிலிருந்து ஐரோப்பாவிற்குள் நுழைய விரும்பும் மக்கள் குடிபெயரும் பகுதியாகத் திகழ்கின்றது.

உலகமயமாக்கலின் அலட்சியத்தன்மை நம்மைப்பற்றி மட்டுமே சிந்திக்கக் கூடியவர்களாகவும், மற்றவர்களின் அழுகையைக் கண்டு உணர்வற்றவர்களாகவும் நம்மை மாற்றுகின்றது என்று  திருத்தந்தை கண்டித்ததை நினைவுகூரும் லாம்பதுசா கடல்சார் பணியாளார்கள், "உனது சகோதரன் எங்கே? அவருடைய இரத்தம் என்னை நோக்கிக் கூக்குரலிடுகிறது‘‘ என்று ஆண்டவர் காயீனை நோக்கிக் கேட்ட கேள்வி இன்று நம் ஒவ்வொருவரிடமும் கேட்கப்பட்ட கேள்வி என்ற திருத்தந்தையின் மறையுரை வரிகளையும் எடுத்துரைத்துள்ளனர்.

கடினமான சூழ்நிலைகளில் இருந்து சிறிது அமைதியையும் தங்கள் குடும்பங்கள் வாழ்வதற்கு ஒரு சிறந்த இடத்தைத் தேடிக்கொண்டிருந்த அவர்கள் மரணத்தைக் கண்டார்கள் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் லிபியா மற்றும் துனிசியாவை இத்தாலியுடன் இணைக்கும் ஐரோப்பாவிற்கான மத்திய தரைக்கடல் இடம்பெயர்வு பாதையில் IOM எனப்படும், இடம்பெயர்வுக்கான பன்னாட்டு அமைப்பு 2014 முதல் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் காணாமல் போனதாகவும் பதிவு செய்துள்ளது.

2023ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று மத்தியதரைக் கடலில், 750 பயணிகளை ஏற்றிச் சென்ற மீன்பிடி இழுவை படகு கிரேக்க கடற்கரையில் கவிழ்ந்து பலர் இறந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 July 2023, 13:13