புனித தாமஸ் அக்குவினாஸ் புனித தாமஸ் அக்குவினாஸ்   (© Biblioteca Apostolica Vaticana)

பிறரன்பால் தொமினிக்கன் துறவுசபை மேன்மை கட்டியெழுப்பப்பட்டுள்ளது

தொமினிக்கன் சபை துறவியான புனித தாமஸ் அக்குவினாஸ் அவர்கள், ஒரு பெரிய தத்துவஞானியாகவும், இறையியல் வல்லுனராகவும் அறியப்படுகிறார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தனித்தன்மை வாய்ந்த அறிவு நுட்பத்தை செபம் வழியாகவும், எழுத்துக்கள் வழியாகவும் பகிர்ந்துகொண்ட தொமினிக்கன் அருள்பணியாளரும் மறைவல்லுனருமான புனித தாமஸ் அக்குவினாஸ் அவர்களின் சிறப்புக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள உள்ள தன் பிரதிநிதிக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவல்லுனர் தாமஸ் அக்குவினாஸ் அவர்கள் புனிதராக அறிவிக்கப்பட்டதன் 700ஆம் ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி, புனிதர்பட்ட நிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவர், கர்தினால் மர்செல்லோ செமராரோ அவர்களை தன் பிரதிநிதியாக அறிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவருக்கு அனுப்பியுள்ள செய்தியில், அறிவு நுட்பத்தால் அல்ல மாறாக, பிறரன்பால் தொமினிக்கன் துறவுசபையின் மேன்மை கட்டியெழுப்பப்பட்டுள்ளது என அத்துறவுசபையைப் புகழ்ந்துள்ளார்.

புனித தாமஸ் அக்குவினாஸ் இறைபதம் சேர்ந்த இத்தாலியின் Fossanova துறவு மடத்தில் ஜூலை மாதம் 18ஆம் தேதி இடம்பெற உள்ள 700ஆம் ஆண்டு கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் அனைவரும் தங்கள் தினசரி வாழ்வில் விசுவாச பேரார்வத்தை வெளிப்படுத்துபவர்களாகவும், தங்கள் பலத்தை புதுப்பிப்பவர்களாகவும், கிறிஸ்துவின் மீதும் நற்செய்தியின் மீதும் தங்கள் அன்பை வெளிப்படுத்துபவர்களாகவும் செபம், மற்றும் தியானம் வழி மாறுவார்கள் என்ற நம்பிக்கையையும்  தன் செய்தியில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

இத்தாலியின் Roccasecca என்னுமிடத்தில் 1225ஆம் ஆண்டு பிறந்து தொமினிக்கன் சபை துறவியான புனித தாமஸ் அக்குவினாஸ் அவர்கள், ஒரு பெரிய தத்துவஞானியாகவும், இறையியல் வல்லுனராகவும் அறியப்படுகிறார்.

இத்தாலியின் Fossanova துறவு மடத்தில் 1274ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி இறைபதம் சேர்ந்த இவரை, 1323ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி திருத்தந்தை 22ஆம் யோவான் புனிதராக அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 July 2023, 13:24