போர்த்துக்கல் திருத்தூதுப்பயணம் ஒரு முன்தூது
மெரினா ராஜ் - வத்திக்கான்
1985-ஆம் ஆண்டு புனித திருத்தந்தை ஜான் பால் அவர்களால் துவக்கப்பட்ட உலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள், அனைத்துலக அளவில் திருத்தந்தை மற்றும் திருஅவை அதிகாரிகள் முன்னிலையில் இளையோர் பங்கேற்புடன் தொடர்ந்து சிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் இவ்வாண்டு ஆகஸ்ட் 2 புதன்கிழமை முதல் 6 ஞாயிற்றுக்கிழமை வரை லிஸ்பனில் நடைபெற உள்ள 37ஆவது உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 42ஆவது திருத்தூதுப்பயணமாகிய போர்த்துக்கல் திருத்தூதுப்பயணம் ஒரு முன் தூது பற்றி இன்றைய நம் வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சியில் காணலாம்.
2017 ஆம் ஆண்டு மே மாதம் போர்த்துக்கல்லில் உள்ள பாத்திமா அன்னை திருத்தலத்திற்கு சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர்த்துக்கலுக்கு இம்முறை செல்ல இருப்பது இரண்டாவது முறையாகும். 1967ஆம் ஆண்டு திருத்தந்தை புனித ஆறாம் பவுல், 1982, 1991, 2000 ஆகிய ஆண்டுகளில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால், 2010ஆம் ஆண்டு திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் ஆகியோர் போர்த்துக்கல் பாத்திமா அன்னை திருத்தலத்திற்கு சென்றதையடுத்து தனது தலைத்துவப்பணியில் இரண்டாவது முறையாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர்த்துக்கலில் உள்ள பாத்திமா அன்னையின் திருத்தலத்திற்கும் இப்பயணத்தின் போது செல்ல இருக்கின்றார். 1917ம் ஆண்டு, மே மாதம் 13ம் தேதி, போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா நகரில், மூன்று இடையர்களுக்கு, மரியன்னை தோன்றிய அற்புத நிகழ்வின் முதல் நூற்றாண்டைக் கொண்டாட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாத்திமாவுக்கு திருப்பயணியாக 2017 ஆம் ஆண்டு மே 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் சென்றார். மேலும், இத்திருத்தூதுப் பயணத்தின்போது, பாத்திமா திருத்தலத்தில் கூடியிருந்த இலட்சக்கணக்கான திருப்பயணிகள் முன்னிலையில், பாத்திமா அன்னையின் காட்சியைக் கண்ட மூன்று இடையர்களில், அருளாளர்களான பிரான்சிஸ்க்கோ மார்த்தோ, ஜெசிந்தா மார்த்தோ ஆகிய இருவரையும் புனிதர்களாக உயர்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
போர்த்துக்கல் திருத்தூதுப் பயணத்தின் இலச்சினை
லிஸ்பனில் நடைபெற உள்ள உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களுக்கான கருப்பொருளாக லூக்கா நற்செய்தி 1; 39 இல் உள்ள இறைவார்த்தையான மரியா எழுந்து விரைந்து சென்றார் என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே இலச்சினையில் சிலுவை வடிவத்தின் நடுவே அன்னை மரியாவின் உருவமும் செபமாலையும் தூய ஆவியின் வழிநடத்துதலை உணர்த்தும் விதமாக மஞ்சள் நிற வளைவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளரும் இளம் போர்த்துகீசிய வடிவமைப்பாளருமான Beatriz Roque Antunes கூறுவது போல தூய ஆவியானவர் எழும்பும் பாதையில் கடக்கும் முக்கிய அங்கமாக சிலுவை உள்ளது. நியாயமான மற்றும் மனித உடன்பிறந்த உறவுடன் கூடிய உலகத்தை உருவாக்குவதில் இளையோர் நின்றுவிடாமலும் தங்களை முன்னிருத்துபவர்களாக இல்லாது வாழவும் ஓர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலச்சினையில் இருக்கும் பச்சை மஞ்சள் மற்றும் சிவப்பு நிற வண்ணங்கள் போர்த்துக்கல் நாட்டுக் கொடியினை அடையாளப்படுத்துகின்றன. இலச்சினையில் உள்ள கிறிஸ்துவின் சிலுவையானது, மனிதகுலத்தின் மீது கடவுளின் எல்லையற்ற அன்பின் அடையாளமாகவும், இவ்வுலகில் பிறக்கும் எல்லாவற்றின் முக்கியமான மையப்பொருளாகவும் வரையப்பட்டுள்ளது.
அன்னை மரியா தன் உறவினர் எலிசபெத் அம்மாவிற்கு உதவ உடனடியாக புறப்பட்டு விரைந்து சென்றார். இச்செயலானது இன்றைய இளையோர்க்கு "உள்மன வீரியம், கனவுகள், உற்சாகம், நம்பிக்கை, பெருந்தன்மை" ஆகியவற்றைப் புதுப்பிக்க அழைப்பு விடுக்கின்றது. சிலுவையின் நடுவே செல்லும் மஞ்சள் நிற வளைவு தூய ஆவியின் வழி நடத்துதலைக் குறிக்கின்றது.
அன்னை மரியின் அருகில் உள்ள ஜெபமாலையானது போர்த்துக்கல் மக்களின் ஆன்மிகத்தன்மையை வெளிப்படுத்துகின்றது. அன்னை மரியாள் மற்றும் தூய ஆவியின் அருகில் செபமாலை இடம்பெற்றிருப்பதற்குக் காரணம், போர்த்துக்கலை நோக்கிய திருப்பயணிகளின் அனுபவத்தை அடிக்கோடிட்டு காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புனித லூக்காவின் நற்செய்தியில் சித்தரிக்கப்பட்டுள்ள இளம் அன்னை மரியாவின் உருவத்தை அடையாளப்படுத்தும் விதமாகவும், இளையோர்க்கு அன்னை மரியாவின் செயலை அதிகமாக வெளிப்படுத்தும் விதமாகவும் வரையப்பட்டுள்ளது. இளம் அன்னை மரியாவின் உருவமானது இறைவனின் தாயாகும் முன்பே, உலகிற்கு ஒளியினைக் கொண்டு வந்தவர் அவர் என்பதனை எடுத்துரைக்கும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அன்னை மரியின் தாழ்ச்சி மற்றும் உறுதியான மனதினை வெளிப்படுத்தும் விதமாக சாய்வாக வரையப்பட்டுள்ளது.
உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களுக்கான நினைவுச்சின்னம்
நினைவு சின்னத்தின் முன்புறம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உருவமும், அதைச் சுற்றி FRANCISCVS PONTIFEX MAXIMVS என இலத்தீனில் அவர் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. பின்புறம் அரைக்கோள வடிவத்தில் மையத்தில், லிஸ்பன் நகரில் உள்ள அன்னை மரியா திருத்தலம் வடிக்கப்பட்டுள்ளது. அதைச் சுற்றி, வட்ட வடிவில், "DIES MVNDIALIS IVVENTVTIS LISBONAE MMXXIII" என்ற லத்தீன் வார்த்தைகளும், மேலே, இரண்டு கோபுரங்களுக்கு இடையே, உலக் இளையோர் தினக் கொண்டாட்டங்களுக்கான இலச்சினையும் தனித்து நிற்கிறது.
வெளிநோக்கிய வட்டத்தில், உலக இளையோர் தினக் கொண்டாட்டங்க|ளுக்குக் காரணமான பாதுகாவலர்கள், புனிதர்கள் மற்றும் அருளாளர்கள் என இளையோர் சேவைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களின் உருவங்களை வெளிப்படுத்தும் விதமாக 13 ஒளிவிளக்குகளும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
உலக இளையோர் தினத்தின் பங்கேற்கும் இளையோர்க்கு நல்லொழுக்கத்தின் எடுத்துக்காட்டுகளாக லிஸ்பன் மறைமாவட்டத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட புனிதத்தின் பதின்மூன்று விளக்குகள் அடையாளப்படுத்துபவைகள், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால், புனித தொன்போஸ்கோ, புனித வின்சென்ட், புனித அந்தோனி, மறைசாட்சியான புனித பர்த்தலோமியோ, ஜான் தே பிரிட்டோ, போர்த்துக்கல்லின் அருளாளார் ஜோவான்னா, அருளாளர் ஜான் பெர்னாண்டஸ், அருளாளர் குழந்தை இயேசுவின் மரியா கிளாரா, அருளாளர் பியர் ஜோர்ஜியோ ஃபிராசாத்தி, அருளாளர் மார்செல் கால்லோ, அருளாளர் கியாரா பதானோ மற்றும் அருளாளர் கார்லோ அகுடிஸ் ஆகியோர்களாவர்.
தலை நகரமான லிஸ்பன்
போர்ச்சுகலின் தலைநகரமான லிஸ்பன் அட்லாண்டிக் கடற்கரை அருகிலும், டகோ ஆற்றின் முகப்பிலும் அமைந்துள்ளது. நாட்டின் மிக முக்கியமான நிர்வாக மையம், நாட்டின் முக்கிய துறைமுகம், நாட்டின் மிகப்பெரிய நகர்ப்புற, பொருளாதார, கலாச்சார மற்றும் சுற்றுலா மையமாகவும் திகழ்கின்றது. ஃபீனீசியர்களால் உலிசிபோ என்ற பெயருடன் நிறுவப்பட்ட லிஸ்பன் கிரேக்கர்கள் மற்றும் கார்தீஜினியர்களால் கைப்பற்றப்பட்டது. இத்தாக்காவின் புகழ்பெற்ற மன்னரும் ஹோமரின் ஒடிஸியின் கதாநாயகனுமான யுலிஸஸுடன் அவரது பிறப்பை இணைக்கும் ஒரு மிகப் பழமையான புராணக்கதை லிஸ்பனில் உள்ளது, அவர் இத்தாக்காவிற்கு திரும்பும் பயணத்தின் போது அங்கு வந்ததகாக செய்திகள் கூறுகின்றன. ரோமானியப் பேரரசின் வீழ்ச்சியினால் கொடூரமான மக்களால் படையெடுக்கப்பட்டு, 711ஆம் ஆண்டில் அது முஸ்லிம்களால் கைப்பற்றப்படும் வரை, ஒலிசிபோ என்ற பெயருடன் ரோமன் லூசிடானியாவின் தலைநகராக இருந்தது. அதன்பின் அதனைக் கைப்பற்றியவர்கள், அல்-இஸ்புனா என்று பெயரிட்டு அழைத்தனர். ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகள் வரை அதாவது 1147ஆம் ஆண்டு வரை முதலாம் அல்போன்ஸ் என்பவரின் கீழ் இருந்தது. அதன்பின் 1255ஆம் ஆண்டில் ஏற்பட்ட உறுதியான மறுசீரமைப்புக்குப் பின் போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகராக மாறியது.
அட்லாண்டிக் பெருங்கடலின் முன்னோடிகளான போர்த்துகீசியர்கள், சமையல் பொருட்களுக்கான வர்த்தகத்தின் பெரும்பகுதியினை நாளடைவில் பெற்றனர். போர்துகீசியப் பேரரசு உலகின் முதல் காலனித்துவப் பேரரசாக மாறி கடல்கடந்த காலனித்துவத்தினை முதன்முதலில் கைப்பற்றியது. 1755 ஆம் ஆண்டு, நவம்பர் 1 ஆம் தேதி, வரலாற்றில் மிகவும் அழிவுகரமான மற்றும் கொடிய பூகம்பத்தால் நகரம் பாதிக்கப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் ஏறக்குறைய 9 ரிக்டர் அளவைக் கொண்ட நிலநடுக்கம், நகரின் பெரும்பகுதியை அழித்த ஒரு சுனாமி மற்றும் பரந்த தீ விபத்து ஆகியவற்றைத் தொடர்ந்து, அதன் புனரமைப்பு செயல்பாடுகள் கார்வால்ஹோவின் செபாஸ்டினோ ஜோஸ், மெலோ, பொம்பலின் மார்கிஸ் என்பவர்களின் தலைமையில் நடைபெற்றது.
19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில், லிஸ்பன் தொழில்துறை வளர்ச்சி மேலும் மேலும் விரிவடைந்தது. இன்று, ஐரோப்பாவின் மேற்குத் தலைநகரின் முக்கிய அடையாளங்களாக இடைக்கால சாவோ ஜார்ஜ் கோட்டை விளங்குகின்றது.
உலக இளையோர் தினத்தின் வரலாறு
2023 ஆம் ஆண்டு ஆகஸ்டு 2 முதல் 6 வரை நடக்க இருக்கும் 37ஆவது உலக இளையோர் தினக் கொண்டாட்டமானது, லுசிஸ்தானாவில் முதல் முறையாக நடக்க உள்ளது, 1989 இல் சாண்டியாகோ டி காம்போஸ்டெலா மற்றும் 2011 இல் மாட்ரிட்டில் நடந்த உலக இளைஞர் தினத்தை அடுத்து 2023ஆம் ஆண்டு ஐபீரியன் தீபகற்பத்தில் மூன்றாவது முறையாக நடக்க உள்ளது.
1986 ஆம் ஆண்டு இத்தாலி உரோமில் ‘‘நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள்‘‘ என்ற கருப்பொருளிலும், (1பேதுரு 3:15), 1987 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவின் பியூனஸ் அய்ரேஸில் ‘‘கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம்‘‘ (1யோவான் 4:16) என்ற கருப்பொருளிலும் நடைபெற்றது. அதன்படி 1989 ஆம் ஆண்டு ஸ்பெயின், சாண்டியாகோ டி காம்போஸ்டெலாவில், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை‘‘ என்ற கருப்பொருளிலும், (யோவான் 14:6) 1991 ஆம் ஆண்டு போலந்து நாட்டின் செஸ்டோகோவாவில், ‘‘கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம்.‘‘ (ரோமர் 8:15) என்ற கருப்பொருளிலும் சிறப்பிக்கப்பட்டது. இறுதியாக 2019 ஆம் ஆண்டு பனாமாவில் "இதோ ஆண்டவரின் அடிமை; உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்" (லூக்கா 1:38) என்ற கருப்பொருளில் சிறப்பிக்கப்பட்டது.
இளையோருக்கு எழுச்சியூட்டவும் ஆக்கமுள்ள பணிகள் செய்ய அவர்களுக்கு ஊக்கமூட்டவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ள இந்த 37ஆவது உலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள் நன்முறையில் நடக்கவும், திருத்தூதுப்பயணத்தினை திருத்தந்தை சிறப்பாக நிறைவு செய்யவும் தொடர்ந்து செபிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்