திருப்பலியை வாழ்வில் மையமாகக்கொண்டுச் செயல்பட
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருநற்கருணைக் கொண்டாட்டமாகிய திருப்பலியை ஒவ்வொரு கத்தோலிக்கரும் தங்கள் வாழ்வில் மையமாகக்கொண்டுச் செயல்பட இந்த ஜூலை மாதத்தில் செபிப்போம் என அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு மாதமும் அம்மாதத்திற்குரிய செபக் கருத்தை வெளியிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஜூலை மாதத்திற்கென வெளியிட்டுள்ள செபக்கருத்தில், மனித உறவுகளில் ஆழமான மாற்றத்தை உருவாக்கி இறைவனோடும் உடன் சகோதரர்களோடும் உரையாடலின் பாதையைத் திறக்கும் திரு நற்கருணைக் கொண்டாட்டத்தை கத்தோலிக்கர்கள் தங்கள் வாழ்வின் மையமாக வைக்க வேண்டும் என செபிப்போம் என விண்ணப்பித்துள்ளார்.
திருப்பலியின் துவக்கத்தில் நாம் எப்படி இருந்தோமோ அப்படியே திருப்பலியின் இறுதியிலும் இருந்தோமானால் அதில் எங்கோ தவறு உள்ளது, ஏனெனில் திருநற்கருணையில் பிரசன்னமாயிருக்கும் இயேசு மாற்றத்தைக் கொணர்பவர் என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பலியில் தன்னையே நமக்காகக் கையளிக்கும் இயேசு, நம் வாழ்வு ஊட்டம்பெற்று நம் வழியாக நம் சகோதரர் சகோதரிகளின் வாழ்வும் ஊட்டம் பெறவேண்டும் என விரும்புகிறார், ஏனெனில் உயிர்த்த கிறிஸ்துவுடன் நாம் கொள்ளும் இந்த சந்திப்பு, அவர் நமக்கு கற்பித்ததுபோல் நம்மை இவ்வுலகிற்கு திறக்க அழைப்புவிடுக்கிறது என மேலும் தன் ஜூலை இறைவேண்டல் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு முறை நாம் திருப்பலியில் பங்குபெறும்போதும் இயேசு நம்மை அணுகி, அவர் நம்மை அன்புகூர்வதுபோல் நாமும் பிறரை அன்புகூரவேண்டுமென்பதற்கான பலத்தை வழங்குகிறார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு நாம் அன்புகூர்வதன் வழி நாம் பிறரை சந்திக்கவும், அன்புடன் பிறரை நோக்கி நம்மைத் திறக்கவும் இறைவன் உதவுகிறார் என மேலும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்