மறுவாழ்விற்கானப் பாதைகளை அடையாளம் காண முயலுதல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஆக்கமுள்ள பணிகளால் கல்வி, சிகிச்சை மற்றும் மறுவாழ்விற்கானப் பாதைகளை அடையாளம் காண முயலவேண்டும் என்றும், போதைப்பொருளைத் தடுத்தல், எதிர்த்துப் போராடுதல், மாற்று கலாச்சார மாதிரிகளை ஊக்குவித்தல், குறிப்பாக இளையோர், வாழ்வதற்கான காரணங்களைத் தேட ஊக்குவித்தல் போன்றவைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 28 திங்கள் கிழமை முதல் 31 வியாழன் வரை உரோமில், Tossicologi Forensi என்னும் தடயவியல் நச்சுவியல் துறை தொடர்புடைய இயக்கத்தால் நடத்தப்படும் 60வது அனைத்துலக மாநாட்டில் பங்குகொள்ளும் உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் அருகில் வந்து நம் காயங்களைக் குணப்படுத்திய இயேசு போல, நாமும் போதைப்பொருள் அடிமைத்தனத்தில் துன்புறுபவர்களுக்கு உதவ வேண்டும் என்றும், பலவீனம் மற்றும் வேதனையின் சூழ்நிலைகளுக்கு முன் நிற்க, தனிமை மற்றும் வேதனையின் அழுகைக்கு செவிசாய்க்க, நாம் அழைக்கப்படுகிறோம் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
போதைப்பழக்கத்துக்கு அடிமையாகுபவர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னும் உறுதியான அனுபவங்கள், தனிமையின் கதைகள், வேறுபாடு, ஒதுக்கப்படுதல், ஒருங்கிணைப்பு இல்லாமை ஆகியவை உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், இவற்றை நாம் மறந்துவிடவோ இச்சூழ்நிலைகளில் அலட்சியமாக இருக்கவோ முடியாது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
தொழில் வல்லுநர்கள், இளம் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வுகள், கலாச்சார விழிப்புணர்வு நிகழ்வுகள், போதைப் பழக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆகியவற்றிற்காக அவ்வியக்கத்தார் அளித்த நேரம், அர்ப்பணம், மற்றும் ஆற்றலுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை அவர்கள், போதைப்பொருள் மற்றும் சைக்கோட்ரோபிக் போதைப்பொருள் பயன்பாடு எச்சரிக்கையையும் கவலையையும் எழுப்புகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புதியவற்றுடன் தன்னை அளவிட வேண்டிய அவசியம் இருப்பதால் இளையோர், புதிய அனுபவங்களைத் தேடுதல், தெரியாததை ஆராயும் விருப்பம், ஒதுக்கப்பட்ட உணர்வு, நண்பர்களுடன் பழக வேண்டிய கட்டாயம் ஆகியவற்றினால் போதைபொருள் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர் என்றும் இவை அனைத்தும் மிகவும் ஆபத்தான காரணிகளாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
போட்டி மற்றும் விளையாட்டுத் துறைகளில் ஊக்கமருந்துப் பொருட்களின் பரவல் அதிகரிப்பதை சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், பல இளைஞர்கள் போதைப்பொருள் உட்கொள்வதினால் மனவேதனையிலிருந்து விடுபடுவது போன்ற மாயையையும், மயக்கத்தின் வீண் நம்பிக்கையையும் கொண்டிருக்கின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்