உலக இளையோர் தினக் கொண்டாட்ட துவக்கம்

21 நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 50 இளையோர், பாடகர் குழு மற்றும் இசைக்குழுக்கள் போர்த்துகீசிய கலாச்சாரத்தை தங்கள் நடனம் மற்றும் பாடல்களில் வெளிப்படுத்தினர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

லிஸ்பன் உள்ளூர் நேரம் மாலை 5.45 மணிக்கு இந்திய இலங்கை நேரம் இரவு 10.15 மணிக்கு பூங்காவை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாடல்களாலும் இளையோரின் ஆரவாரத்தாலும் மகிழ்வுடன் வரவேற்கப்பட்டார். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இலட்சக்கணக்கான இளையோர் பல வண்ண நிறங்களில் உடையணிந்து கொடிகளை அசைத்து ஆடல் மற்றும் பாடல்களுடன் திருத்தந்தையை வரவேற்றனர். நம்பிக்கையின் கொண்டாட்டமாகவும், பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தை இணைக்கும் திருஅவையின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை நிரூபிப்பதாகவும் இந்நிகழ்வு இருந்தது. லிஸ்பன் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தையின் வரவேற்புடன் நிகழ்வு ஆரம்பமானது.

21 நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 50 இளையோர், பாடகர் குழு மற்றும் இசைக்குழுக்கள் போர்த்துகீசிய கலாச்சாரத்தை தங்கள் நடனம் மற்றும் பாடல்களில் வெளிப்படுத்தினர். இந்த இளையோர் தினக் கொண்டாட்டத் தொடக்க விழாவில் குறிப்பிடத்தக்க வகையில் கூடுதலாக, சைகை மொழியில் இசையின் பாடல் வரிகளின் நடன நிகழ்ச்சி, செவித்திறன் குறைந்தவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இளையோர் எழுதிய கடிதங்கள் அனைத்தும் ஒரு பெட்டியில் போடப்பட்டு அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதை இளையோர் ஒரு சிறு கலைநிகழ்ச்சியாக நிகழ்த்தினர். உலகெங்கிலும் உள்ள இளையோரின் கேள்விகள் மற்றும் கவலைகளை அக்கடிதங்கள் எடுத்துக்காட்டின. பலர் தங்கள் குடும்பங்கள், நாடுகள் மற்றும் உள்ளூர் தலத்திருஅவைகளுக்கான ஆலோசனைகளையும் சிறப்பு செபத்தையும் திருத்தந்தையிடம் கேட்டனர். இறுதியாக அக்கடிதங்களை அருள்சகோதரி ஒருவர் சேகரித்து திருத்தந்தையிடம் கையளித்தார். உலக இளையோர் தினத்தில் பங்கேற்கும் அனைத்து நாடுகளை அடையாளப்படுத்தும் விதமாக அனைத்து நாட்டுக் கொடிகளின் அணிவகுப்புடன் வரவேற்பு விழா தொடர்ந்தது. இந்நிகழ்விற்காக ஹெபர் மார்க்வெஸ் இயற்றிய பாடல், இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையைக் கொண்டாடும் ஆர்வத்தை  எடுத்துக்காட்டியது. அதன்பின் உலக இளையோர் தின திருப்பயணச் சிலுவையானது கொடிகளின் அணிவகுப்புக்கு மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. எழுபத்திரண்டு திருத்தூதர்களை  இயேசு அனுப்பிய புனித லூக்கா நற்செய்திப் பகுதியை மையமாகக் கொண்ட இறைவார்த்தை வழிபாட்டு முறை, வரவேற்பு விழாவின் சிறப்பம்சமாகத் திகழ்ந்தது. லூக்கா நற்செய்தியின் பிரிவு 10: 1-9 வரையுள்ள இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை தனது திருத்தூதுப்பயணத்தின் இரண்டாம் நாளின் மூன்றாம் உரையைத் துவக்கினார்.

திருத்தந்தையின் உரையைத் தொடர்ந்து, உலக இளையோர் தினக் கொண்டாட்டத்தின் பாதுகாவலர்களான திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால், புனித தொன்போஸ்கோ, அருளாளர் பியர் ஜியோர்ஜியோ ஃப்ராசாத்தி, அருளாளர் கார்லோஸ் அகுட்டிஸ், போர்த்துகீசிய புனிதர்கள், புனித பதுவை அந்தோணியார் போன்றவர்களின் அருளை வேண்டும் விதமாக மன்றாட்டு மாலை பாடப்பட்டது.

பாடல், நடனம் என மகிழ்ச்சி வெள்ளத்தாலும் ஆர்ப்பரிப்பின் ஒலியாலும் நிறைந்திருந்த இளையோருக்கு திருத்தந்தை தனது அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார். இறுதியாக நான் உங்களை அனுப்புகிறேன். விண்ணரசு உங்கள் அருகில் உள்ளது என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளுடன் நடனம் ஆடி இளையோர் அனைவரையும் மகிழ்வித்தனர். இந்த நிகழ்ச்சி வழியாக இளையோர் தினக்கொண்டாட்டங்களை துவக்கிவைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோருக்கும் கூடியிருந்த அவைனவருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து விடைபெற்று அங்கிருந்து திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்தார். லிஸ்பன் உள்ளூர் நேரம் மாலை 7.30 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் நள்ளிரவு 12.00 மணிக்கு  திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்து இரவு உணவுக்குப் பின் நித்திரைக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போர்த்துக்கல் கத்தோலிக்க பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்பு, Scholas Occurrentes இல்ல இளையோர் சந்திப்பு, மன்னர் ஏழாம் எட்வர்ட் பூங்காவில் இளையோர் சந்திப்பு என தனது இரண்டாம் நாள் திருத்தூதுப் பயண நிகழ்வினை இனிதே நிறைவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2023, 12:30