பாத்திமா நகர் தூய செபமாலை அன்னை திருத்தலம்

இரண்டு சிறார் திருத்தந்தைக்கு மலர்களை அளிக்க அதை அவர் அன்னை மரியின் திருஉருவத்தின் முன் அர்ப்பணித்தார். சிலுவை அடையாளம் வரைந்து செபமாலையைத் துவக்கி வைக்க மக்கள் அனைவரும் பக்தியுடன் பங்கேற்றனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

லெய்ரியா-பாத்திமா மறைமாவட்டம் 1545ஆம் ஆண்டு உருவாகி 1881ஆம் ஆண்டு அதன் செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டு 1918 ஆம் ஆண்டு ஜனவரி 17இல் மீண்டும் நிறுவப்பட்டது; 1,700 சதுர கிமீ பரப்பளவில் 2,89,898 மக்கள் தொகையில் 2,48,412 கத்தோலிக்கர்களைக் கொண்டுள்ளது. 73 பங்குத்தளங்கள், 86 மறைமாவட்ட அருள்பணியாளர்கள், 69 இதர அருள்பணியாளர்கள், இரண்டு தத்துவஇயல் மற்றும் இறையியல் அருள்பணித்துவ மாணவர்கள், 81 ஆண் துறவறத்தார், 600 பெண் துறவறத்தார், 49 கல்வி நிறுவனங்கள், 65 தொண்டு நிறுவனங்கள் உள்ளன. மேலும், கடந்த ஆண்டில் மட்டும் 1,420 பேர் திருமுழுக்கு அருளடையாளத்தைப் பெற்றுள்ளனர். லெய்ரியா-பாத்திமாவின் ஆயர், திருஇருதய சபையைச் சார்ந்த ஜோஸ் ஓர்னெலாஸ் கார்வால்ஹோ ஆவார். 1954 ஜனவரி 5  அன்று ஃபஞ்சலின் மறைமாவட்டமான போர்தோ தா குரூஸில் பிறந்த இவர், 1981 ஆகஸ்ட் 9இல் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டு 2015, ஆகஸ்ட் 24 அன்று Setúbal ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 அக்டோபர் 25, அன்று Setúbal ஆயராக பொறுப்பேற்ற இவர், 2022ஆம் ஆண்டு லெய்ரியா-பாத்திமா மறைமாவட்டத்திற்கு மாற்றப்பட்டு இங்கு பணியாற்றுகின்றார்.

பாத்திமா நகர் தூய செபமாலை அன்னை திருத்தலம் 

இத்திருத்தலம் உருவான இவ்விடத்தில் 917 மே 13, அன்று லூசியா, பிரான்செஸ்கோ, ஜெசிந்தா ஆகிய மூன்று சிறார்களும் "ஒரு குட்டிச் சுவரை உருவாக்கி" விளையாடிக் கொண்டிருந்த போது, வானில் ​​திடீரென மின்னலைப் போன்ற வெளிச்சத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த அச்சிறார், மழையிலிருந்து தங்களது மந்தைகளைக் காக்க அவற்றைக் கூட்டிச் சேர்த்து இல்லத்திற்குத் திரும்ப எண்ணினர். அந்த இடத்திலேயே தற்போது இத்திருத்தலம் எழுப்பப்பட்டுள்ளது. 1928ஆம் ஆண்டு மே 13 அன்று எவோராவின் பேராயரால் இத்திருத்தலத்திற்கான அடிக்கல் ஆசீர்வதிக்கப்பட்டு, 1953ஆம் ஆண்டு அக்டோபர் 7இல் அர்ப்பணிக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் அவர்களின் Luce Superna என்னும் திருப்பீட ஆவணத்தின்படி திருத்தலமாக மாற்றப்பட்டது. 70.5 மீட்டர் நீளமும் 37மீ. அகலமும் கொண்டு இப்பகுதியின் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்ட இத்திருத்தலக் கட்டிடம் "கடலின் வெள்ளை" என்று அழைக்கப்படுகின்றது. மணி கோபுரமானது 65 மீ உயரத்தில் 7 டன் வெண்கல கிரீடத்தையும் ஒரு ஒளிரும் சிலுவையையும் கொண்டுள்ளது. கரிலோன் எனப்படும் இசைப்பெட்டியானது 62 மணிகளைக் கொண்டுள்ளது. மணி கோபுரத்தின் முன்புறத்தில் எங்கள் செபமாலை அன்னையே என்று வத்திக்கான் பளிங்குக் கற்களால் எழுதப்பட்டுள்ளது. ஆலயத்தின் நுழைவாயிலும் இவ்வாறு பொறிக்கப்பட்டுள்ளது. மணி கோபுரத்தின் முக்கிய இடத்தில் அமைந்துள்ள திருஇருதய அன்னை மரியாவின் சிலை, அமெரிக்க அருள்பணியாளரும் கலைஞருமான தாமஸ் மெக்லின்னின் படைப்பு ஆகும். சகோதரி லூசியாவின் அறிவுறுத்தலின்படி செதுக்கப்பட்டு, அமெரிக்க கத்தோலிக்கர்களால் வழங்கப்பட்ட இச்சிலையானது 1958 மே 13, அன்று ஆசீர்வதிக்கப்பட்டது.

பாத்திமா உள்ளூர் நேரம் காலை 9.15 மணிக்கு இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 1.45 மணிக்கு  இத்திருத்தலத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திறந்த காரில் வலம் வந்து திருப்பயணிகளைச் சந்தித்தார். அதன்பின் சிற்றாலயத்தில் நுழைந்த திருத்தந்தை சிறிது நேரம் அமைதியில் அன்னை மரியின் திருஉருவத்தின் முன் செபித்தார். இரண்டு சிறார் திருத்தந்தைக்கு மலர்களை அளிக்க அதை அவர் அன்னை மரியின் திரு உருவத்தின் முன் அர்ப்பணித்தார். சிலுவை அடையாளம் வரைந்து செபமாலையைத் துவக்கி வைக்க மக்கள் அனைவரும் பக்தியுடன் பங்கேற்றனர். திருச்செபமாலையின் மறைபொருள்கள் பல்வேறு மொழிகளில் எடுத்துரைக்கப்பட்டன. அன்னைமரியாவின் மன்றாட்டு மாலைக்குப் பின் லெய்ரா-பத்திமா மறைமாவட்ட ஆயர் திருத்தந்தையை வரவேற்றார். அதனைத்தொடர்ந்து திருத்தந்தையின் உரை ஆரம்பானது.

 தனது உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பயணிகள் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார். இறுதிப்பாடலுக்குப் பின் திருத்தலத்திற்கு வந்திருந்த உடல் நலமற்ற இளையோர் சிலரை சந்தித்து, 4.5 கி.மீ. தூரம் காரில் பயணித்து பாத்திமா விமானத்தளத்திற்கு வந்தடைந்தார்.

பாத்திமா உள்ளூர் நேரம் காலை 10.45 மனிக்கு இந்திய இலங்கை  நேரம் பிற்பகல் 3.15 மணிக்கு பாத்திமாவிலிருந்து கிளம்பிய திருத்தந்தை ஹெல்காப்டரில் பயணித்து மீண்டும் லிஸ்பன் விமானத்தளம் வந்தடைந்தார். அதன்பின் அங்கிருந்து 8.9 கிமீ தூரம் காரில் பயணித்து திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மதிய உணவிற்குப் பின் சற்று இளைப்பாறினார்.

ஆகஸ்ட் 5, சனிக்கிழமை காலை லிஸ்பனில் இருந்து பாத்திமா அன்னை திருத்தலம் சென்று செபமாலை செபித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலையில் லிஸ்பனில் உள்ள ஜான் டி பிரிட்டோ கல்லூரியில் இயேசு சபை அங்கத்தினர்களை சந்தித்தபின், தேஜோ பூங்காவில் இளையோருடன் இணைந்து இரவு செபத்தில் பங்கேற்று தனது திருப்பயணத்தின் நான்காம் நாளை நிறைவு செய்ய உள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2023, 12:06