டோரத்தி டே அவர்களின் புத்தகம் டோரத்தி டே அவர்களின் புத்தகம் 

கிறிஸ்தவ நம்பிக்கையோடு பணியாற்றியவர் டோரத்தி டே

கத்தோலிக்க தொழிலாளர் இயக்கத்தின் நிறுவனர், பத்திரிகையாளர், எழுத்தாளர், அமைதிக்கான ஆர்வலர், ஏழைகளின் நீதி மற்றும் சமூக நீதிக்காக போராடியவர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நற்செயல்களில் இருந்து வழிந்தோடும் இரக்கம், சான்று வாழ்விலிருந்து வழிந்தோடும் அழகு, துல்லியமாக வெளிப்படுத்தப்படும் அன்பு ஆகியவற்றை உள்ளடக்கிய கிறிஸ்தவ நம்பிக்கையோடு பணியாற்றியவர் டோரத்தி டே என்று குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 20 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் நூலகத்தாரால் வெளியிடப்பட்ட டோரத்தி டே அவர்களின் ‘‘ஏழைகளின் வழியாக இறைவனைக் கண்டேன்‘‘ என்ற புத்தகத்திற்கு எழுதியுள்ள முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கத்தோலிக்க தொழிலாளர் இயக்கத்தின் நிறுவனர், பத்திரிகையாளர், எழுத்தாளர், அமைதிக்கான ஆர்வலர், ஏழைகள் மற்றும்  சமூக நீதிக்காகப் போராடியவர், என நினைவுகூரப்படும் டோரத்தி டே அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் இப்புத்தகமானது கடவுள் நம்பிக்கையை மீண்டும் கண்டுபிடிக்க வழிவகுக்கின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

தேவைக்கு அதிகமாக வைத்திருக்கும் முதலாளித்துவ ஆன்மாக்களை அல்ல மாறாக இல்லாமையில் வாடும் அமைதியற்ற இதயங்களுக்காக இறைவன் ஏங்குகிறார் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் நமக்கு எவ்வாறு தெய்வீக அன்பின் நெருப்பை வழங்குகிறார் என்பதை இப்புத்தகம் எடுத்துரைக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

​​கத்தோலிக்க திருஅவையின் தெய்வீக தன்மையை கருத்தில் கொண்டு, தலத்திருஅவை உறுப்பினர்களின் பலவீனங்களை நேர்மையான மற்றும் அறிவொளி மனப்பான்மையுடன் அங்கீகரித்து ஏற்று வாழ்ந்தவர் டோரத்தி என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூக நீதி மற்றும் மக்களின் உரிமைகளுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் அவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடவுளின் அன்பை வெளிப்படுத்தும் பணியாளர், அமைதியின் ஆர்வலர், பத்திரிகையாளர் என பல விதங்களில் மற்றவர்களுக்கு உதவிய டோரத்தி டே தன் உறுதியான வாழ்க்கை வழியாக கடவுளது இதயத்தைத் தொட்டார் என்றும், நீதிக்கான அவரது போராட்டம் மனிதகுலம் பற்றிய கடவுளின் கனவை நனவாக்க ஒரு வழியை வழங்குகிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்பிக்கையாளர், நம்பிக்கையற்றவர் ஆகிய அனைவரும் அவரவர் மாண்பினை மேம்படுத்துவதில் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று வலியுருத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகவும் கைவிடப்பட்ட நபர்களை அன்பு செய்து பணியாற்றவும் நாம் அழைக்கப்படுகின்றோம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2023, 14:51